SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவலாய் வருவான் கச மாடன்

2019-03-12@ 16:10:12

நம்ம ஊரு சாமிகள் - புன்னைச் சாத்தான்குறிச்சி, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேல ஆத்தூரைச் சேர்ந்த பெருமாள்சாமி, புளி, உப்பு முதலான பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய வியாபாரத்திற்கு பக்கபலமாக இருந்தார், இவரது மனைவி சுயம்புகனி.  வசிக்க சொந்தமாக ஓட்டு வீடும், வாழ்வாதாரத்திற்கு சிறிய அளவிலான புளியந்தோப்பு ஒன்றும் வைத்திருந்த பெருமாள்சாமி தனக்கு பிறந்தது மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால் அதை எண்ணி அடிக்கடி வருத்தப்பட்டுக் கொள்வார். 49 வயதான பெருமாள்சாமி ஒரு முறை உப்பு கொள்முதல் செய்ய உப்பளத்துக்கு வரும்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மராந்தலை என்னும் இடத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த வீரய்யன், பெருமாள்சாமியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றான். நல்ல முறையில் அவரை கவனித்த வீரய்யன். தனது ஊரான புன்னைக்காயலில் இருந்து மேல ஆத்தூருக்கு சைக்கிளில், பெருமாள்சாமியை வைத்து அழைத்துச் சென்றான்.

அவரை இறக்கிவிட்ட பின் புறப்பட தயாரானபோது பெருமாள்சாமி, வீரய்யனை வீட்டுக்கு அழைத்தார். அப்போது “வெறுங்கையோடு நான் வந்திருக்கேனே” என்று மறுத்த அவனை. ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா வாங்க’’ என்று அன்போடு அழைத்தார். வீரய்யன், ‘‘ஐயா, நீங்க போய் என்னை வாங்க, போங்கன்னு மருவாதியெல்லாம் கொடுத்து பேசாதீக, சும்மா தம்பின்னு சொல்லுங்க அது போதும் அய்யா’’ என்றான். ‘‘நீ என்னப்பா அப்படி சொல்லிப்புட்ட, மூச்சடைச்சி கிடந்த என்னை தூக்கிட்டுப்போய், என் உசுர காப்பாத்தியிருக்க, என் சாமி தாம்பா, உன் ரூபத்தில வந்திருக்கு’’ என்று அவர் உருகிப்போய் கூறியதும் வீரய்யன் மனமகிழந்து வாரேன் அய்யா என்று விடைப்பெற்றுச் சென்றான். மறு வாரம் அறுக்குலா, சீலா மீன்களுடன் பெருமாள்சாமி வீட்டுக்கு வருகிறான். அங்கு அவரது மூத்த மகள் வனப்பேச்சி, தனது தோழிகளுடன் தாயம் ஆடிக்கொண்டிருந்தாள். இதனால் வீட்டுக்கு வெளியே நின்ற வீரய்யன், அய்யா என்று குரல் கொடுத்தான். அதைக்கேட்டு எழுந்திருக்க முயன்ற வனப்பேச்சியை, அவளது தோழி பூரணம் தடுத்தாள்.

‘‘பிச்சை கேட்டு எவனாவது வந்திருப்பான். இரண்டு முறை சத்தம் போட்டுட்டு போயிருவான். நீ தாயகட்டைய உருட்டு’’ என்றாள். 2 முறை குரல் கொடுத்த வீரய்யன், இனியும் சத்தம் கொடுத்தால் அய்யா தொந்தரவு பண்ணுறதா நினைப்பாங்க எனக்கருதி, கொண்டு வந்த மீன்களோடு, முற்றத்தில் நின்ற பூவரசம் மரத்தின் நிழலில் அமர்ந்துகொண்டான். தாயக்கட்டையை உருட்டிக்கொண்டிருந்த வனப்பேச்சி, ‘‘யேய் நீங்க ஆடுங்கடி, அடுப்பில உலை கொதிக்குது அரிசிய கழுவி போட்டுட்டு வாரேன்’’ என்றபடி எழுந்து அரிசி போட தயாரானாள். அப்போது வீட்டு வாசல் அருகே போய் குரல் கொடுத்தால் அய்யா வருவார் என்று எண்ணி, வீட்டு வாசல் நோக்கி வருகிறான் வீரய்யன். அப்போது அரிசி கழுவிய தண்ணீரை வீட்டு திண்ணையில் நின்றபடி முற்றத்தை நோக்கி கொட்ட அந்த தண்ணீரில், வீரய்யன் முழுதும் நனைந்து விட்டான்.

உடனே பாத்திரத்தை கீழே வைத்துக்கொண்டு, இரண்டு கைகளையும் உதறுகிறாள் வனப்பேச்சி. தவறை உணர்ந்து நாணத்துடன் பேசினாள். ‘‘அய்யய்யோ, என்னை மன்னிச்சிடுங்க, நான் பார்க்காம பண்ணிப்புட்டேன். யாரு, நீங்க, என்ன வேணும்?’’ என்று கேட்டாள். ‘‘பெருமாள்சாமி அய்யாவ பார்க்க வந்திருக்கேன்’’ என்றான் வீரய்யன். ‘‘அவுக வியாபாரத்துக்கு போயிருக்காவ, எங்க அப்பச்சிதேன், ஏதாவது சொல்லணுமா!’’ என்று கேட்ட பேச்சியிடம்,
‘‘இந்த மீனுகள எடுத்து வீட்டுல கொண்டு போய் வைங்க, புன்னைக்காயலிலிருந்து வந்த வீரய்யன் கொடுத்தான்னு சொல்லுங்க.’’‘‘அடி, ஆத்தே, நான் மீனெல்லாம் வாங்க மாட்டேன். வீட்டுல ஆத்தாவும் இல்லை. உங்க சங்காத்தமெல்லாம் எங்க அப்பச்சியோடு வச்சிக்குங்க’’ என்று முகத்துக்கு நேரா பேசிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள். மீன்களுடன் திரும்பிச் சென்றான் வீரய்யன். மாலையில் வீடு திரும்பிய தகப்பனிடம் பகலில் நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்தாள் வனப்பேச்சி. ‘‘ஏன் ஆத்தா, இப்படி பண்ணிப்புட்ட, அந்த பையன் உங்க அப்பன் மேல வச்சிருந்த பிரியத்தில, மீன் கொண்டாந்திருப்பான். அத போய் வேணாமுன்னு சொல்லி புட்டியே ஆத்தா, அந்த பையன் மனசு என்ன பாடு பட்டுருக்கும்’’ என்றார்.

உடனே குறுக்கிட்ட பெருமாள் சாமியின் மனைவி சுயம்புகனி, ‘‘நம்ம புள்ள செஞ்சது சரிதேன்’’ என்றாள். “என்ன கனி, நீ புத்தி கெட்டு பேசுதே, 7 மைல் தூரம் மீன் சுமந்து கொண்டு வந்திருக்கான். அவனை மூஞ்சில அடிச்சது மாதிரி பேசி அனுப்பினது பெரிய சாமர்த்தியமோ.?” “நீருதான் புத்தி இல்லாம பேசுறது. வயசு வந்த புள்ள, அவ போய் வந்தவன் எவன்னே தெரியாது. அவன் கொடுத்ததை வாங்கினா நல்லாவா இருக்கும். அவன் என்ன நம்ம சாதியா, சனமா?” என்று கடிந்தாள். உடனே “சரி, சரி விடுங்க என்னால நீங்க சண்டை போடாதீங்க” என்று கூறினாள் வனப்பேச்சி. இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போலிருந்தார்கள் வனப்பேச்சியின் தங்கைகள். சண்டைக்கு பின் ஏற்பட்ட அமைதியின்போது, பேசிய பெருமாள்சாமி, வீரய்யனின் பெருமைகளையும், திறமையையும் பற்றி கூறினார். அதைக்கேட்ட வனப்பேச்சி தனக்குள் வீரய்யன் மேல் ஒரு வித அன்பை உருவாக்கி கொண்டாள். தனக்குள்ளே மோகத்தை ஏற்படுத்திக் கொண்டாள். 8 நாட்கள் கடந்து மீண்டும் வந்த வீரய்யனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர் பெருமாள்சாமி குடும்பத்தினர். ஆதரவு யாருமின்றி தனது தாய் வழி பாட்டியின் கவனிப்பில் வளர்ந்த வீரய்யனுக்கு பெருமாள் சாமியின் குடும்பத்தினர் காட்டிய அன்பும், அரவணைப்பும் அவனை புது உலகத்திற்கே அழைத்துச் சென்றதாக உணர்ந்தான். அவன் அந்த குடும்பத்தில் ஒருவனாக மாறினான்.

ஒருநாள் அவங்க ஊர் ஆலய விழாவில் பெண்களுக்கான அழகு மற்றும் பொட்டு வகைகளை வாங்கி வந்து வனப்பேச்சியிடமும், அவளது தங்கைகளிடமும் கொடுத்தான். வனப்பேச்சியை தவிர மற்ற இருவரையும் தங்கை என்றே அழைத்தான் வீரய்யன். இது பேச்சியின் மனதில் காதலை ஏற்படுத்தியது.  அந்த காலக்கட்டத்தில் பாண்டிய மன்னன் அரண்மனை கோட்டை அகழியிலிருந்த முதலைகளுள் ஒன்று நீர் வரும் வாய்க்கால் வழியாக அப்பகுதியிலுள்ள பொருமாள் கோயில் தெப்பக்குளத்திற்குள் போய்விட்டது. இதையறிந்தவர்கள் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் பலரை அனுப்பியும் முதலையைப் பிடிக்க முடியவில்லை. உடனே மன்னன் கோயில் தெப்பக்குளத்திலுள்ள முதலையைப் பிடிப்பவர்களுக்கு ஆயிரம் பொன்னும் நிலமும் சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவித்தான். இதை முரசறைவோன் கிராமம் கிராமமாக சென்று முரசறைந்தான். அப்போது வீட்டில் இருந்தபடி கேட்டுக்கொண்டிருந்த பெருமாள் சாமி.  

மறுநாள் காலை விடிந்தும், விடியாத நேரம் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக புன்னைகாயலுக்கு ஓட்டிச்சென்றார். வீட்டில் வீரய்யனின் பாட்டி மட்டும் இருந்தாள். ‘‘ஐயா, காலங்காத்தால இம்புட்டு வழி வந்திருக்கீக, என்னய்யா, என்னாச்சு’’ என்று பதறியவளிடம், ‘‘ஒண்ணுமில்லம்மா, உப்பளத்துக்கு வந்தேன். அப்படியே வீரய்யனை பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன் என்றார்.’’ கண்ணுக்கெட்டுற தூரத்துல கட்டுமரங்க தெரியுதுல, அதுலதேன் அவனும் ஒருத்தனா இருப்பான் என்று குடிசையிலிருந்து வெளியே வந்த வீரய்யனின் பாட்டி, கடலை நோக்கி பார்த்தபடி கூறினாள். சற்று நேரத்தில் வந்த வீரய்யன், பெருமாள் சாமியை பார்த்ததும் மகிழ்ச்சியும், திகைப்பும் கொண்டு விழிகளால் வினா தொடுத்தார். வீரய்யனிடம், பெருமாள்சாமி, மன்னன் செய்த அறிவிப்பைப் பற்றி கூறினார். உடனே சத்தமாக சிரித்த வீரய்யன். ‘‘இதுக்கா இம்புட்டு தொலவு வந்தீக, என்று கேட்க, ‘‘என்னப்பா நான் செய்யுறது? 3 பொம்பள பிள்ளைய பெத்திருக்கேன். நகை, நட்டு போடாம எவன் கட்டிட்டு போவான். உனக்கென்ன நீ தனிக்கட்ட என்று சொன்னதும். சரிங்க அண்ணாச்சி, உமக்காக இல்லாட்டியும், உம்ம புள்ளைங்களுக்காவது முதலைய நான் புடிக்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.

அதன்படி பெருமாள் கோயில் தெப்பகுளத்திலிருந்த முதலையை பிடித்து அரண்மனை அகழியில் கொண்டு விட்டான். மன்னனும் அறிவித்த பரிசுத் தொகையினையும், நிலத்திற்கு உரிய பட்டயத்தையும் வீரய்யன் நாளை மறுநாள் அரண்மனையில் நடக்கும் விழாவில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தான். மகிழ்ச்சியில் திளைத்த பெருமாள் சாமி, வீரய்யனை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘‘நீ என் குலசாமிடா, என் புள்ளைங்களை கரை சேர்க்க, பெரும் உதவி செஞ்ச, உன்னை கோயில் கட்டி கும்பிடலாம்டா என்று கூற, பதிலுரைத்த வீரய்யன். ‘‘இது என்ன அண்ணாச்சி, உங்களுக்காக என் உசுரயே தருவேன் என்று கூறினான். வீரய்யனை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். கிடா வெட்டி சிறப்பு விருந்து வைத்தார். விருந்துண்ட பின் வீரய்யன், வனப்பேச்சி மற்றும் அவளது தங்கையர்களோடு தாயம் ஆடுகிறான். வீட்டிற்குள் மனைவி சுயம்புகனியுடன் மகள்களின் எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டிருந்த பெருமாள்சாமி திடீரென வெளியே வருகிறார். அப்போது திண்ணையில் மற்ற மகள்கள் இருக்க, வனப்பேச்சியும், வீரய்யனையும் காணவில்லை.

பதட்டத்துடன் வீட்டிற்கு பின்னால் இருந்த ஓடைக்கரை அருகே வந்தார். அங்கே நின்றிருந்த ஆலமரத்துக்கு கீழே, அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. வீரய்யன் முதலையை பிடித்ததற்கு பரிசு கேட்க, வனப்பேச்சி அவனது உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். அதைக்கண்ட பெருமாள்சாமி ஆத்திரம் கொண்டு வீச்சருவாளால் வீரய்யனையும், மகள் வனப்பேச்சியையும் வெட்டி வீழ்த்தினார். வெட்டிய பின் பேசினார் பெருமாள் சாமி, ‘‘நாயே, உன்ன என் உடன் புறப்புபோல நினைச்சி வூட்டுக்கு கூட்டியாந்து உறவாடினதுக்கு, என் புள்ளகூடவே உறங்க பாக்குறியோ.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணி புட்டியல. நீயே இப்படி பண்ணினா, எவனல நம்புறது இனி.’’ என்று ஆத்திரம் பொங்க முணுமுணுத்தார். வீரய்யனின் முண்டம் விட்டு பிரிந்த தலை பேசியது, “ஐயா, என்னை மன்னிச்சிருங்க, பருவக்கோளாறுல, பேச்சி காட்டுன அன்புல  நான் தப்பு பண்ணிட்டேன்.  

ஆனாலும் உங்க மக மேல நான் வச்சிருந்த பிரியத்த விட, உம்ம மேல வச்சிருக்கிற மருவாதி ரெம்ப அதிகமய்யா, உசுரு போற சமயத்துல யாரும் பொய் பேசமாட்டங்க, அதால இப்பவும் சொல்லுதேன். இந்த முரட்டுபய, மதிக்கிற மனுஷன் நீருதாய்யா. என்னை வெட்டியதுக்கு நான் வருத்தப்படல, என்னை எப்போதும் போல மதிக்கணும் அய்யா,   நீங்க என்னை எப்பவும் சொல்லுவேளே, உங்க சாமி, சாமின்னு. அத உண்மையாக்கிடுங்க. நான் சின்னவன் தப்பு பண்ணிட்டேன். நீ பெரியவன் சொன்னத செஞ்சு காட்டு. எனக்கு கோயில் கட்டு.” என்று கூறியதும் மூச்சடங்கியது. ஓடையில் இறங்கி தனது மேலிருந்த ரத்த கறைகளை கழுவிக்கொண்டிருக்கும்போது பெருமாள் சாமியின் காலருகே, வீரய்யன் தலை மிதந்து வருகிறது. அப்போதும் முணுமுணுக்கிறார் பெருமாள் சாமி, இவ்வளவும் பண்ணின உனக்கு கோயில் ஒரு கேடா? என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு கிளம்புகிறார். இந்த ஓடை தண்ணீர் அப்பகுதியில் உள்ள கசத்தில் (ஆழமான நீர்நிலை) போய் சேருகிறது. அந்த தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட வீரய்யன், வனப்பேச்சி உடல்களும் அந்த கசத்தில் போய் கலந்து அகழியில் ஒன்றாக மூழ்கியது. இதற்கு முன் அந்த கசத்தில் பல பேர் விழுந்து இறந்திருக்கிறார்கள்.

தற்கொலையும் செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு தற்கொலை செய்ய சென்றவர்கள் காப்பாற்றப்பட்டு வீடு திரும்புகின்றனர். வியப்புற்ற ஊர் மக்கள், மலையாளத்து மந்திரவாதிகளை கொண்டு வந்து பார்த்தபோது வீரய்யன் கசத்தை காத்து வருவதாக கூறினர். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட்டால் நன்மை வந்து சேரும் என்றும் கூறினர். அதன்படி அப்பகுதி மக்கள் புன்னை சாத்தான் குறிச்சியில் வீரய்யனுக்கு கோயில் எழுப்பினர். கசம் காத்த சாமி என்றும் கசம் காத்த மாடசாமி என்றும் கசம் காத்த பெருமாள் என்றும் கசமாடன் என்றும் பல நாமங்களில் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் கசம் காத்த பெருமாள் அருகே வனப்பேச்சிக்கு பீடம் உள்ளது. வனப்பேச்சி மலைபேச்சியம்மன் என்ற நாமத்தில் அழைக்கப்படுகிறாள். கோயிலில் 21 பரிவார தெய்வங்களும் உள்ளது. இந்தக்கோயில் தூத்துக்குடியிலிருந்து சுமார் 23 கி.மீட்டர் தூரத்தில், முத்தையாபுரம் வழியாக முக்காணி கடந்து சென்றால் ஆத்தூர் அடுத்துள்ள புன்னைச் சாத்தான் குறிச்சியில் அமைந்துள்ளது.

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 02-05-2021

  02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்