SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிந்தை மகிழ்விக்கும் சிவ வடிவங்கள

2013-12-11@ 16:00:48

பரம்பொருள், ஆயிரம் நாமங்கள், ஆயிரம் வடிவங்கள் கொண்டு பல்வேறு தலங்களில் தரிசனம் அளிக்கிறார். சிந்தை குளிர்விக்கும் சிவ வடிவங்கள்  சிலவற்றை சிவராத்திரி காலத்தில் தரிசிப்பது சகல நன்மைகளையும் பெற்றுத் தரும்.

சோமாஸ்கந்தர்

ஒரே ஆசனத்தில் சிவன், சக்தி, ஸ்கந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து வீற்றிருந்து அருள்பாலிப்பது இந்த மூர்த்தம். சத்து, சித்து, ஆனந்தம் என்னும் சச்சிதானந்தப் பதத்தை உலகுக்கு அறிவிக்கின்ற தத்துவத்தை உணர்த்துகிறது. இதில்  சத்து சிவமாகவும் சித்து சக்தியாகவும் ஆனந்தம் ஸ்கந்தனாகவும் உருவகிக்கப்படுகிறது. இந்த மூர்த்தத்தை வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம்  உண்டாகும். எல்லா நலன்களையும் குறைவறப் பெறலாம்.

நடராஜர்

‘அ’ முதல் ‘க்ஷ’ வரையிலான அட்சரங்களே திருவாசியாகவும் பராசக்தியே சிற்றம்பலமாகவும் விளங்குவது நடராஜர் மூர்த்தம். டமருகத்தால் சிருஷ்டி  என்ற ஆக்கத்தையும் அபய கரத்தால் அருளையும், எரிதழலால் சம்ஹாரத்தையும், ஊன்றிய திருவடியால் மறைத்தலையும், குஞ்சித பாதம் என்ற தூக்கிய திருவடியால் அருளையும் புரிவதை உணர்த்தும்  தத்துவமே இம்மூர்த்தம். இவரே பஞ்ச கிருத்திய தாண்டவப் பெருமான் ஆவார். இப்பெருமானுக்கு திருவடிகள் இரண்டாயினும் எண்ணிக்கையற்ற கரங் கள் இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. இவரது திருவடி நகாரமாகவும் உந்தி மகாரமாகவும் தோல் சிகாரமாகவும் திருமுகம் வகாரமாகவும் திருமுடி யகாரமாகவும் சேர்ந்து ‘நமசிவாய’ என் னும் பஞ்சாட்சர உருவமாகத் திகழ்கின்றார். இவரை ஆடல் வல்லான் என்று சிறப்பித்துக் கூறுவர். நமசிவாய மந்திரத்தால் நடராஜரை வழிபட வல் லமை பெருகும். யோகச் சிறப்பளிக்கும் யோக வர மூர்த்தம் இது.

கல்யாண சுந்தரர்

மணவாழ்க்கை இல்லையேல் உற்சாகமில்லை. எனவே இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் இறையருளால் துணை ஒன்றைப் பெற்று, எல்லா  சிறப்புகளையும் அடைந்து இல்லறம் நடக்க வேண்டும். அதற்குரிய அருளை வாரி வழங்குபவரே கல்யாண சுந்தரர். இம்மூர்த்தத்தை மணவழகர்’ என்று கூறி பெருமைப்படுத்துவர். ஒவ்வொரு உயிரும் தம் துணையுடன், இவ்வுலக அனுபவங்களைப் பெற்று, இறுதியில் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டும். இத்தகைய ஆழமான  தத்துவத்தை இந்த மூர்த்தம் உணர்த்துகிறது. முறைப்படி கல்யாண சுந்தரரை வழிபட்டால் மங்கள விசேஷங்கள் தடையின்றி நடைபெறும்.

தட்சிணாமூர்த்தி

இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதியர் நால்வருக்கு தத்துவம் உணர்த்திய வடிவமே தட்சிணாமூர்த்தி. த, க்ஷ, ண என்று மூன்று எழுத்து களும் இறைவனுடைய மூன்று பீஜ மந்திரங்களாகும். அறிவு, தெளிவு, ஞானம் என்ற மூன்று தத்துவத்தை இம்மந்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கல்லால மரத்தின் கீழே அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் வடிவம், பிரமந்திரம், ஸஹஸ்ரதளம் ஆகிய மூளையின் பகுதிகளைக் குறிக்கிறது. அந்த மூளையிலிருந்துதான் அறிவு, தெளிவு, ஞானம் உண்டாகும்; சித்தி, முக்தி, ஞானம் ஏற்படும். மேதா தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த  தட்சிணாமூர்த்தி என்னும் தட்சிணாமூர்த்தியின் பல திரு உருவங்களை ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

கஜானனர்

கஜமுகனான கணபதிக்கும் இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்துக்கும் இறைவன் அருள் புரிந்ததை இந்த மூர்த்தம் விளக்குகிறது. பிரண வத்தின் உருவமே கணபதி வடிவம். அது குடி கொண்டிருக்கும் தலம் மூலாதாரம். அதில் குண்டலினி சக்தியாக கணபதி உள்ளார். அந்த மூலாதார  கணபதிக்கும் பரமாத்மாவின் அருள் வேண்டும். அப்போதுதான் யோக நிலையில் ஸஹஸ்ரதளத்தை அடைய முடியும். இந்த தத்துவம் இம் மூர்த்தத்தால் உணர்த்தப்படுகிறது. கஜமுக அனுக்ரக மூர்த்தியாகிய கஜானனரை வழிபடுவதால் யோக சாதனையால் முன்னேற்றம் காணலாம்.

கங்காளர்

மகாவிஷ்ணு வாமன வடிவத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்டு, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றா வது அடியை அவன் சிரசில் வைத்து, அவனது அகந்தை எனும் பாவத்தை தான் ஏற்றார். அப்போது சிவபெருமான் தன்னுடைய வஜ்ர தண்டத்தால்  வாமனரின் முதுகெலும்புக் கூட்டை அகற்றி, அந்தப் பாவத்தை நீக்கி, அவரை வைகுண்டம் அடையச் செய்தார். இதனை உணர்த்துவதே கங்காளர்  மூர்த்தம். ஏகானந்த மூர்த்தி என்ற பெயரும் உண்டு. இவரது உருவம் பிட்சாடனர் உருவத்தைப் போன்றதுதான்.

கந்தர்வர், நாரதர், தும்புரு, அஷ்டதிக் பாலகர்கள், சிவகணங்கள் போன்றோர் புடை சூழ, துந்துபி, பேரிகை, முரசு போன்ற பலவித வாத்தியங்கள்  முழுங்க, ஏகாந்த சொரூபியாய் இம்மூர்த்தம் தோற்றமளிக்கிறது. சூலத்தில் வாமனரின் கங்காளம் (எலும்புக் கூடு) கட்டப்பட்டிருக்கும் இந்த மூர்த்தம்  யோக நிலையில் வைராக்கியத்தை உண்டாக்க வல்லது. அகந்தையை அடக்க வந்ததுதான் திருமாலின் வாமன வடிவம்.

அந்த வடிவத்திலிருந்து அகந் தையை தான் ஏற்றுக் கொண்டு, தானும் பாவத்தைச் சுமந்து கொண்டு பெருமாள் திரிந்தார். கங்காளம் என்றால் எலும்புக்கூடு என்று பெயர். எலும்புக்  கூட்டிலிருந்து ஆத்மாவிற்கு பெருமான் விடுதலை அளித்தார். எலும்புக் கூடு உருவம் சூலத்தில் குத்தப்பட்டிருப்பது, ஆன்மாவிற்கு விடுதலை அளித்த  பின்னர் பாவத்தை பெருமான்தான் சுமக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த மூர்த்தியை வணங்குவதால் பிறவிப் பாவம் நீங்கும்.

ஏகபாத மூர்த்தி

பிரளய காலத்தில் உலக உயிர்கள் அனைத்தும் தன்னிடம் ஒடுங்கும் பொருட்டு, இறைவன் ஒரு பாதத்துடன் ஓங்கி நின்ற உருவமே இம்மூர்த்தம்.  இம்மூர்த்தத்தை ஒற்றைக்கால் பிரம்மன் என்றும் கூறுவர். சர்வ சம்ஹார காலத்தில் எல்லா உயிர்களும் ‘ஓம்’ என்ற ஒலியுடன் லயத்தை அடைகின் றன. இதுவே இம்மூர்த்தம் உணர்த்தும் தத்துவம். ஏகபாத மூர்த்த வழிபாடு நற்பிறவியை அளிக்கும்.

கிராத மூர்த்தி

எதிர்க்க முடியாத சத்ருக்களால் உண்டான பகையை நீக்க இறுதியில் இறைவனைத்தான் சரணடைய வேண்டும். இந்த தத்துவத்தை எடுத்துக்காட்டு வது கிராத மூர்த்தி. பாண்டவர்களுள் ஒருவனான அர்ஜுனனுக்கு பாசுபதம் என்ற அஸ்திரத்தை அளிக்க பெருமான் வேடுவராக வந்த வடிவம்தான்,  வேட்டுரு பரமர் என்னும் இந்த கிராத மூர்த்தி வடிவம். இந்த மூர்த்தி வழிபாடு, பகையை நீக்கி வெற்றியைத் தரும். பாசுபத சக்தியை அளிக்கும்.

சுகாசன மூர்த்தி

இடப்பக்கம் உமையை அமரச் செய்து, வேதாகமங்களை உரைக்கும் பெருமானாக இந்த மூர்த்தம் விளங்குகிறது. இங்கு பெருமான் வலது காலை  மடித்து, இடது காலை தொங்க விட்டு, எவ்வித சலனமும் இன்றி இருப்பது சுகாசன பாவம். இந்த மூர்த்தத்தில் இறைவன் கடக முத்திரையும் அபய முத்திரையும் தரித்துள்ளார். சுகாசனத்தில் அமர, சந்திர கலை பிரகாசிக்கும். அப்பொழுது உள்ளிருந்து சூரியகலை ஞானத்தைப் போதிக்கும். இந்த ஆசனத்தில் மனம் எந்த வித மான சலனமும் இன்றி அறிவை உள் ஏற்றிக் கொள்ளும் என்ற தத்துவம் இம் மூர்த்தத்தால் உணர்த்தப்படுகிறது. இம் மூர்த்தத்தை வழிபட வீடுபேறு கிடைக்கும்.

-சக்தி விண்மணி

ஓவிங்கள்: ஜாய்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

 • Republic Day Chennai

  சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

 • tamil-mozhi-25

  தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்