SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணவாழ்வில் மகிழ்ச்சி நீடிக்கும்!

2019-02-28@ 16:10:39

எனது மூத்த மகன் காதல் திருமணம் செய்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து ஆகிவிட்டது. குழந்தை இல்லை. அவனுக்கு மீண்டும் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா? அவன் தற்சமயம் கூட்டுத்தொழில் செய்து வருகிறான். இது சரியாக வருமா? அவனது தொழில் மற்றும் குடும்பம் எப்படி இருக்கும்? எதிர்காலம் எப்படி அமையும்?  - ஷண்முகம், சென்னை.

உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்த வரை, தற்போது செய்து வரும் அதே கூட்டுத்தொழிலை அவர் தொடர்ந்து செய்யலாம். அதே நேரத்தில் தொழிலில் அதிக அலைச்சலை சந்திக்க நேரும் என்பதையும் அவரது ஜாதகம் உணர்த்துகிறது. உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக கணிப்பின் படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது.

கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் சூரியன், புதன், கேது ஆகியோரின் இணைவும், ஆறாம் வீட்டில் செவ்வாய்-குருவின் இணைவும் கடுமையான சிரமத்தைத் தந்திருக்கிறது. அதேபோல் ஜென்ம லக்னாதிபதி சுக்கிரனுடன் சனியின் இணைவு வளர்ச்சியைத் தடை செய்து கொண்டிருக்கும். என்றாலும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உங்கள் மகனுக்கு அவ்வப்போது சொல்லி வாருங்கள். குடும்ப ஸ்தானத்தில் ராகுவின் அமர்வு குடும்ப வாழ்வில் பிரச்னையைத் தந்திருக்கிறது. அதோடு மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி செவ்வாய் ஆறில் அமர்ந்திருப்பதும் விவாகரத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

தற்போது அவரது மறுமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். நாற்பத்தி ஆறாவது வயதில் தனக்கு உரிய வாழ்க்கைத்துணையை அவர் சந்திப்பார். பரஸ்பரம் மனம் ஒத்துப் போகும் பட்சத்தில் ஜாதகம் எதுவும் பார்க்காமலேயே திருமணத்தை செய்து வைக்கலாம். தற்போதைய கிரக நிலையின்படி தனது தொழிலில் அவரது முழுகவனத்தையும் செலுத்தச் சொல்லுங்கள். அவர் தொழிலிற்கு உதவும் வகையிலான பெண்ணைச் சந்திக்கும்போது மறுமணமும் நடந்துவிடும். அதிக அலைச்சலை சந்தித்தாலும், அதற்குரிய நற்பலனை அவர் நிச்சயம் சந்திப்பார் என்பதையே அவரது ஜாதகம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

வங்கிப்பணியில் இருந்து கொண்டே ஐ.ஏ.எஸ் தேர்விற்கு முயற்சித்து வரும் என் மகன் போதை உட்பட தவறான பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளான். ஜென்ம லக்னம் கடகமா, சிம்மமா? அவனது குறைகள் எப்பொழுது நீங்கும்? எதிர்காலம் எப்படி அமையும்?  - ஒரு வாசகி.

உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்த வரை, அவர் கடக லக்னத்தில்தான் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சிம்ம லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகப் பலனைப் பார்த்து வீணாக மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். மேலும் நீங்கள் அவரது குணத்தைப் பற்றியும், அவரது நடத்தையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளதை வைத்துக் காணும்போது அவர் கடக லக்னத்தில்தான் பிறந்திருக்கிறார் என்று எளிதாக தீர்மானிக்க முடிகிறது. சிம்ம லக்னத்தில் பிறந்திருந்தால் இதுபோன்ற எதிர்மறையான பலன்கள் அவருக்கு நேர்ந்திருக்காது. ஜென்ம லக்னத்தில கேதுவின் அமர்வும், லக்னாதிபதி சந்திரனின் 12ம் இடத்து சஞ்சாரமும் அவரது மனதில் கடுமையான குழப்பத்தினை உண்டாக்கி இருக்கிறது.

எல்லாவற்றிலும் உண்டாகும் விரக்தியான மன நிலையை கேது தந்துகொண்டிருப்பார். ஜென்ம லக்னாதிபதி 12ல் அமர்ந்து நம்பிக்கையின்மையை தந்துகொண்டிருப்பார். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் அவரது ஜாதக கணிதத்தின்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி முடிவடையும் தருவாயில் உள்ளது. 13.02.2019 முதல் துவங்க உள்ள கேது புக்தி அவரது நடத்தையில் மேலும் விரும்பத்தகாத மாற்றத்தை உருவாக்கும்.

ஒரு சில அவமானங்களுக்கும், கடுமையான சோதனைக்கும் ஆளாவார். எல்லாவற்றையும் பொறுமையாக வேடிக்கை மட்டும் பாருங்கள். முப்பது வயதில் இருக்கும் ஒரு மகனை அத்தனை எளிதாக உங்கள் முயற்சியால் மட்டும் மாற்றிவிட இயலாது. அனுபவப் பாடங்கள் மட்டுமே அவரது மனநிலை மாற்றத்திற்குத் துணை செய்யும். 13.02.2019 முதல் 10.02.2020 வரை அவர் சந்திக்க உள்ள சம்பவங்களும், அவரது வாழ்வினில் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளும் மட்டுமே அவருடைய நடத்தையில் மாற்றத்தைத் தோற்று விக்கும். இறைவனின் மீது முழு பாரத்தையும் இறக்கி வைத்து அமைதியாக இருங்கள்.

அவராக அடைக்கலம் தேடி வரும் பட்சத்தில் அவரது தவறுகளை பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆறுதலாய் நடந்துகொள்ளுங்கள். முன்னெச்சரிக்கையாக நீங்கள் சொல்லும் அறிவுரை எதுவும் தற்போது அவரது காதில் விழாது. பூர்வ ஜென்ம வினையினை அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஒரு சில பாவங்களை அதற்குரிய தண்டனையை அனுபவித்துத் தான் தீர்க்க இயலும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனம் சஞ்சலப்படுகின்ற நேரத்தில் அருகில் உள்ள விநாயகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று மகனின் நல்வாழ்விற்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உங்கள் மகனின் வாழ்வில் வசந்தம் பிறக்கும்.

நாற்பது வயதாகும் என் மகனுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பெண் தேடி வருகிறேன். எல்லா பரிகாரமும் செய்து வருவதோடு வருடா வருடம் தவறாமல் குலதெய்வ வழிபாடும் செய்து வருகிறேன். வீட்டிலும் தினமும் தவறாமல் பூஜை செய்கிறோம். ஆனாலும் சரியான வரன் அமையவில்லை. என் மகனுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? - சீனிவாசன், திருவான்மியூர்.

உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்த வரை, ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவருக்கு தற்போது சந்திர தசையில் சந்திர புக்தி நடந்து வருவதை அறிய முடிகிறது. 25 முதல் 27 வது வயது வரை திருமண யோகம் என்பது அவரது ஜாதகத்தில் நடந்து வந்திருக்கிறது. திருமணத்திற்கான நேரத்தை விடுத்து நம்முடைய சௌகரியத்திற்கு ஏற்றாற்போல் பெண் தேடும்போது இதுபோன்ற கால தாமதத்தை சந்திக்க நேரிடுகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ஜென்ம லக்னாதிபதி குரு பகவான் அமர்ந்திருக்கிறார்.

ஏழாம் வீட்டிற்கு அதிபதியான புதனும் ஐந்தாம் பாவகத்தில் சஞ்சரிக்கிறார். இவையிரண்டும் எந்தவிதமான தோஷத்தையும் உண்டாக்காது. நீங்கள் பெண் தேடுகின்ற முறையில்தான் தவறு நடந்து கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பு ஏதுமின்றி பெண் தேடுங்கள். உங்கள் மகனின் கல்வித்தகுதிக்கும், சம்பாத்தியத்திற்கும் சமமான பெண்ணாக தேடிக் கொண்டிருக்காதீர்கள். ‘வர்த்தனீ குல சம்பதாம்’ என்று சொல்வார்கள். மனைவியானவள் குலத்திற்கு சம்பத்தைத் தரக்கூடியவள், அவள் இருந்தால்தான் வம்சம் தழைக்கும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் கொண்டு பெண் தேடுங்கள்.

உங்கள் மகனின் ஜாதகப்படி நல்ல குணவதியான மனைவி அமைவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கோச்சார ரீதியாக தற்போது கூட குருவின் பார்வை அவரது ராசியின் மீது விழுந்து கொண்டிருப்பதால் சாதகமான நேரமே. நீங்கள் வகுத்து வைத்திருக்கும் விதிகளை தளர்த்திக் கொண்டு பெண் தேடுங்கள். 20.10.2019ற்குள் அவரது திருமணத்திற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

என் பெண் வயிற்றுப் பேரனுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இப்போது தம்பதியருக்கிடையே ஒற்றுமை இல்லாமல் சந்தோஷமற்று இருப்பதை அறிந்து மனம் வேதனையாக உள்ளது. இவர்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் சந்தோஷமாக இருப்பார்களா?  - பெருங்களத்தூர் வாசகர்.

தம்பதியரின் ஜாதகங்களை ஆராய்ந்ததில் தவறு உங்கள் பேரன் மீது இருப்பதாகத்தான் தோன்றுகிறது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற சனியின் அமர்வும், ஜென்ம ராசியில் கேதுவின் இணைவும் ஸ்திரமற்ற மன நிலையைத் தந்திருக்கிறது. எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் பேரனின் மனதில் அதிகமாக ஆக்கிரமித்திருக் கிறது.

ஏழில் சூரியன்- குருவின் இணைவும், எட்டில் வக்ர சுக்கிரன்- செவ்வாய்- சனி ஆகியோரின் இணைவும் அத்தனை சிறப்பான அம்சம் கிடையாது. அதே நேரத்தில் அவருக்கு மனைவியாக வாய்த்திருக்கும் பெண்ணின் ஜாதகம் நன்றாக உள்ளது. குடும்பத்தில் முன்னோர்கள் செய்த புண்ணியம்தான் ஒரு நல்ல பெண்ணை இவருக்கு மனைவியாக அமைத்துத் தந்திருக்கிறது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் உச்சம் பெற்ற புதன், 11ல் சூரியன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரின் அமர்வு என்று ஜாதகம் சிறப்பாக உள்ளது. உங்கள் பேரனுக்கு இதைவிட ஒரு நல்ல பெண் கிடைக்கமாட்டாள்.

கிடைத்தற்கரிய பொக்கிஷமாக வந்திருக்கும் மருமகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளச் சொல்லி உங்கள் மகளுக்கு அறிவுறுத்துங்கள். உங்கள் பேரனுக்கு சனி தசையும், அவரது மனைவிக்கு சுக்கிர தசையும் நடந்து வருகிறது. உங்கள் பேரனுக்கு நடந்து கொண்டிருக்கும் நேரத்தினை விட அந்தப் பெண்ணின் ஜாதகப்படி சிறப்பான கால நேரம் நிலவுகிறது. ஜாதக பலத்தினைப் புரிந்துகொள்வதோடு பரம்பரையில் பெரியவர்கள் செய்த புண்ணியத்தால் மகாலட்சுமியாக அமைந்திருக்கும் மனைவியின் அருமை,பெருமையை உணர்ந்துகொண்டு நடக்கச்சொல்லி உங்கள் பேரனிடம் வலியுறுத்துங்கள்.

கிடைத்திருக்கும் வாழ்க்கையை நல்லபடியாக அனுபவிப்பது என்பது உங்கள் பேரனின் கையில்தான் உள்ளது. தம்பதியரை திருச்சானூருக்கும், திருமலை திருப்பதிக்கும் அழைத்துச் சென்று பத்மாவதி தாயாரையும், பெருமாளையும் சேவிக்க வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மணவாழ்வில் மகிழ்ச்சி நீடிக்கும்.

எம்.பி.ஏ., முடித்துவிட்டு நான்கு வருடம் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த என் மகன் தற்போது 7 மாதங்களாக வேலையின்றி உள்ளான். பல இடங்களில் முயற்சி செய்தும் இதுவரை ஒன்றும் சரியாக அமையவில்லை. அவனுக்கு எப்போது நல்ல வேலை அமையும்? திருமணம் எப்போது நடைபெறும்?  - கணேசன், காஸியாபாத்.

உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்க அடிப்படையில் கணித்துப் பார்த்ததில் அவர் மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருப்பதாகத் தெரிய வருகிறது. அவரது ஜாதகக் கணிதத்தின் படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த உங்கள் மகன் அந்த வேலையை விட்டுவிட்டு வந்ததற்கான காரணத்தை நீங்கள் குறிப்பிடவில்லை.

அவரது ஜாதகப்படி வெளிநாட்டு உத்யோகம்தான் வளர்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. உள்நாட்டில் வேலை தேடுவதை விட மேற்கு திசையில் உள்ள நாடுகளில் வேலை தேடச் சொல்லுங்கள். உள்நாட்டு உத்யோகம் என்பது அவரது ஜாதகப்படி அத்தனை வலிமையானதாக இல்லை. அந்நிய தேசப்பணி என்பதையே இவரது ஜாதகம் காட்டுகிறது. வளைகுடா நாடுகள் அவரது எதிர்காலத்திற்கு சிறப்பானதாக அமையும்.

தற்போது நடந்துவரும் தசாபுக்தியின் காலம் உத்யோக ரீதியாக எந்தவித தடையையும் உண்டாக்கவில்லை. 29வது வயது முடிவுறும் தருவாயில் அவரது திருமணம் நடந்துவிடும். ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் கிடையாது. மணவாழ்வு என்பது சிறப்பானதாக அமையும். கவலைப்படத் தேவையில்லை.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

- சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்