SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீர்த்த நீராடி தீவினை களைவோம்!

2019-02-18@ 17:37:26

மாசி மக நீராடல் - 19.02.2019

‘மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றையும் தொழுவார்க்கு வார்த்தை சொல்ல சற்குரு வாய்க்குமே’ என்பது தாயுமானவ சுவாமிகள் திருமொழி. தீர்த்தங்கள் யாவும் சிவபெருமானாகவே எண்ணத்தக்கவை ஆகும். சிவபெருமான் தீர்த்த வடிவில் இருக்கின்றான் என்பதை மணிவாசகப் பெருமான், ‘தீர்த்தன் நல்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்’ என்றும் அப்பர் சுவாமிகள், ‘சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே’ என்றும் அருளிச் செய்துள்ளதைக் காண்கிறோம். சிவபெருமான் தீர்த்தத்தின் வடிவாக விளங்குவதால் தீர்த்தேஸ்வரர் என்றும் பெயர் பெறுகின்றார். மண்ணின் வளத்திற்குத் தண்ணீர் ஆதாரமாகும். வான்மழை எப்போதும் பொழிவதில்லை. அதனால் பொழிந்த மழைநீரைத் தேக்கி வைத்திருந்து உயிர்களுக்குத் தாகத்தைத் தணிப்பவை நீர்நிலைகளாகிய தீர்த்தங்களேயாகும். இவை நம்மில் நீராடுவார்க்கு உடல் தூய்மையை அளிப்பதுடன் மனத்தூய்மையையும் அளிக்கவல்லன.

அனைத்து சிவாலயங்களிலும் அமைந்துள்ள தீர்த்தக் குளங்கள் தனிச்சிறப்பைப் பெறுகின்றன. திருத்தலங்களில் தேவர்களாலும், முனிவர்களாலும் அரசர்களாலும் அமைக்கப்பட்ட அநேக தீர்த்தங்கள் உள்ளன. தலபுராணங்களில் தீர்த்தங்களின் மகிமையும் அவற்றில் மூழ்குவதால் கிடைக்கும் பலனும் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் இறுதியில் இறைவனே எழுந்தருளி முதன்மைத் தீர்த்தத்தில் நீராடித் தீர்த்தம் அளிப்பதைக் காண்கிறோம். இதனைத் தீர்த்தவாரி உற்சவம் என்றழைக்கின்றனர். தீர்த்தக்குளங்களைச் செப்பனிடுதல், படிகட்டுதல், தூர்வாருதல், சுற்றிலும் மலர்ச்செடி கொடிகளை வளர்த்தல் முதலிய யாவுமே சிவபுண்ணியச் செயல்களாகப் போற்றப்படுகின்றன. குளத்தைப் பேணிக்காப்பதை சிவபெருமானைப் போற்றுவதாகவே எண்ணுகின்றனர். அறுபத்து மூவரில் ஒருவரான தண்டியடிகள் திருக்குளப்பணி செய்து மேன்மை பெற்றதைப் பெரிய புராணத்தால் அறிகிறோம். சில தலங்களில் அடியவர்களின் நன்மைக்காக சிவபெருமானே தீர்த்தங்களை உண்டாக்கியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

ஆதிநாளில் திருத்தலங்களுக்கு மேற்கொள்ளும் யாத்திரையைத் தீர்த்த யாத்திரை என்றே அழைத்தனர். அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செய்து பாரத நாட்டிலுள்ள அநேக சிவத்தலங்களிலும் வழிபட்டானென்றும், பாரத யுத்தத்தில் கலந்துகொள்ள விரும்பாத பலராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார் என்றும், மகாபாரதம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில், கீரந்தை எனும் அந்தணன், மாடல மறையவன் முதலியோர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இமயம் முதல் குமரிவரை சென்று திரும்பியதைக் காண்கிறோம். பொதுவாகத் தீர்த்தங்கள் என்றதும் நமக்கு திருக்குளங்களே  நினைவுக்கு வருகின்றன. ஆனால் நதிகள், சுனைகள், தலத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் யாவுமே தெய்வத்தன்மை பெற்றுத் தீர்த்தங்களாக விளங்குகின்றன. இறைவனின் எண் பெருவடிவங்களில் ஒன்று தண்ணீராகும். நீர் மயமான இறைவனை ஜலகண்டேஸ்வரர், ஜலநாதேஸ்வரர், தீர்த்தேஸ்வரர் எனப் பலவாறு அழைக்கின்றனர்.

இறைவன் ஆலயத்தில் சிவலிங்கமாகவும் வேள்விக் குண்டங்களில் தீயாகவும், தீபச்சுடர்களில் ஒளியாகவும் திருக்குளங்களில் தீர்த்தமாகவும் விளங்குகின்றான். தண்ணீராக இருக்கின்ற சிவபெருமான் உயிர்களின் தாகத்தைத் தணிப்பவனாகவும் விளங்குகின்றான். பெண்ணாடகத்தின் மேற்கில் அமைந்துள்ள இறையூரில் இறைவன் தாகந்தீர்த்தேஸ்வரர் எனும் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அம்பிகை அன்னபூரணி என்றழைக்கப்படுகிறாள். தீர்த்தங்களில் மூழ்குவதால் கொலை, களவு, பொய் பேசுதல் முதலியவற்றால் உண்டாகும் பாவங்கள் தீரும். புண்ணியம் பெருகும். புனித தீர்த்தத்தில் அறியாமலேயே மூழ்கினாலும், அது தனது பலனைத் தருகிறது. தீர்த்தத்தின் துளிகள் பட்டு மேன்மை பெற்றவர்களின் வரலாறுகளைப் புராணங்களில் காண்கிறோம். தீர்த்தங்களின் புனிதத் துளிகள் பட்டுப் பேயுருவம், பூத பிசாசு உருவங்கள் நீங்கின என்று மகாபுராணங்கள் கூறுகின்றன. இவை கபால மோசனம், பிசாசு மோசனம், பூத மோசனம், பூத வேதாளத் தீர்த்தங்கள் எனப் பல பெயர்களைப் பெற்றுள்ளன. காசி நகரில் இப்பெயர்களில் பல தீர்த்தங்கள் உள்ளன.

தீர்த்தேஸ்வரங்கள்

உயிர்களைப் பற்றியுள்ள வினைகளைத் தீர்த்து இன்பம் அருளும் இறைவன் தீர்த்தேசுவரன் என்று அழைக்கப்படுகின்றான். நடைமுறையில் தண்ணீர் வடிவாக விளங்கும் பெருமானை ‘தீர்த்தேஸ்வரர்’ என்று அழைக்கின்றோம். மேலும் பூமியால் வழிபடப்பட்டபோது இறைவன் பூமீசுரர் என்றும், அக்னியால் வழிபடப்பட்டபோது அக்னீசர் என்றும் வாயுவால் வழிபடப்பட்டபோது வாயுவேசர் என்றும் அழைக்கப்பட்டதுபோலவே தீர்த்தங்களால் வழிபடப்பட்டபோது தீர்த்தேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். தீர்த்தக் கன்னியர்களும் கடலரசர்களும் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட தீர்த்தேஸ்வரங்கள் எனப்படும் சிவாலயங்களைப் பாரத தேசம் முழுவதிலும் காண்கிறோம். அவற்றில் சில இங்கே:

மயிலை தீர்த்தபாலீச்சரம்

உருத்திரர்கள் தீர்த்தத்தினை விரும்பி அதில் உறைவதுடன் அதன் காவல் தேவதையாகவும் விளங்குகின்றனர். அதையொட்டி உருத்திரத்தலமான மயிலாப்பூரில் உருத்திரர்கள் அமைத்து வழிபட்ட சிவாலயம் உள்ளது. இதில் பெரிய சிவலிங்கமாகத் தீர்த்தபாலீஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும். இது மயிலையில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்று.

காசிநகர் தீர்த்தேச்சரம்

காசிநாதருக்குத் தீர்த்தராஜன் என்னும் பெயர் வழங்குகிறது. இங்குத் தீர்த்தராஜர் எனும் பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். மேலும் நதிதேவதைகள் அமைத்த யமுனேசர், கங்கேசர், சரஸ்வதீசர் முதலிய சிவாலயங்களும், கடலரசர்கள் அமைத்த சப்தசாகரேசம், சதுஸ்ர சாகரேசம் முதலிய சிவாலயங்களும் மணிகர்ணிகா முதலான தீர்த்தங்கள் அமைத்து வழிபட்ட மணிகர்ணிகேசர் முதலான சிவாலயங்களும் உள்ளன.

செழுநீர்த்திரள்

தீர்த்தங்களே திரண்டு சிவலிங்கமானதைப் பஞ்ச பூதத்தலங்களில் ஒன்றான திருவானைக்காவலில் காண்கிறோம். இது திருச்சியின் ஒரு பகுதியாகத் திகழும் திருத்தலமாகும். காஞ்சியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதைப் போலவே அம்பிகை இங்கு தண்ணீரைத் திரட்டிச் சிவலிங்கமாக்கி வழிபட்டாள். இதையொட்டி பெருமான் அப்புலிங்கம், ‘செழுநீர்த்திரள்’ நீரானார் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றார். இங்குள்ள கருவறை காவிரியாற்றின் நீர் மட்டத்திற்குக் கீழே உள்ளது. இதனால் இதில் நீர் சுரந்துகொண்டே இருக்கின்றது. முன்னாளில் இங்கு அதிகமாக நீர் சுரந்து லிங்கத்தை மூடிக்கொள்ளும் என்றும் அதை இறைத்துவிட்டே தினப்பூஜைகள் நடைபெற்றனவென்றும் கூறுகின்றனர். இந்நாளில் நீர் சுரப்பது அதிக அளவு இல்லையென்றாலும் கருவறை எப்போதும்
ஓரளவு நீருடன், ஈரமாகவே உள்ளது.

காஞ்சி நகர் தீர்த்தேசம்

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கு அருகில் சர்வ தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது. இதன் கரையிலுள்ள தீர்த்தேஸ்வரம் என்ற சிவாலயத்தில் சிவபெருமான் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார். தென்பாண்டி மண்டலத்தில் தாமிரபரணி ஆறு, குற்றால அருவி முதலான இடங்களில் நீராடும் துறைகளிலுள்ள பாறைகளில் சிவலிங்கம், நந்தி வடிவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவையும் தீர்த்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றன. வெள்ளப்பெருக்கின்போது புரண்டோடும் தண்ணீர் இந்தத் திருவுருவங்களைத் தழுவிச் செல்கின்றன. திருக்குற்றாலத்தில் அருவியை ஒட்டியுள்ள பாறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லிங்கங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

திருக்குளங்களைச் சிவனின் நீர்வடிவ மேனியாகவே போற்றி வணங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் திருக்குளங்களின் நீர் மட்டத்தில் சிவலிங்கத்தை அமைத்துள்ளனர். இவருக்குத் தீர்த்தேஸ்வரர் என்ற பெயர் வழங்குகிறது. சிதம்பரம் சிவகங்கைத் தீர்த்தத்தில் தண்ணீர் மட்டத்தில் லிங்கம் அமைந்துள்ளதைக் காண்கிறோம். திருவள்ளூரில் திருமால் ஆலயத்திற்குச் சொந்தமான பெரிய திருக்குளத்தின் வடமேற்குக் கரையில் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். சென்னை-போரூருக்கு அருகிலுள்ள பரணிபுத்தூர், காஞ்சி மாவட்டம் கயப்பாக்கம், திருவள்ளூர், நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூர், பெரம்பலூர் மாவட்டம் சென்னிவனம் முதலிய இடங்களில் தீர்த்தேஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனூரில் பெருமான் சர்வ தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் வீற்றிருக்கிறார்.

இறைவன் தீர்த்தங்களால் வழிபடப்பட்ட  தீர்த்தேசனாக எழுந்தருளியுள்ள ஆலயங்கள் மட்டுமின்றி புராணங்களில் சொல்லப்பட்டபடி முறையாக தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, காசிராமேஸ்வரம், கன்னியாகுமரிவரை சென்று ஊர் திரும்பியவர்களும் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் சிவலிங்கம் அமைத்துக் கட்டியுள்ள சிவாலயங்களையும் காண்கிறோம்.

தீர்த்தமலை

தருமபுரி மாவட்டத்தில் அரூருக்கு அருகில் தீர்த்தமலை எனும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள 3200 அடி உயரமுள்ள மலையின் மீது சிவபெருமான் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் பெரிய சிவாலயத்தில் எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை. இம்மலையில் குளம், சிற்றோடை, சுனை எனப்பல வடிவில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன. இதையொட்டி இம்மலை தீர்த்தமலை என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தங்களில் ராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், குமார தீர்த்தம், கெளரி தீர்த்தம் என்ற ஐந்தும் முதன்மை பெற்றதாகும். ராமபிரான் இங்கு வந்து தங்கியபோது சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்கு நீர் கிடைக்காததால் அனுமனிடம், கங்கை நீரைக்கொண்டுவரும்படிக் கூறினார். அனுமன் இமயத்திற்குச் சென்று ஒரு குடத்தில் கங்கையை எடுத்துக்கொண்டு வந்தார்.

அவர் வருவதற்குள் பூஜைக்குரிய காலம் நெருங்கிவிட்டதால் ராமர் தனது பாணத்தைப் பூமியில் செலுத்தித் துளையிட்டார். அதன் மூலமாக கங்கை பொங்கி வந்தாள். ராமர் மகிழ்வுடன் அந்நீரால் சிவபூஜை செய்தார். நேரம் கழித்து வந்த அனுமன் காலதாமதமாகி விட்டதற்கு வருந்தினான். ராமர். அனுமனே, ‘‘அதோ தெரியும் மலையின்மீது நீ எடுத்துவந்த குடத்தினை வை அதிலிருந்து கங்கை பொங்கி வழிவாள், அந்தப் பொங்கும் புனல் உன் பெயரால் அனும தீர்த்தம் என்றழைக்கப்படும்,’’ என்று கூறினார். அதன்படியே அனுமான் அமைத்த அனுமதீர்த்தம் உள்ளது. அது தீர்த்தகிரியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சைவ எல்லப்ப நாவலர் பாடிய தீர்த்தமலை மான்மியம் எனும் நூலில் இத்தலத்திலுள்ள தீர்த்தங்களின் சிறப்பும், மகிமையும் விவரிக்கப்பட்டுள்ளன. இம்மலையின் அருகில் பெண்ணையாறு ஓடுகிறது.

இறைவன் அழைத்த தீர்த்தங்கள்

திருத்தலங்கள் தோறும் தீர்த்தங்களை அமைத்துத் தேவர்களும், மனிதர்களும் புண்ணியம் பெற்றுள்ளனர். சில தலங்களில் பக்தர்களின் பக்திக்கு இரங்கிச் சிவபெருமானே திருக்குளத்தை உண்டாக்கி அளித்ததையும் காண்கிறோம். அத்துடன் அதன் கரைகளில் அவர் தீர்த்தராஜன் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இப்பகுதியில் இறைவன் சமுத்திரம், பாற்கடல் சர்வ தீர்த்தங்கள் முதலியவற்றை அழைத்து தீர்த்தங்கள் உண்டாக்கிய வரலாறுகளையும் அதன் கரையில் அமைந்துள்ள சிவாலயங்களையும் பற்றி அறிந்துகொள்ளலாம். சிவலிங்கங்களோடு இணைந்த சிறப்புமிக்க தீர்த்தங்கள் சில ஆலயங்களில் மூலமூர்த்தியான சிவலிங்கத்திற்குக் குறிப்பிட்ட கிணற்றிலிருந்து கொண்டுவருகின்ற தண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் இந்தச் சிவலிங்கங்கள் சில்லு சில்லாகப் பெயர்ந்துவிடும் என்கின்றனர்.

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கடவூரில் மார்க்கண்டேயரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம், அமிர்தகடேஸ்வரர் எனும் பெயரில் உள்ளது. இந்த மூலத்தான லிங்கம் அமுதத்தால் ஆனது. இந்த லிங்கத்திற்கு, இக்கோயிலுக்கு நேர் கிழக்கில் ஏறத்தாழ ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள (திருக்கடவூர் மயானம்) திருமெஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்குத் தெற்கிலுள்ள அசுபதி தீர்த்தத்தால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தீர்த்தம் நான்கு புறங்களிலும் சுவர் எழுப்பிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து தினமும் மாட்டுவண்டி மூலம் பெரிய செப்புப் பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து அபிஷேகம்
செய்கின்றனர். காளத்தியிலுள்ள காளத்தியப்பர் லிங்கம் நாகங்களின் பாஷாணத்தால் உண்டாக்கப்பட்டதென்று கூறுகின்றனர்.  இதற்குச் சூரிய தீர்த்தம் எனும் கிணற்று நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த நீருடன் பச்சை கற்பூரம் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இந்த தீர்த்தத்தை சங்கு வடிவமான செப்புப் பாத்திரத்தில் முகந்து அன்பர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த சூரிய தீர்த்தம், ஆலயத்திலிருந்து சொர்ணமுகி ஆற்றிற்குச் செல்லும் வழியில் சிறு மண்டபத்திற்குள் உள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள சிறு சந்நதியில் சிவபெருமான் சிவசூர்யனாக எழுந்தருளியிருக்கிறார். தொண்டை நாட்டுத் திரிபுராந்தகத் தலமான திருவிற்கோலம் இந்நாளில் கூவம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் சிவலிங்க
மூர்த்திக்குத் திரிபுராந்தகேஸ்வரர் என்பது பெயராகும். இந்தச் சிவலிங்க மூர்த்திக்கு இரண்டு கி.மீ. தொலைவில் ஓடும் கூவம் ஆற்றிலுள்ள திருமஞ்சன மேடை என்ற இடத்திலிருந்து நீர் கொண்டுவந்து நான்கு காலங்களிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு தண்ணீரைக்கொண்டு அபிஷேகம் செய்தால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படர்ந்துவிடும் என்கின்றனர். காவிரிக்கரையிலுள்ள தலம் வாட்போக்கி எனும் ரத்தினகிரி மலையாகும். இங்குள்ள மலை மீது பெருமான் ரத்தினகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.இப்பெருமானுக்கு தினமும் அபிஷேக பண்டாரத்தார் எனும் வகுப்பார் ஆண்டாண்டு காலமாக இவ்வாறு காவிரியிலிருந்து மலைக்கோயிலுக்கு நீர் எடுத்துச்சென்று அபிஷேக சேவை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன.  இவற்றில் முக்கியமானவை நவகிரகங்களால் அமைக்கப்பட்ட பருதி தீர்த்தம், சோம (சந்திர) தீர்த்தம், மங்கள தீர்த்தம் முதலான ஒன்பது தீர்த்தங்கள்.  முனிவர்களால் அமைக்கப்பட்ட அகத்திய தீர்த்தம் வசிட்ட தீர்த்தம், வாம தீர்த்தம் முதலியனவும் சித்தர்களால் அமைக்கப்பட்ட சித்தாமிர்தம் இஷ்ட சித்தி தீர்த்தம் முதலியனவும், பார்வதி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட உலகாணி தீர்த்தம், கம்பாநதி, அவள் நீராடியபோது உண்டான மஞ்சளாறு முதலியனவும், சரஸ்வதி, லட்சுமி முதலியோரால் அமைக்கப்பட்ட லட்சுமி தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம், துர்க்கா  தீர்த்தம், காளி தீர்த்தம், தேவ மாதர்களால் அமைக்கப்பட்ட ஐவர் அரம்பையர் தீர்த்தம், பாம்புகளால் அமைக்கப்பட்ட வாசுகி தீர்த்தம், அனந்த தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், மகாகாள தீர்த்தங்களும் ஐராவதத்தால் உண்டாக்கப்பட்ட ஐராவத தீர்த்தம் முதலியனவும் ஆகும்.

நளன் வழிபட்டுப் பேறுபெற்ற திருநள்ளாற்றில் பதிமூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் எட்டு அட்டதிக்குப் பாலகர்களால் உண்டாக்கப்பட்டவை. எஞ்சியவை பிரம்மன், வாணி, அன்னம், நளன், கங்கை ஆகிய ஐவரால் அமைக்கப்பட்டன. வேதாரண்யத்தில் (திருமறைக்காட்டில்) 96 தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகின்றது. இவற்றில் கடல் தீர்த்தம், காசிக்கு இணையான மணிகர்ணிகா, வேதாமிர்தம் எனும் ஏரி, விசுவாமித்ர தீர்த்தம், விக்னேசுவர தீர்த்தம் முதலியன முக்கியமானவை. இவற்றில் பெரும்பாலானவை இப்போது காணக்கிடைக்கவில்லை.

திருவண்ணாமலையில் 360 தீர்த்தங்கள் இருந்ததாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. புராணங்களில் திக்பாலகர்களால் உண்டாக்கப்பட்ட எட்டு தீர்த்தங்களுடன், சுக்கிர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்,  திருமுலைப்பால் தீர்த்தம், பவளப்பாறை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம் முதலிய குளங்களும், திருநதி, சோனைநதி, சேயாறு முதலிய ஆறுகளும் தீர்த்தங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றில் மூழ்கி அண்ணாமலையாரை
வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் அருணாசல புராணத்தில் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. திருவிடைமருதூரில் 36 தீர்த்தங்கள் இருந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இவற்றில் முதன்மை பெற்று காவிரியில் படித்துறையாக உள்ள இடம் கல்யாண தீர்த்தமாகும். இங்கு, சுவாமி தைப்பூசத்தில் தீர்த்தமளிப்பார். இதற்குப் பூசத்துறை, கல்யாண சிந்து என்பன பெயராகும்.

ஆட்சிலிங்கம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்