SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறளும் இசையும்

2019-01-07@ 17:20:04

குறளின் குரல் - 97

இது இசைவிழாக் காலம். சென்னை இசைக்கோலம் பூண்டிருக்கிறது. எல்லா சபாக்களிலும் இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இசையை ரசிப்பதற்காக உலகெங்குமிருந்து இசை ரசிகர்கள் சென்னைக்கு வந்து குவிகிறார்கள். `திருவள்ளுவ மாலை’ என்று தமிழில் பல புலவர்கள் எழுதிய வெண்பாக்களின் தொகுப்பு நூல் ஒன்று உண்டு. திருவள்ளுவரின் பெருமைகளையும் திருக்குறளின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட நூல். அந்நூலில் மதுரைத் தமிழ்நாகனார் என்ற புலவர் எழுதியுள்ள வெண்பா இது:

'எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்! - சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை’`

எல்லாப் பொருளும் வள்ளுவத்தில் உண்டு என்கிறதே இந்த வெண்பா? அப்படியானால் இசை பற்றிய தகவல்கள் திருக்குறளில் உண்டா? உண்டு! பல இசைக் கருவிகளைப் பற்றியும் பண் என்று அழைக்கப்படும் ராகத்தைப் பற்றியும் வள்ளுவம் பல இடங்களில் பேசுகிறது.

'குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் எண் - 66)

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே புல்லாங்குழலின் ஒலியையும் வீணையின் நாதத்தையும் இனிமை என்று
போற்றுவார்கள்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்
கன்னவினைபடு பாலால் கொளல். (குறள் எண் - 279)

வடிவத்தால் நேரானதுதான் என்றாலும் அம்பு மிகவும் கொடியது. உயிரையே மாய்த்து விடக் கூடியது. ஆனால் வளைந்திருந்தாலும் யாழ் தரும் இசை காதுக்கு இனிமையானது. ஆகையால் தோற்றத்தை வைத்து மனிதரை எடை போடாதீர்கள். அவர்கள் என்ன செயல் செய்கிறார்களோ அந்தச் செயலை வைத்து அவர்களை மதிப்பிடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

அனிச்சப்பூக் கால்களையா பெய்தாள்
நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை.. (குறள் எண் - 1115)
 
என் காதலி மென்மையான அனிச்சப் பூவைக் காம்பை நீக்காமல் கூந்தலில் சூடினால், அவள் இடை, காம்பின் எடையைத் தாங்காது. அப்புறம் இசைக்கருவியான பறையிலிருந்து மங்கல ஒலி எழாது.  

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள் எண் - 1076)
 
கயவர், தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்வதால், அறையப்படும் பறையைப் போன்றவர்.

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து (குறள் எண் - 1180)
 
'உள்ளத்தில் இருக்கும் ரகசியத்தைப் பறையறைந்து தெரிவிப்பதுபோல் கண்கள் கண்ணீரால் தெரிவிக்கின்றனவே? அதனால் ஊரார் என் மனத்தில் உள்ளதை எளிதாக உணர்ந்துவிடுவார்கள் என்கிறாள், காதல் வயப்பட்டுப் பிரிவுத் துயரால் வாடும் தலைவி.

பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் (குறள் எண்- 573)

ஒரு பாடலை இசைக்கும்போது அதன் பொருளுக்கும் அந்தப் பொருளால் விளையும் உணர்வுக்கும் ஏற்ற பண்ணில் அமைத்துப் பாடுதலே சிறந்தது. பொருளோடு பொருந்தாத ராகம் பயனற்றது. அதுபோல் குறிக்கோளின்றி நோக்கும் கண்ணோட்டமும் பயனற்றது என்று திருவள்ளுவர் விளக்குகிறார். நம் சங்கீத மரபில் இன்னின்ன உணர்வுகளுக்கு இன்னின்ன ராகங்கள் என்பது தெளிவாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. 'வீணைக் கொடியுடைய வேந்தனே!’ என்ற சம்பூர்ண ராமாயணத் திரைப்படப் பாடலில், இவ்விவரங்கள் கேள்வி பதிலாக அமைந்துள்ளன.

நீலாம்பரி ராகம் கருணைக்கானது. மகிழ்ச்சிக்குரிய ராகம் தன்யாசி. யுத்த ராகம் கம்பீர நாட்டை. எந்தெந்தப் பொழுதுகளில் எந்தெந்த ராகங்கள் ஏற்புடையதாக இருக்கும் என்பதுகூட வகைப்படுத்தப் பட்டுள்ளன. அதிகாலை ராகம் பூபாளம். உச்சிவேளை ராகம் சாரங்கா. மாலையில் பாடும் ராகம் வசந்தா. பாக்களில் எந்தெந்தப் பாக்களை எந்தெந்த ராகங்களில் பாட வேண்டும் என்றும் வகைப்படுத்தியிருக்கிறார்கள். வெண்பா - சங்கராபரணம். அகவற் பா - தோடி. தாழிசை - கல்யாணி. சிவபெருமானுக்குப் பிடித்த ராகம் காம்போதி. ராவணன் காம்போதி ராகம் பாடித்தான் சிவனருளைப் பெற்றான்.

தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் எனப் பாசுரங்கள் எல்லாம் இசையோடுதான் பாடப்படுகின்றன. இசை தமிழர் வாழ்வை ஊடுருவியிருக்கிறது. இப்போதைய நமது அன்றாட வாழ்விலும் கூட இசையே இல்லாமல் நாம் ஒரு நாளைக் கூடக் கழித்துவிட இயலாது. ஏதோ ஒருவகையில் எங்கிருந்தோ இசை நம் செவிகளில் விழுந்துகொண்டுதான் இருக்கும். பேருந்தில், கைபேசியில், தெருவோர ஒலிபெருக்கிகளில் திரையிசையோ கர்நாடக இசையோ கேட்காத நேரமில்லை. காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை இசையோடுதான் அனைத்து வேலைகளையும் செய்கிறோம்.

திரைப்படங்களில் காட்சிகள் தெரிவிக்கும் உணர்வுகளுக்கு ஏற்பப் பின்னணி இசை ஒலிக்கிறது. நம் அன்றாட வாழ்விலும், நம் உணர்வுகளுக்கு ஏற்ப அமைகிறதோ இல்லையோ பின்னணியில் இசை ஒலிக்காத நேரமில்லை. பிறந்த குழந்தைக்குத் தாலாட்டு, இறந்த மனிதருக்கு ஒப்பாரி என பிறப்பு முதல் இறப்பு வரை இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பொங்கல் பண்டிகையில் குலவையிடுவதும் இசைதான். திருமணச் சடங்குகளில் நாதஸ்வரம் வாசிப்பதும், ஊஞ்சல், நலங்கு போன்ற நிகழ்வுகளில் பாடல்கள் பாடப்படுவதும் இசைதான்.

நாட்டுப்புறப் பாடல்களில் கும்மி, கோலாட்டம் என எண்ணற்ற இசைப்பாடல்கள் உண்டு. நாட்டுப்பற்றை வெளிப்படுத்தவும் இசைதானே பயன்படுகிறது? நாம் நம் தேசிய கீதத்தை வெறுமே சொல்வதில்லை. பாடுகிறோம். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழு அடிப்படை வகைகளைத் தமிழிசை கொண்டுள்ளது. கர்நாடக இசையில் சொல்லப்படும் ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ‘சப்த ஸ்வரங்களின்’  ‘ஸ ரி க ம ப த நி’ என்னும் ஏழு அட்சரங்கள்தான் தமிழிசையில் மேற்கண்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ராகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி மூவரையும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கிறோம். 'தியாகராஜரைப் பார்த்து அவரைப் பின்பற்றி நாம் தமிழிசையை வளர்க்க வேண்டும்!’ என்றார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. வியப்போடு அது எப்படி என்று கேட்டார்கள். அதற்கு, 'தமிழகத்தில் வாழ்ந்தாலும் தம் தாய்மொழியான தெலுங்கில்தானே தியாகராஜர் கீர்த்தனைகள் எழுதினார்?

அவரிடமிருந்து நாம் தாய்மொழிப் பற்றைக் கற்றுக் கொண்டால் நாமும் மேடைகளில் தமிழ்ப் பாடல்களைப் பாடுவோம் அல்லவா?’ என பதில் சொன்னார் கல்கி. கடவுளர் கையில் இசைக் கருவிகளைக் கொடுத்து நாம் இசையைப் போற்றுகிறோம். மகாபாரதப்போரை பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஊதி ஒலி எழுப்பித்தான் கண்ணன் தொடங்கி வைத்தான். சரஸ்வதி கையில் வீணை. கண்ணன் கையில் புல்லாங்குழல். சிவபெருமான் கையில் உடுக்கை.
 
'வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான் - நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்'

என சரஸ்வதியைப் போற்றுகிறார் மகாகவி பாரதியார்.

'புல்லாங் குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநல் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்கியது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்.
அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்!
எங்காகிலும் கண்ட துண்டோ - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ?’
 
என்று கண்ணனின் புல்லாங்குழல் இசைபற்றிப் பாடுகிறார் பாரதி.

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்
செய்யவாய் கொப்பளிப்ப
குறுவியர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன்
குழல்கொடு ஊதினபோது
பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்து  
படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச்  
செவியாட்ட கில்லாவே!
 
என்று பெரியாழ்வார் திருமொழி, கண்ணக் கடவுளின் குழலிசைப் பெருமையைப் போற்றுகிறது. தமிழில் அற்புதமான பக்திக் கீர்த்தனைகளை எழுதிய ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கண்ணனின் குழலிசை மகிமை பற்றிப் பல பாடல்களில் குறிப்பிடுகிறார். குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட கண்ணன் என்கிறார். கண்ணனின் ஆனந்த மோகன வேணுகானத்தில் மனம் அலைபாய்வதாகத் தெரிவிக்கிறார். பாரதியார் இருபெரும் இதிகாசத் தெய்வங்களில் ராமனையும் பாடியிருக்கலாம். கண்ணனையும் பாடியிருக்கலாம். அவர் ராமன் பாட்டுப் பாடாமல், ஏன் கண்ணன் பாட்டுப் பாடினார்?

அதற்குப் பல காரணங்கள் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். பாரதியார் நம்நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என விரும்பினார். தன் நாட்டைத் தம்பிக்கு விட்டுக் கொடுத்துவிட்டுக் கானகம் போன ராமனை விட, தருமபுத்திரருக்கு உரிமையான நாட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்த கண்ணனால் பாரதியார் ஈர்க்கப்படுவது இயல்பு தானே? தவிர பாரதியார் சங்கீதப் பிரியர். ராமன் கையில் இசைக் கருவி ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் ராமனின் எதிரி ராவணன்தான் வீணையிசையில் வல்லவன்.  ஆனால், கண்ணனோ புல்லாங்குழலிசையால் ஆனிரைகளைக் கூட மயக்குபவன்.

சங்கீதப் பிரியரான பாரதியார் கண்ணன்மேல் அதிக பக்தி கொண்டதற்குக் காரணம் அந்தப் புல்லாங்குழல்! பாரதியாரே மிக அருமையாகப் பாடக் கூடியவர். தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை, தாம் கேட்டுக் கொண்டதன் பேரில் தம் இல்லத்தில் மகாகவி பாரதியார் பாட்டுப் பாடிய சம்பவத்தையும் பாரதியாரின் இசையாற்றலையும் வியந்து தமது 'தமிழ்ச் சுடர் மணிகள்’ என்ற நூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சென்னைக் கடற்கரையில் பாரதியார் கம்பீரமாகத் தாம் எழுதிய பாடல்களைத் தாமே பாடுவார். பாரதியார் தம் பாடல்களை இன்னின்ன ராகத்தில் பாட வேண்டும் என்று தாமே குறிப்பிட்டுள்ளார்.

'மண்ணுலகத்து நல்லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டு வந்தான்
பண்ணிலிசைத்து அவ்வொலிகள்
அனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்!'

என்கிறார் பாரதியார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள குகானந்த நிலையத்தில் மயில் வாகனத்தில் கையில் வேல்தாங்கி முருகன் காட்சிதரும் ஓர் ஓவியம் உண்டு. அங்கு நடந்த ஒரு கூட்டத்திற்கு பாரதியார் வந்தபோது திரு.வி. கல்யாண சுந்தரனார் அங்கிருந்த முருகன் ஓவியத்தைக் காட்டி, முருகன்மேல் ஒரு பாடல் பாடுமாறு பாரதியாரை வேண்டினார். பாரதியார், தாம் எழுதிய 'முருகா முருகா முருகா! வருவாய் மயில் மீதினிலே! வடிவேலுடனே வருவாய்!’ என்று தொடங்கும் பாடலைப் பாடினார். அங்கு கூடியிருந்த அன்பர்கள் பாரதியின் கவிதையையும் அவரது இசையாற்றலையும் கேட்டு உருகினார்கள்.

கந்தக் கடவுளின் உள்ளமும் உருகியிருக்க வேண்டும். அப்போது ஒரு விந்தையான சம்பவம் நிகழ்ந்ததாக திரு.வி.க. தம் 'உள்ளொளி’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார். அந்த வரிகள் இதோ...'தேனினும் இனிய முருகன் பாட்டு படத்தில் உள்ள ஓவிய முருகனை நகரச் செய்தது! ஓவிய உருவம் வீறுடன் வெளிவருவது போன்ற தோற்றம் உண்டாயிற்று. அன்பர்கள் மெய்கள் அரும்பின. விதிர்விதிர்த்தனர். சிலர் மயங்கினர். சிலர் விழுந்தனர். சிலர் கண்ணீர் உகுத்துத் தன்னை மறந்தனர். எல்லோரும் ஆனந்தப் பரவசமாயினர்.

பாரதியார் சித்திரப் பதுமையானார். பாட்டுக்கும் ஓவியத்துக்கும் உள்ள ஒருமைப்பாட்டை யான் கண்ணாறக் கண்டேன். சிறிது நேரத்துக்குப் பிறகு பாரதியார் விடைபெற்றுச் சென்றார்.’மகாகவி பாரதியார் கவிஞராக மட்டுமல்லாமல், தம் கவிதையை மனமொன்றிப் பாடும் மிகச் சிறந்த பாடகராகவும் இருந்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று. சாரங்கதேவர் என்பவர் எழுதிய சங்கீத ரத்னாகரம் என்ற மிகப் பழைய நூல் ஒன்று நம் இசைக்கலையின் வளர்ச்சியைப் பேசுகிறது.

இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலேயே சங்கீதக் குறிப்புக்கள் உண்டு. இசையாற்றல் நிறைந்த மகான் ஸ்ரீராகவேந்திரர் வீணை இசைக்கவும் வல்லவராயிருந்தார் என்பதை அவரது வரலாறு தெரிவிக்கிறது. வள்ளுவர் இசையால் ஈர்க்கப்பட்டவர் என்பதை அவரது திருக்குறள் தெரிவிக்கிறது என்றால் வள்ளுவர் மரபில் இன்னும் ஏராளமான தமிழ்ப் படைப்பாளிகள் இசையால் கவரப்பட்டதை வரலாறு தெரிவிக்கிறது. விலங்குகளையே வசப்படுத்தும் இசை தமிழர்களின் மனங்களை வசப்படுத்தாதா என்ன? 

- திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்