SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்

2018-11-09@ 09:45:40

சென்னை - ரத்னமங்கலம்

அம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றியேழு அம்மன்கள் அருள, நடுநாயகமாக அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்துவிட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, ‘அம்மா உனக்கு  வெல்லம் கரைத்து வைக்கிறேன். எனக்கு தொலைந்த பொருள் கிட்ட வேண்டும்‘ என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம்  இன்றும் நிகழ்கிறது. புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் ஆலயத்திற்கு சென்று வழிபடமுடியாத அன்பர்கள் இந்த ஆலயத்தின் நாயகியை வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர்.

2004ம் வருடம் ரத்னமங்கலம் லட்சுமி குபேரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றபோது லட்சுமி விக்கிரகத்தை அழகு செய்த தங்க செயின் காணாமல் போனது. அரைக்காசு அம்மனை மனதார வேண்டிக்கொண்டு அந்த செயின் கிடைத்தால் அருகிலேயே அன்னைக்கு ஆலயம் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டார்கள். மகாலட்சுமிக்கு சாத்தப்பட்ட மலர்களைக் களைந்தபோது அவற்றோடு அந்த செயின் திரும்பக் கிடைத்ததாம். அதன்படி இங்கு அந்த தேவிக்கு ஆலயம் எழும்பியது. பின் தேவியின் திருவுளப்படி அன்னையைச் சுற்றி 107 அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலயத்தில் நுழைந்ததும் வலது புறம் தல விநாயகர் அருள்கிறார். அவர் திருவுருவிற்கு நேர் எதிரே பதினெட்டாம் படி கருப்பர் கோயில் கொண்டுள்ளார்.

ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் 18ம் தேதியன்று மட்டும் இவர் சந்நதியின் கதவைத் திறந்து வைத்து விமரிசையாக வழிபாடுகள் நடக்கின்றன. மற்ற நாட்களில் எல்லாம் பூட்டிய கதவிற்கே வழிபாடு. அரைக்காசு அம்மனைச் சுற்றி புகழ்பெற்ற சக்தி தலங்களில் அருளாட்சி புரிந்து வரும் 107 தேவியர்கள், அங்கே எந்தெந்த திருவுருவில் அருள்கின்றனரோ அதே வடிவில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேவியருக்கும் விமான கலசம் உள்ளது. இதில் வடிவுடை, கொடியிடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது விசேஷம். அதேபோல காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பெண்களின் சபரிமலை தெய்வமான ஆற்றுக்கால் பகவதி, சக்குளத்துக்காவு பகவதியையும் இங்கே தரிசிக்க முடிகிறது.

இந்த அன்னையர்களுக்கு குங்கும அர்ச்சனை செய்யும் அன்பர்களுக்கு ஆலயத்தின் சார்பில் ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், ரவிக்கைத் துணி, கருப்பரின் பிரசாதமான சந்தனம், அம்மனுக்குப் பிடித்த நிவேதனமான வெல்லம் ஆகியவற்றை வைத்து பிரசாதமாகத் தருவது வழக்கம். தேவியின் கருவறை முன் ஓங்காரமான பஞ்சலோகத்தினாலான திரிசூலத்தை தரிசிக்கிறோம். அதன் முன் பலிபீடமும், சிம்ம வாகனமும் உள்ளன. அம்பிகையின் நேர் எதிரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்ரத்தின் வடிவான மேரு அமைந்துள்ளது. இந்த மேருவிற்கு பக்தர்கள் தாமே அபிஷேகம் செய்து வழிபடலாம். அர்த்த மண்டபத்தில் உள்ள விதானத்தில் 1 முதல் 108 வரை எண்கள் கொண்ட ப்ரச்ன யந்திரம் எழுதப்பட்டுள்ளது.

செவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அந்த யந்திரத்தின் கீழ் நின்று கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் இருந்து ஒரு திருவுளச் சீட்டை அன்னையை தியானித்தபடி எடுக்கிறார்கள். அதில் எந்த எண் வருகிறதோ அதற்கான பலனும் அந்த திருவுளச் சீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி பயன் அடைந்த அன்பர்கள் ஏராளம். அந்த யந்திரத்தை அடுத்து விதானத்தில் ராசி சக்கரமும், நவகிரக மண்டலமும் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் வீற்றிருக்கின்றனர். அரைக்காசு அன்னை பாசம், அங்குசம், வரத, அபயம் தாங்கி அர்த்த பத்மாசனத்தில் சாந்த வடிவினளாய் பொலிகிறாள். அன்னையின் திருவடியின் கீழ் உற்சவ விக்ரகம் உள்ளது.

கருவறையை வலம் வரும்போது கோஷ்டத்தில் முதலில் ஹயக்ரீவ சரஸ்வதியை தரிசிக்கிறோம். சரஸ்வதிதேவியை தன் மடியில் அமரவைத்து வேதங்களை தானே குருவாக இருந்து தேவிக்கு உபதேசித்தார் ஹயக்ரீவர். அந்த அரிய திருக்கோலம் இது. இந்த ஹயக்ரீவ சரஸ்வதிக்கு ஆவணி மாதம் சிரவண நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்நாளே ஹயக்ரீவ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த மூர்த்திக்கு கடலைப் பருப்பு, நெய், வெல்லம், தேங்காய், முந்திரி ஆகியவை கலந்த ஹயக்ரீவபிண்டி எனும் நைவேத்யம் படைக்கப்படுகிறது. வாதிராஜர் எனும் மகான் இந்த ஹயக்ரீவபிண்டி எனும் நிவேதனத்தை பாத்திரத்தில் இட்டு, தன் தலைமீது வைத்துக்கொண்டு, ஹயக்ரீவரை நினைத்து துதிக்க, ஹயக்ரீவர் குதிரை வடிவில் வந்து அவர் முதுகு பக்கத்திலிருந்து அவர் தோள்களில் தன் முன்னங்கால்களை வைத்து அந்த நிவேதனத்தை விரும்பி சாப்பிடுவார் என பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய விசேஷமான பிரசாதத்தை இத்தலத்திலும் ஹயக்ரீவ மூர்த்திக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

அடுத்து ஸ்வயம்வரா பார்வதி தேவியை தரிசிக்கிறோம். பரமேசுவரனை ஆலிங்கனம் செய்த நிலையில் அற்புதமான வடிவில் அம்பிகை அருள்கிறாள். மதங்கமுனிவரின் மகளான மாதங்கியாக, மலையத்துவஜ பாண்டியனின் மகளாக மீனாட்சியாக, ஒரு பருக்கைகூட உண்ணாமல் தவமிருந்த அபர்ணாவாக, இப்படி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தன் மனதிற்குப் பிடித்த ஈசனையே மணாளனாகப் பெற்றவள் இந்த தேவி. அதனால் தொடர்ந்து 12 வாரங்கள் இந்த அன்னையை தரிசிக்கும் திருமணமாகாத கன்னியருக்கு உடனே திருமணம் கூடிவருகிறது. மணவாழ்வில் விரக்தி கண்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதியும் இந்த அன்னையை தரிசித்திட வேற்றுமை மறைந்து இல்வாழ்வில் இனிமை காண்கின்றனர். மூன்றாவதாக லட்சுமி நாராயணர், தன் கால் கட்டை விரலை அழுத்தி ஊன்றி நின்ற நிலையில் அருள்கிறார். லட்சுமி தேவியும் அவ்வண்ணமே காட்சி தருகிறாள்.

லட்சுமிதேவி அஷ்டோத்திரத்தில் சபலாயை நமஹ என்றும் சஞ்சலாயை நமஹ என்றும் நாமங்கள் வரும். ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பவள் இவள். ஆனால் திருமால் உள்ள இடத்தில் நிலைகொள்பவள். அதன்படி இங்கு திருமாலோடு அருள்புரிகிறாள். தொலைந்த பொருள் கிடைக்க மட்டும் அல்ல, புத்தி, உடல்நலம், நிம்மதியான மணவாழ்வு, மகப்பேறு, வளங்கள், மறுமையில் மோட்சம் என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை.  அம்பிகை உபாசனையை பரப்பியவர் ஹயக்ரீவர், ஸ்ரீசக்ரமேருவில் உள்ள வசின்யாதி வாக்தேவதைகள்தான் திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றினர்.

அந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தினால் துதிக்கப்பட்ட திருமீயச்சூர் லலிதாம்பிகையும் இத்தலத்தில் அருள்கிறாள். இப்படி மூவரும் ஓரிடத்தில் அருளும் அற்புதத் தலம் இது. கொல்கொத்தா காளி, ஆயிரங்கை காளி, கல்யாண வரம் தரும் கல்யாண மாரியம்மன், ராகுகேது தோஷம் போக்கும் நாகாத்தம்மன், கருமாரியம்மன், பத்மாவதி, வகுளாதேவி ஆகியோருடன் துலங்கும் இக்கோயில் ஒரு மகத்தான சக்திபீடமாக திகழ்கிறது. வண்டலூர் மிருகக்காட்சிசாலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் பாதையில் தாகூர் இன்ஜினிரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் சாலையில் அரை கி.மீ.ல் உள்ளது இத்தலம்.
 
ந.பரணிகுமார்

படங்கள்: ரமேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pune1

  புனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

 • hathraas1

  நாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை!: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா?

 • chinamartyrs1

  நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..!!

 • arch1

  அர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..!!

 • 01-10-2020

  01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்