SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சக்தி தரும் நவராத்திரி

2018-10-10@ 14:47:16

ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானஸாதேவி காப்பாற்றினாள். நவராத்திரி காலத்தில் இத்தேவியின் சரிதத்தைப் படிப்பவர்க்கு ராகுகேது, காலசர்ப்ப தோஷங்கள் நீங்கும். கொலுவில் முதல் மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வத் திருவுருவங்கள் சத்வ குணத்தை நாம் அடைய வழி காட்டுகின்றன. நடு மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், அரசி, மந்திரி பொம்மைகள் ரஜோகுணத்தைக் குறிக்கும். கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, விளையாட்டுச் சாமான்கள் தாமச குணத்தைக் குறிக்கும். நவராத்திரி காலத்தில் நமது இல்லத்துக்கு வரும் பெண்கள் அனைவரும் தேவியின் வடிவமே. அவர்களுக்கு சோழி, கட்டைப்பவழம், குன்றுமணி, செப்பு, கிளிஞ்சல் போன்ற மங்கலப் பொருட்களை வழங்கலாம்.

நவராத்திரி விரதத்தை மேற்கொண்டுதான் திருமால், மது&கைடபர் எனும் இரு அசுரர்களைக் கொன்றார். ராமபிரான் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தபின்பே இலங்கை செல்ல அவருக்கு வழி கிடைத்தது. ஆதிபராசக்தியின் அருளாலேயே மும்மூர்த்திகளும் முத்தொழிலையும் புரிவதால் கல்வி, செல்வம், வீரம் பெற விரும்புவோர் நவராத்திரி பூஜையைக் கடைப்பிடிக்கலாம். பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் நவராத்திரியை, 16 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒன்பதாம் நாள், ஆயுதபூஜையன்று ஜகந்நாதரின் சங்கு சக்கரங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நவராத்திரி ஒன்பது நாட்களிலும் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்வது நலம். முடியாவிட்டால் ‘நாயகி நான்முகி நாராயணி...’எனும் 50வது பாடலையாவது பாடலாம்.

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி, ஆடியில் ஆஷாட நவராத்திரி, மாசியில் மாதங்கி நவராத்திரி, சித்திரையில் வசந்த நவராத்திரி என நவராத்திரி நான்கு முறை கொண்டாடப்படுகிறது. வைணவ ஆலயங்களில் பெருமாளுக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. வடநாட்டில் நவராத்திரிக்கு முதல் நாளே சின்னச் சின்ன மண் தொட்டியில் நவதானியங்களைக் கலந்து பாலிகை வளர்ப்பார்கள். ஒன்பது நாட்களும் தேவி பூஜையின்போது அம்பிகையின் முன் அந்தப் பாலிகை தொட்டியை வைப்பர். விஜயதசமியன்று அதை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பர். இதனால் வீட்டில் மங்களங்கள் பெருகும். கோவை, சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் ஆலயத்தில் நவராத்திரி முதல்நாளன்று கலசம் வைத்து பொம்மைக் கொலு வைக்க அம்மனின் உத்தரவு கிடைத்தால்தான் விநாயகர் பொம்மையை வைத்து தொடங்குகிறார்கள்.

இல்லையெனில் அந்த வருடம் கொலு வைபவம் இல்லை. உடுப்பி கிருஷ்ணனுக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் மைசூர் மகாராஜா சமர்ப்பித்த பட்டுப் புடவைகளை அணிவிக்கிறார்கள். கும்பகோணம் நாச்சியார் கோயில், வஞ்சுளவல்லித் தாயாருக்கு நவராத்திரி நாட்களில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து அதிமதுர பாயசமும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஜைன மதத்தில் சரஸ்வதி வஜ்ர சாரதா, சுருதிதேவி, ஜீன சரஸ்வதி, ஜீனவாணி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள். ஜப்பான் நாட்டிலும் பொம்மைக்கொலு ஹினாமட்சூரி எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. ஐந்து அல்லது ஏழு படிகளில் சிவப்பு நிற துணி விரித்து ஹினா எனப்படும் பொம்மைகளை அழகாக அடுக்கி வைக்கிறார்கள். அமேஸேக் எனும் பாரம்பரிய பானமும் அரிசி கேக்கும் சோயா சாஸும் நிவேதனங்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி (7,8,9) நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் அஷ்டமியன்றாவது  தேவியை ஆராதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்