SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவருள் பொழியும் தேவிமகாத்மிய தேவியர்

2018-10-10@ 14:36:55

அபூர்வ ஸ்லோகம்

அம்பிகையின் பெருமைகளைப் போற்றும் துதிகளில் தலையாயது தேவி மஹாத்மியம். எழுநூறு ஸ்லோகங்கள் அடங்கிய இந்தத் துதியை பாராயணம் செய்தால் கிட்டாதது ஏதுமில்லை. பதிமூன்று அத்தியாயங்களில் பரதேவதையின் பராகிரமங்களைப் பாடும் இத்துதியை அச்சிட்ட புத்தகத்தை வைத்திருந்தால் கூட பாராயணம் செய்த பலன்கள் உண்டு என்பார்கள். அந்த 13 அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிதேவதை உண்டு.

அந்தந்த அத்தியாய பாராயண பலன்களைத் தருபவர்கள் அந்த அதிதேவியர்தான். அவர்களை அறிந்து பூஜித்த பின்பே தேவியின் பராக்ரமங்களைக் கூறும் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும் என்பது விதி. அந்த 13 தேவியரும் துர்க்கா தேவி திருவருட்பாலிக்கும் ஜெயலோகத்தின் நான்காம் பிராகாரத்தில் வீற்றிருந்து இந்த உலகத்தை பரிபாலனம் செய்வதற்காக பராம்பிகைக்கு உதவுகின்றனர். நவராத்திரி நன்னாளில் தேவியரின் உருவை மனதில் நிறுத்தியும் அல்லது சித்திர படமாக வரைந்தும் தியான மந்திரங்களை சொல்லி மலரால் அர்ச்சித்து வணங்கினால் நெஞ்சில் பூத்தமர்வாள். நிலைத்த வாழ்வை நோக்கி நகர்த்துவாள்.   

ஒன்றாம் அத்தியாய தேவதை - மகாகாளி

தியான ஸ்லோகம்  

கட்கம் சக்ர கதேக்ஷு சாப பரிகான் சூலம் புசுண்டிம் சிர:
சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தேஹரௌ
நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மகாகாளிகாம்.

தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுந்த தலை, சங்கு, போன்றவற்றை ஏந்தியருளும் மஹாதேவி காளியே, தேவி மஹாத்மியத்தின் முதல் அத்தியாய பாராயண பலனைத் தருபவள். இந்த அம்பிகை பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தேகத்துடன் திகழ்பவள். சர்வாலங்கார ரூபிணியாய தன் திருமுகங்களில் உள்ள கண்களால் கருணைமழை பொழியும் இத்தேவியின் திருவருள் கிட்டிவிட்டால் உலகில் கிட்டாதது எதுவுமே இல்லை. இந்த தேவியை வணங்குபவர்கள் புரியும் தொழிலில் முனைப்பு, ஊக்கம் எல்லாம் தாமே உண்டாகும்.

தன் பக்தர்களின் பாவங்களைப் போக்கி, அரவணைத்து நல்வழி காட்டுபவள் இந்த அம்பிகை. தன்னை ஆராதிப்போருக்கு சுறுசுறுப்பு, திடபக்தி, செல்வவளம், முக்காலங்களையும் உணரும் திறன், நீண்ட ஆயுள் போன்றவற்றை அருள்பவள் இவள். வேதாந்தத்தின் முடிவான ஸத்ஸ்வரூபிணியும் இவளே. பக்தர்களை சகலவிதமான பயங்களிலிருந்தும் காத்தருளும் பகவதி இவள். விக்ரமாதித்தன், ராமகிருஷ்ணபரமஹம்ஸர் போன்றோர் காளியை உபாசித்தே பெயரும் புகழும் பெற்றது வரலாறு. மூச்சுக்காற்றையே காளியாக எண்ணி உபாசனை செய்தால் மஹாகாளியின் திருவருள் சீக்கிரமே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம்.

இரண்டாம் அத்தியாய தேவதை - மஹாலட்சுமி

தியான மந்திரம்

அக்ஷஸ்ரக் பரசும் கதேக்ஷூ குலிசம்
பத்மம் தனு : குண்டிகாம்
தண்டம் சக்தி மஸிஞ்ச சர்ம ஜலஜம்
கண்டாம் ஸுரா பாஜனம்
சூலம் பாச ஸுதர்சனே ச தததீம்
ஹஸ்தை: ப்ரவால ப்ரபாம்
ஸேவே ஸௌரிப மர்த்தினீ மிஹ
மஹாலக்ஷ்மீம் ஸரோஜஸ்திதாம்.

தேவி மஹாத்மியத்தின் 2வது அத்தியாய பாராயண பலனைத் தரும் தேவி இந்த மகாலட்சுமி. இவள் திருமகளின் நாயகியான திருமகள் அல்ல. அனைத்துக்கும் ஆதியான சண்டிகா. மகாலட்சுமி, மகாகாளி, மகாசரஸ்வதி போன்றோரின் சரித்திரங்களை விளக்கும் உன்னதமான தேவி மஹாத்மியத்தின் நடுநாயகமான தேவதை. அக்ஷமாலை, பரசு, கதை, அம்பு, குலிசம், தாமரை, வில், கமண்டலம், தண்டம், வேல், வாள், சங்கம், சர்மாயுதம், மணி, மதுபாத்திரம், சூலம், பாசம், சக்கரம் போன்ற ஆயுதங்களை தன் கர கமலங்களில் ஏந்தி அனவரதமும் தன் பக்தர்களைக் காப்பவள்.

மகிஷத்தின் மீது அமர்ந்த தாமரையில் நின்றருள்பவள். இவளுடைய கடைக்கண் பார்வை உலகியல் வாழ்வியல் ஆனந்தத்தையும் என்றும் மாறா ஆத்மானந்தத்தையும் தரும். தெய்வ நம்பிக்கை கொண்டோரிடம் வாசம் செய்யும் தேவி இவள். இவளே ஞான வடிவினள். மஹிஷாசுரனின் சைன்யத்தை வதைத்தருளியவள். அதே போல பக்தர்களின் துன்பங்களையும் வதைப்பவள். இத்தேவியை வழிபட பெருஞ்செல்வமும், பேரின்பமும் கிட்டும்.

மூன்றாம் அத்தியாய தேவதை திரிபுரபைரவி

தியான ஸ்லோகம்

உத்யத்பானு ஸஹஸ்ரகாந்திம்
அருணக்ஷௌமாம் சிரோமாலிகாம்
ரக்தாலிப்த பயோதராம் ஜபவடீம்
வித்யாமபீதிம் வரம்
ஹஸ்தாப்ஜைர் தததீம் த்ரிநேத்ரவிலஸத் வக்த்ராரவிந்தச்சியம்
தேவீம் பக்த ஹிமாம்சு ரத்னமுகுடாம் வந்தேரவிந்தஸ்திதாம்.

தேவி மஹாத்மியத்தின் மூன்றாவது அத்தியாய தேவதை இந்த திரிபுரபைரவி தேவி. இத்தேவி ஒரு கையில் அக்ஷமாலையையும் மறு கையில் புஸ்தகத்தையும் மற்ற இரு கைகள் அபய வரதம் ஏந்தியும் திருக்காட்சி அளிக்கிறாள். இவள் அருள் பெற்றால் எல்லாமே கிடைக்கும். சகலவித அலங்காரங்களோடு தோற்றமளிக்கும் இந்த அம்பிகை மண்டையோட்டு மாலையை தரித்துக் கொண்டிருப்பதேன்? மண்டையோட்டைப் பார்க்கும் எவருக்குமே மரணபயம் தோன்றும். பைரவிதேவி ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவாக ம்ருத்யுஞ்ஜயையாக இருப்பவள்.

பக்தர்களின் மரணபயத்தைப் போக்கவே அபயம் அளிக்கிறாள். ஆன்ம சக்தியை உணர்பவர்களுக்கு மரணபயமே இருக்காது என்பதை உணர்த்தவே மண்டையோடும் அதன் மேல் காணப்படும் ரத்தமும்.இதனால் சாகா நிலையிலிருக்கும் உயிர்சக்தியளிப்பவள் தானே என்றும் காட்டுகிறாள். மூலாதாரத்தில் உபாசிக்கப்படுபவள் பைரவி. ஆதாரம் பலமாக இருந்தால்தான் அதன் மேலுள்ளவைகளும் நிலையாக நிற்கமுடியும். எல்லாவற்றையும் தாங்கும் தேவியின் திருவருளால் ஆரம்பம் தெய்வீக சக்தியுடனிருப்பின் முடிவும் தெய்வீகத்திலேயே சிறப்பாக முடியும்.

ஜாதவேதஸே எனும் வேத மந்திரத்தால் இத்தேவியைத் துதிக்க கிரகபீடைகளிலிருந்து நிவாரணமும், தனலாபமும் சகல சம்பத்துகளும் கிட்டும். இவளின் அருட்கருணையால் எண்ணியது ஈடேறும். முக்காலங்களையும் உணரும் ஆற்றலையும் பெறலாம்.  மூன்றாவது அத்தியாய பாராயணபலனைத் தரும் தேவியும் இவளே. சிவந்த பட்டாடை உடுத்தி, ஆயிரம் சூரிய பிரகாசத்துடன், முக்கண்களுடன், புன்முறுவல் பூத்த முகத்துடன் கூடிய திரிபுரபைரவி நம்மை கண்களை இமைகள் காப்பது போல் காப்பாளாக!

நான்காம் அத்தியாய தேவதை: ஜெயதுர்க்கா

தியான மந்திரம்

காலாப்ரபாம் கடாக்ஷைரரிகுல பயதாம்
மௌலிபத்தேந்து ரேகாம்
சங்கம் சக்ரம் க்ருபாணம் த்ரிசிகமபி கரை
ருத்வ ஹந்தீம் த்ரிநேத்ராம்
ஸிம்ஹஸ்கந்தாதிரூடாம் த்ரிபுவன
மகிலம்
தேஜஸா பூரயந்தீம்
த்யாயேத் துர்க்காம் ஜயாக்யாம் த்ரிதசபரிவ்ருதாம்
ஸேவிதாம் ஸித்திகாமைஹி

தேவர்களும் அனைவரும் கூடி இந்த தேவியை துதித்து பேறு பெற்றனர். இத்தேவியின் மந்திரத்திற்கு பிரம்மதேவன் ரிஷியாவார். அன்னை சிம்ம வாஹினியாக காட்சிதரு கின்றாள். சங்கு, சக்கரம், வாள், த்ரிசூலம், ஆகிய ஆயுதங்களோடு நான்கு கரங்களாலும் பக்தர்களைக் காத்தருள்கிறாள். அஷ்டமா சித்திகளையும் வேண்டும் பக்தர்களுக்கு அதை அருளும் அன்னை இவள். இத்தேவியின் மந்திரம் ரக்ஷாகரமானது. இந்த மந்திர பாராயணபலனால் பக்தர்கள் தீவினைகள் நீங்கி இன்புறுகின்றனர். இத்தேவியின் மந்திரத்தில் துர்க்கே துர்க்கே என இருமுறை தேவியின் திருநாமம் வருவதால் எத்தகைய கொடிய துன்பங்களும் பக்தரை விட்டு நீங்கும். இத்தேவியின் அருள் கிட்டிட எங்கும் எதிலும் வெற்றியே கிட்டும். விதியை சரியாக்கும் அனுகிரகம் செய்யக்கூடிய சக்தியும் கிட்டும். தேவி மஹாத்மியத்தின் 4ம் அத்தியாய பாராயண பலனைத் தரும் அம்பிகையும் இவளே.

ஐந்தாம் அத்தியாய தேவதை: மகாசரஸ்வதி

கண்டா சூல ஹலானி சங்க முஸலே சக்ரம் தனு: ஸாயகம்
ஹஸ்தாப்ஜைர் தததீம் கனாந்த விலஸச் சீதாம்சு துல்ய ப்ரபாம்
கௌரீ தேஹ ஸமுத்பவாம் த்ரிஜகதாம் ஆதார பூதாம் மஹா
பூர்வா மத்ர ஸரஸ்வதீம் அனுபஜே சும்பாதி தைத்யார்த்தினீம்

மணி, சூலம், உலக்கை, சங்கு, கலப்பை, சக்ரம், வில், அம்பு, போன்ற திவ்யாயுதங்களை தன் கரங்களில் ஏந்திய இந்த மகாசரஸ்வதி தேவியே, தேவி மஹாத்மியத்தின் ஐந்தாவது அத்தியாய பாராயணபலனைத் தருபவள். நல்லறிவு, செல்வங்கள் போன்ற உயர்ந்தவற்றை  பக்தர் களுக்கு அளிப்பவள். ஐம், ஹ்ரீம், ஹ்ராம் என்ற பீஜ மந்திரங்களில் பிரியமுள்ளவள். ஞானமாகிய மடமையைப் போக்குபவள், மங்களங்களை வாரி வாரி வழங்குபவள். வழிபடுவோர் வாழ்வில் மகிழ்ச்சியை அளிப்பவள்.

பக்தர்களின் உள்ளத் தாமரையில் இந்த தேவியை ஏத்திப் பணிவோர்க்கு சகல கலைகளும் சித்திக்கும். இத்தேவியின் அருள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும். உண்மையான பக்தர்களின் இதயத்தில் வாசம் செய்வதில் விருப்பமுள்ளவள் இத்தேவி. பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளையும் சஞ்சலங்களையும் தேவியின் முகத்தில் காணப்படும் மாறா புன்னகையே ஓட்டிவிடும். இவள் பல்வேறு விதமான தேவியரை தன் உடலிலிருந்து தோற்றுவித்து சும்ப&நிசும்பரை வதம் புரிந்தவள் பார்வதியின் தேகத்திலிருந்து தோன்றிய கௌசிகி எனவும் இவள் போற்றப்படுகிறாள்.

ஆறாம் அத்தியாய தேவதை: பத்மாவதி

தியான ஸ்லோகம்
நாகாதீச்வர விஷ்டராம் பணிபணோத்
தம்ஸோரு ரத்னாவலீ
பாஸ்வத் தேஹலதாம் திவாகரநிபாம்
நேத்ர த்ரயோத் பாஸிதாம்
மாலா கும்ப கபால நீரஜ கராம்
சந்த்ரார்த்த சூடாம்பராம்
ஸர்வக்ஞேச்வர பைரவாங்க நிலயாம்
பத்மாவதீம் சிந்தயே.

தன்னை வணங்கும் பெண்களுக்கு குழந்தை வரம் தருவதில் நிகரற்றவள். ஜைன மதத்தினரால் போற்றப்படுபவள். யக்ஷிணீ தேவிகளுள் உபாசிக்கத் தகுந்த தேவி இவள். நாகம் குடைபிடிக்க, முக்கண் கள்கொண்டு, கைகளில் சந்திரன், கபாலம், ஜபமாலை, கும்பம் ஏந்தி, நாய் வாகனத்தோடுகூடிய பைரவரின் தோள்களின் மீது ஆரோகணித்திருப்பவள். சர்வாலங்காரங்களுடன் நான் இருக்க பயமேன் என்று கேட்கும் தோரணையில் திருக்கோலம் கொண்டுள்ளாள்.

கர்நாடகத்தில் பத்மாவதி வழிபாடு பிரசித்தி பெற்றது. ஆவணி மாத வெள்ளிக்கிழமை களிலும் மூல நட்சத்திர தினத்தன்றும் பக்தர்கள் இவள்திருவுருமுன் தங்கள் கோரிக்கைகளை மனதால் நினைத்து வேண்டி நிற்க, தேவி தன் உடலிலிருந்து பூவைத் தள்ளி உத்தரவு தரும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. பைரவரோடு கூடிய இந்த பத்மாவதி, தேவி மஹாத்மியத்தில் தூம்ரலோசனனை அழித்த ஆறாம் அத்தியாயத்தின் தேவைதையாக
கொண்டாடப்படுகிறாள்.

ஏழாம் அத்தியாய தேவதை : மாதங்கி


தியான மந்திரம்
த்யாயேயம் ரத்னபீட சுககலபடிதம்
ச்ருண்வதீம் ச்யாமலாங்கீம்
ந்யஸ்தை காங்க்ரீம் ஸரோஜே
சசி சகலதராம் வல்லகீம் வாதயந்தீம்
கஹ்லாரா பத்தமாலாம் நியமித
விலஸச் சோலிகாம் ரக்த வஸ்த்ராம்
மாதங்கீம் சங்கபாத்ராம் மதுர மதுமதாம்
சித்ரகோத் பாஸிபாலாம்.

தேவி மஹாத்மியத்தின் ஏழாவது அத்தியாய தேவதையாக மாதங்கி போற்றப்படுகிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள். எப்பொதும் தவழும் புன்முறுவலுடன், சற்றே சுழன்று மயக்கும் விழியுடையவளாக இவள் துலங்குகிறாள். கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக் கொண்டு தன் இரு கரங்களால் அதை இசைத்தும்,

தோள்களில் கொஞ்சும் கிளியையும் ஏந்தி அருட்கோலம் காட்டும் அன்னை இவள். சர்வாலங்கார பூஷிதையாய் தேவி வீற்றிருக்கிறாள். மரகதமணியின் நிறத்தைப் போன்று ஜொலிக்கும் பச்சைநிற மேனியவள். இத்தேவியின் வழிபாட்டில் உலக இன்பங்கள் துறக்கப்படுவதில்லை. ஆனால், உலகியல் என்ற சகதியிலும் உபாசகன் வீழ்ந்து விடுவதில்லை. மித மிஞ்சிய செல்வமும், ஞானமும், நல்ல புகழும், முக்தியும் தரவல்ல மதங்க முனிவரின் மகளான மாதங்கி அடியவரைக் காப்பாள்.

தொகுப்பு: ந. பரணிகுமார்

படங்கள்: ஸி.ஏ.ராமச்சந்திரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்