SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்மாவைப் பற்றிப் பேசுபவையே வேதங்கள்!

2018-09-14@ 17:01:59

சக்தி தத்துவம் - அபிராமி அந்தாதி

உறைகின்ற நின்திருக் கோயில்நின்
கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சகமோ என்தன் நெஞ்சகமோ
    மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே (பாடல் 20)

இறைவனின் விலாசத்தை அறிய எல்லோருக்கும் விருப்பம். இதற்குக் காரணம், நம் ஆசைகளை நிறைவு செய்து கொள்ளவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவுமாம், அப்படி தீர்வு காண செய்ய வேண்டியவை, தள்ள வேண்டியவை, தேவையான பொருள், எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒவ்வொருவருக்குமான வழிபாட்டைப் பற்றி சந்தேகங்கள் தோன்றுவது இயல்பு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம்மால் இது முடியுமா, பிறர் இதை நமக்காக செய்தால் சரியாக செய்வார்களா? இதுவரை செய்த ஒன்றும் பயன் அளிக்கவில்லையே என்ற அனுபவ விரக்தியும் உண்டு.

இதை எல்லாம் தாண்டி வழிபாடு செய்தாலும் அதை முறையாக செய்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்வதற்கு சிலவற்றை நாம் நம்ப வேண்டியுள்ளது. இதே நிலைதான் அபிராமிபட்டருக்கும். அதனால்தான் இப்பாடல் முழுவதும் ‘ஓ’காரத்தை பயன்படுத்தி வியப்பையும், கேள்வியையும் நமக்குள்ளே எழுப்புகிறார் பட்டர் அவ்வாறு தோன்றினாலும் முடிவில் ஒரு தெளிவை நமக்குத் தருகிறார். தான் உணர்ந்ததை பிறருக்கு உணர்த்துவதற்காக தேவ ரகசியத்தை வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக (‘பரிபாஷை’) ஒரு குறிப்பிட்ட தகுதி உள்ளோர் இறையருள் சார்ந்து, குருவருள் முயற்சியுடன் புரிந்து கொண்டால் மட்டுமே இப்பாடல் அனுபவச் சாத்தியப்படும்.

இறைவியை அடைய உதவும் சாதனமாக வேதம், வேதாங்கம், வேதாந்தம் என்கின்ற சாத்திரங்களையும் அதனால் அடையும் பயனாக மகிழ்ச்சி தரும் சந்திரன், தாமரை, மனது, பாற்கடல் என்று ஒன்பது குறிப்புகளை நமக்குத் தருகிறார். இதைக் கொண்டு பக்குவம் உள்ள யாவரும் இதில் ஏதேனும் ஒன்றைப் பற்றி, பட்டர் கூறும் இறை உண்மை அனுபவத்தை அடைந்து விடலாம் என்பது உறுதி.‘‘உறைகின்ற’’ - அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற பாலில் மறைந்திருக்கும் நெய் போல் உமையம்மையானவள் வெளிப்படையாக தோன்றாமல் மறைந்திருப்பதே அவளுடைய உண்மையான வடிவமாகும்.

அந்த (‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத’ - பாடல் 87) வடிவத்தை ஆன்மாக்கள் அனைவரும் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம், புத்தி இவற்றுக்குப் புலப்படும்படி உமையம்மையின் அருளாலே பெறப்பட்ட ஆகமங்கள் கூறியபடி கட்டப்பட்ட ஆலயத்தில் விளங்கி புரியும்படி தோன்றுவாள். ‘கண் களிக்கும் படி கண்டு கொண்டேன்’ ( பாடல்- 70) என்று தெளிவாக உமையம்மை விளங்கி தோன்றியதை கூறுகின்றார். பிறர் அறிய தோன்றுகிற எளிய வடிவத்தை குறிப்பதற்காகவே ‘உறைகின்ற’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார்.

‘‘நின்திருக்கோயில்’’ - கோயில் என்பது இறைவன் வசிக்கின்ற இடம்.  வசிப்பது என்பது மூன்று வகை. நிரந்தரமாய் வசிப்பது, தற்காலிகமாய் வசிப்பது, வணங்குவோர் இருக்கும்வரை வசிப்பது. உமையம்மை நிரந்தரமாய் வசிப்பது - சூரியன், சந்திரன், ஆன்மா, பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். உமையம்மை தற்காலிகமாக வசிக்குமிடம் - ஆலயங்கள். வணங்குவோர் இருக்கும்வரை வசிப்பது - உபாசகன் வீடு. ‘பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்’ (பாடல்- 680); ‘எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே’ (பாடல் - 16); ‘வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்’ (பாடல் 99) ஏன்று நிரந்தரமான
வசிப்பிடத்தைக் குறிப்பிடுகிறார்.

தற்காலிக வசிப்பிடம் என்பதை ‘நின் திருக்கோயில்’ என்று குறிப்பிடுகிறார். பிற தேவதைகளுக்கும் கோயில் இருப்பதனால் அவற்றை நாம் கருதிவிடப் போகிறோம் என்பதற்காக ‘நின்’ என்று, முக்கியமாக உமையம்மை கோயிலை மட்டுமே குறிப்பிடுகின்றார். அதிலும் பிற கோயில்களை நீக்கி அம்மன் சந்நதியை மட்டும் குறிப்பிடுகிறார்.‘உறைகின்ற நின் திருக் கோயில்’ என்று அம்பாள் தற்காலிகமாக தங்குகின்ற கோயிலை குறிப்பிடுகிறார். கோயில் என்றாலே அது இறைவன் உறையும் இடமல்லவா? ‘உறைகின்ற நின் திருக்கோயில்’ என்று ஏன் கூறுகிறார்? ஒரு கோயிலில் பூஜை நடக்காதபோது இறைவன் அங்கு தங்குவதில்லை, பூஜை நேரத்தில் மட்டுமே தங்குகிறார்.

இதை ஆகமங்கள் ‘யாவத் பூஜா வசானகம்’ என்று குறிப்பிடுகின்றன. பூஜை நடக்காவிடில் கோயில் கலசத்தில் தங்கியிருப்பாள்; ஒரு பட்சத்துக்கு மேல் பூஜை நடக்காதிருந்தால் கோயில் ஸ்தல விருட்சத்தில் தங்கியிருப்பாள்; ஒரு வருஷத்துக்கு மேல் நடக்காதிருந்தால் கோயில் கொடி மரத்தில் தங்கியிருப்பாள்; பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் நடக்காதிருந்தால், அர்ச்சகர் வீட்டிலோ, இல்லை மயானத்திலோ தங்கியிருப்பாள் என்கிறது ஆகமம். அந்த வகையில் ‘உறைகின்ற நின் திருக் கோயில்’ என்றதால், பூஜை நல்லபடியாக, தினப்படி செம்மையாக நடக்கின்ற கோயிலே ‘திருக்கோயில்’ என்றறியலாம்.

மேலும் அவர் ஒரு பரிசாரகர் என்பதால் பூஜை இல்லா கோயில் இருப்பதையும், செம்மையுற பூஜைகள் நடப்பதையும் நன்கு உணர்ந்திருப்பார். அவர் உபாசகர் என்பதனால் அதை பிறருக்கு வலியுறுத்தவே ‘உறைகின்ற நின் திருக் கோயில்’ என்கிறார்.‘‘நின் கேள்வர் ஒரு பக்கமோ’’ - உமையம்மையும், சிவபெருமானும் சூரியனையும், அதன் ஒளியையும் போன்றவர்கள். அபிராமி பட்டரோ இப்பாடலில் உமையம்மை உறைகின்ற இடத்தையெல்லாம்  வரிசைப்படுத்தி குறிப்பிடுகிறார். சிவபெருமானுடன் அம்பாள் இருப்பது என்பதை மூன்றாக பகுத்து உணர வேண்டும்.

அம்பிகை, ஒன்றாய் உறைவாள், உடனாய் உறைவாள், வேறாய் உறைவாள். சிவபெருமானுடன் ஒன்றாக உறைவது. அர்த்த நாரீஸ்வரர் உடனாக உறைவது, சோமாஸ்கந்தர் என்ற சிவத்திருமேனியில் மட்டுமே.  இது ஆகம கருத்து. இதை உணர்ந்தவர் அபிராமிபட்டர். அந்த அம்மைக்கே உமா என்பது பெயர். அவள் எப்பொழுதுமே இடப்பக்கத்தில் இருப்பாள். இவளையே, ‘இடப்பாகம் கலந்த பொன்னே’ (படல்- 46) என்கிறார். வேறாக தனியாக இருப்பவள் என்பது எல்லா கோயில்களிலும் உள்ள உடனுறை என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுகின்ற அம்பாளாகும். அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர், மீனாம்பிகா சமேத ராஜசேகர சாமி என்பது போல. இந்த மூன்றையுமே அபிராமி பட்டர், ‘உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில்’ (பாடல் - 31) என்கிறார்.

‘‘அறைகின்ற நான்
மறையின் அடியோ’’

- ‘‘அறைகின்ற’’ என்பதால் வேதங்கள் எழுதப்படுபவை அல்ல, சொல்வதை கேட்பதன் மூலமாகவே வேதத்தை பயிலவும் பயிற்றுவிக்கவும் செய்வர். அதை கருத்தில் கொண்டே எழுதப்பட்ட பிற சாத்திரங்களில் இருந்து நீக்கி சிறப்பாக வேதத்தை குறிப்பிட சொல்கின்ற என்ற பொருள் கொண்ட ‘‘அறைகின்ற’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.‘‘நான்மறை’’ என்கின்ற வார்த்தையால் நான்கு என்ற எண்ணையும் ‘‘மறை’’ என்கின்ற சொல்லால் வேதம் என்பதையும் சூட்டுகிறார். நான் மறை என்பதனால் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற பொருள் கொண்ட நான்கு வேதங்களைக் குறிப்பிடுகிறார்.

நான்கு என்று குறிப்பிடுவதால் வேதம் எத்தனை என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமான கருத்துடையோர் உள்ளனர். ‘த்ரயிமயாய’ (மூன்று வேதங்களின் வடிவமான), ‘அனந்தாவை வேதாஹா’ (பலவாகிய வேதங்கள்), என்ற கருத்துகளிலிருந்து மாறுபடுவதற்காகத்தான் நான்மறை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய வேதங்களை ஏற்று அதர்வண வேதத்தை ஏற்காத காரணம், அதில் துன்புறுத்துகின்ற சில மந்திரமும், மருத்துவமும், மந்திரவாதமும் அடங்கியிருப்பதாக கருதியதால் அதை வேதமாக கருதாது விலக்கிய காலம் இருந்தது.

ஆனால், சாக்த தந்திரங்கள் பெரும்பாலும் அதர்வண வேதத்தை முதன்மையாகக் கொண்டதாகும். சக்தி உபாசகராகிய அபிராமிபட்டர் அவ்வேதத்தை அங்கீகரித்ததால்தான் ‘நான் மறை’ என்று குறிப்பிட்டார். அதர்வண ப்ரத்தியங்கிரா என்ற உமையம்மை வழிபாட்டிலிருந்து அதை அறியலாம். ‘மறை’ என்ற சொல் ஆகம மந்திரத்தையும் குறிக்கும். பிறர் அறியாமல் ரகசியமாக செவிக்கு புலனாகா வண்ணம் மந்திரங்களை உச்சரிப்பதால் ‘மறை’ என்கிறார். ஆகம மந்திரங்களை நீக்கி, வேத மந்திரத்தின் வழியே வழிபாடு செய்வதை வலியுறுத்தவே ‘நான்மறை’ என்றார்.

‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு’ (பாடல் 79) என்பதால் இதை நன்கு அறியலாம். நான்மறை என்ற சொல்லால் நல்லதை செய்யக்கூடிய, அறிய முடியாததாகிற ஆனால் உடலுள் மறைந்திருக்கிற ஆன்மாவை பற்றிப் பேசுவதால் வேதங்களுக்கு நான்மறை என்று பெயர். உலகின் அடிப்படை வித்தான மறைந்திருக்கும் அறிவை, அறிதலை, அறிய வேண்டியதை, அறிய இயலாவண்ணம் மறைந்திருக்கும்பரம்பொருளை விளக்குவதால் மறை என்று பொருள்.
‘‘அடியோ’’ என்ற வார்த்தையால் வேத அங்கமாகிற வியாகரணம் (இலக்கணம்) சந்தஸ் (யாப்பு) நிருக்தம் (சொற்பொருள்) சிக்‌ஷா (பயில் முறை) ஜோதிஷம் (கால முறை) கல்பம் (வேள்வி செய்முறை) இவைகளை விலக்கும் சாத்திரங்களைக் குறிப்பிடுகின்றார்.

மேலும் ‘‘அடியோ’’ என்கிற வார்த்தை பூர்வமீமாம்சா என்ற சாத்திரத்தையும் குறிப்பிடுவதாகும். இச்சாத்திரமானது இன்புற்று வாழ இறையருள் நோக்கி செயல்படும் வேள்வி செய்வதையே வலியுறுத்துகின்றது. ‘‘அவி உண்ணும்’’ - 77 (வேள்வியில் இறைவன் குறித்து இடப்படுகிற உணவு) என்பதிலிருந்து அறியலாம்.‘‘அறைகின்ற நான் மறையின் அடியோ’’ என்பதால் வேதாங்கம், பூர்வமிமாம்சா சாத்திரத்தின் பொருளாகவும், பொருள் முடிக்கும் போகமாகவும் அவற்றின் வழிபெறும் ஞான அனுபவத்தை குறிப்பிடுகின்றார்.

‘‘முடியோ’’ என்ற வார்த்தை வேதத்தின் முடிவை இங்கு குறித்தது. வேதத்தின் முடிவு என்பது வேதாந்தம் என்ற சாத்திரத்தை குறித்து நின்றது. வேதாந்தம் என்பது உபநிஷத் மற்றும் பிரம்ம சூத்திரத்தை குறிக்கும். இவை இரண்டும் வேதத்தால் விளக்கப்படும் ஞானபாகத்தை விளக்கிக் கூறுவதாகும். வேதமானது கர்ம காண்டம் (செயல்முறை பகுதி), ஞானகாண்டம் (துறவு நெறியோர்க்கு ஞானத்தைக் கூறுவது) என இரு முக்கிய பிரிவை கொண்டது.‘‘அடியோ’’ என்ற வார்த்தையால் கர்ம காண்டத்தை குறித்ததால் ‘‘முடியோ’’ என்ற வார்த்தையால் ஞானகாண்டத்தைக் குறிப்பிடுகின்றார்.

‘‘நான் மறையின் அடியோ முடியோ’’ என்று இணைத்து பார்த்தால் இல்லறத்தாற்கு இனியவை செய்ய கர்ம காண்ட பிரிவும், துறவோர்க்கு முக்தியையளிக்கக்
கூடிய ஞானகாண்டமும் பயன்படுவதாகும். இல்லறத்தோர் விரும்பிய பொருளை அடைய உமையம்மையை கர்ம காண்டத்தின் வழியே வேள்வி செய்து வழிபட வேண்டும். துறவியர் மோக்ஷத்தை அடைய ஞானகாண்டத்தின் வழியில் ஆன்மாவை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டேல் அதற்கு சாதனம் தான் இந்த ‘‘அடியோ’’ அல்லது ‘‘முடியோ’’ என்ற வார்த்தையாகும். தான் அடைந்த வழியை பிறர் அடைவதற்காக கூறுவது சாதனம் எனப்படும்.

அந்த சாதனமாக இருப்பவளும், சாதனத்தின் வழியே அடையப்படும் பயனாக இருப்பவளும், முடிவில் அடைவோனுக்கு அனுபவமாகவும், உமையம்மை மூன்று நிலையிலும் இருந்து வணங்குவோர்க்கும், பின்பற்றுவோர்க்கும் நலனையும், வனத்தையும் அளிக்கிறாள். வேதத்தைப் பற்றி நூல் உண்மைகளை குறிப்பிடுகிறபோது சந்திர நோக்கில் அந்தாதியை பார்த்தால் மிகத் தெளிவாக பிரித்து வேதப் பிரிவுகளை தெளிவுற விளக்கியிருக்கிறார் என்பது புரிகிறது.  உபதேசம் என்ற பாடல் வரிகளை கொண்டு வேதம், வேதாங்கம், வேதாந்தம், உபவேதம், துதி, சட்கிரகிய சூத்திரம், பிரம்ம சூத்திரம் இவை அனைத்தையும் நுட்பமாக வேறுபடுத்தி அந்தந்த சாத்திரத்தை மறைமுகமாக குறிக்கிறார். அதற்கு அந்த சாத்திரமாகவே உமையம்மை திகழ்கிறாள் என்பது பொருள்.

‘‘அமுதம் நிறைகின்ற
வெண் திங்களோ’’

- ‘‘அமுதம்’’ என்றால் என்ன? தேவர்களும், அசுரர்களும், இறப்பு, மூப்பு, பிணி இல்லாமல், இளமை, வலிமை, இறவாமை பெற்று இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பிரம்மாவிடம் கேட்டார்கள். அவர் அதற்கு காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவே இதற்கு விடை சொல்வார் எனக் கூறினார். அவரும் இதை அறிய அவா உடையவராய் மகாவிஷ்ணுவை நோக்கி அழைத்துச் சென்றார். அவரோ அமுதம் உண்டால் நீங்கள் விரும்பும் பயனை அடையலாம் என்றார். அமுதம் என்றால் என்ன? அது எங்கிருக்கும்? என்று கேட்டனர் சென்ற அனைவரும். அமுதம் பாற்க் கடலை கடைவதனால் கிடைக்கும் என்றார் விஷ்ணு.

கடைவது எப்படி என்றும் அதை தாங்களே முன் நின்று எங்களுக்கு அமுதத்தை வழங்கியருள வேண்டும் என்று மூவாயிரம் வருடம் தவம் செய்தனர். அதன் பயனாய் மகாவிஷ்ணுவானவர் கிருதயுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் மந்தாரமலையை மத்தாக நாட்டி வாசுகியைத் தாம்பாகப் பூட்டி இரு கூட்டத்தாரும் இரண்டு பக்கத்திலிருந்து பாற்கடலைக் கடைந்தனர். அந்தக் காலத்தில் மந்திரமலை நிலையாதிருந்ததனால் விஷ்ணு ஒரு கையால் அதனை அசையாமல் அழுத்தியும், கூர்ம உருக்கொண்டும் தாங்கினர்.

இதில் தேவரசுரர் சலிக்க விஷ்ணு இழுப்பவரில் தாமும் ஒருவராயிருந்து இழுத்தனர். இத்தொழிலாற் கடலிலிருந்து ஆலால விஷமுண்டாயிற்று. தேவரசுரர் கடைகையில் அக்கடலிலிருந்து திருமகள், இந்திராணி, சந்திரன் உச்சைச்சிவரமெனுங் குதிரை, ஐராவதம், கெளத்துவமணி, ஐந்தருக்கள், காமதேனு, தன்வந்திரி, வாருணி, தேவமாதர், அமுத கலசம் பிறந்தன. பிறந்தவைகளில் திருமகள், கெளத்துவமணி இவ்விரண்டினையும் விஷ்ணுமூர்த்தியும், காமதேனுவை இருடிகளும், வாருணியை அசுரரும், மற்றவைகளைத் தேவ இந்திரனும் கிரகித்தனர்.

அமிர்தத்தின் பொருட்டுத் தேவரசுரர் யுத்தஞ் செய்யுங் காலத்தில் விஷ்ணு மோகினி உருவம் கொண்டு அதனைத் தேவர்களுக்கு பரிமாறுகையில் ராகு, கேதுக்கள் தேவ உருவால் அதைக் கிரகிக்க அதனைச் சூரிய சந்திரர்களால் அறிந்த விஷ்ணுமூர்த்தி சக்கரத்தால் அவர்களை சோதித்தனர். மேற்சொன்ன இந்திரனது செல்வங்கள் பல முறை துர்வாசர் முதலிய இருடிகள் சாபத்தால் கடலில் ஒளிக்கத் தேவர்கள் பலமுறை கடலைக் கடைந்தனர் என்று புராணங்கள் கூறும்.

அந்தக் காலங்களில் பலமுள்ளவர்களாகிய பலர் தேவர்களுக்கு உதவியாகக் கடைந்தனர் என்பர். இந்த தல வரலாற்றின் மூலம் அமுதம் என்றால் என்ன? அதை எவ்வாறு பெறுவது? அதைப் பெறுவதில் இடையில் ஏற்படும் துன்பம், அதை நீக்கும் முறைமை, அமுதத்தை பருக ஏற்படும் பிரச்னை, அதை பெறுகின்ற கடினமான முயற்சி, அமுதத்துடன் தோன்றிய நன்மைகள் இவை அனைத்தும் அமுதத்தின் சிறப்பையும், அருகிய தன்மையையும் நமக்கும் எடுத்துக்காட்டுகிறது.

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2021

  18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்