SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரங்குன்றத்தில் இருப்பது பரமன் கோயிலா, குமரன் கோயிலா?

2018-09-07@ 15:24:38

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் : திருப்பரங்குன்றம்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகர்க்கு அணிகலனாக விளங்குவது திருப்பரங்குன்றமாகும். பத்துப்பாட்டுகளுள் ஒன்றாகத் திகழும் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் முதலாகிய ஆறு படைவீடுகளின் சிறப்புகள் பேசப் பெறுகின்றன. முருகப்பெருமானின் திருவுருவச் சிறப்பு, அவர் அணியும் மாலை விசேடங்கள், தெய்வப் பெண்டிர் செயல்கள், முருகக் கடவுள் சூரனை சங்காரம் செய்தது, மதுரையின் பெருமை, பரங்குன்றத்தின் இயற்கை வளம் ஆகிய அனைத்தும் திருப்பரங்குன்றம் எனும் முதற்பகுதியில் இனிதே விளக்கப்பெற்றுள்ளன.

பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை போன்ற, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூல்களில் முருகப்பெருமான் உறையும் பரங்குன்றத்து பெருமைகளும், இயற்கை வளமும் உரைக்கப் பெற்றுள்ளமையால், பண்டு திருப்பரங்குன்றத்து உச்சியில் வள்ளி, தேவசேனையுடன் திகழும் முருகப் பெருமானுக்கென ஓர் ஆலயம் இருந்தமை உறுதியாகின்றது. ஆனால், தற்போது உச்சிமிசை கந்தனுக்கென்று தனித்த ஆலயம் ஏதுமில்லை. மலையடிவாரத்தின் வடபாகத்தில் குடபோகக் கோயிலாகவுள்ள ஓர் ஆலயத்தினையே கந்தனுக்குரிய அறுபடை வீடுகளுள் ஒன்றாகப் போற்றி வருகின்றோம்.

ஆனால், கல்வெட்டுகள் அடிப்படையில் நோக்கும்போது பரங்குன்றத்தின் இந்த குடபோகக் கோயிலும், தென்புறம் உள்ள மற்றொரு குடபோகக் கோயிலும் சிவபெருமானுக்கென எடுக்கப்பெற்ற சிவாலயங்கள்தாம் என்பதை நாம் அறியலாம். இரு ஆலயங்களிலும் முருகப்பெருமான் பரிவார தெய்வமாகவே திகழ்கின்றார். பின்னாளில்தான் வடபுற குடபோகம் அறுபடைவீடாக, கந்தனுக்குரிய திருக்கோயிலாகக் கொள்ளப்பெற்றது. பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இக்கருத்து மேலும் வலுப்பெற்றது. வரலாற்று அடிப்படையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரங்குன்றத்து கந்தகோட்டம் பற்றியும்,

பின்னாளில் பரங்குன்றத்தில் பாண்டியர்களால் எடுக்கப்பெற்ற இரு குடைவரைச் சிவாலயங்கள் பற்றியும், சம்பந்தரும், சுந்தரரும் பாடிய சிவாலயம் எது என்பது பற்றிய கருத்துகளையும் இனிக் காண்போம். கூடல் மாநகரத்துக்கு நேர் மேற்கில் திகழும் வயல்களையும், சோலைகளையும் கடந்து அங்கு எழிலுடன் காட்சியளிக்கும் குன்றத்தில் (திருப்பரங்குன்றத்தில்) உரைகின்ற கந்தனை மதுரை நகரத்து மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி அக்குன்றம் அடைந்து வழிபட்டனர் என்பதை நக்கீரர் அழகு தமிழில் உரைத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டு திகழ்ந்த முருகனின் சிறப்புகளை நல்லந்துவனார்,

கடுவன் இளவெயினனார், குன்றம்பூதனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழிசியார் ஆகிய சங்கப் புலவர்கள் ஏழு பாடல்கள் வழி எடுத்துரைத்துள்ளார்கள்.
நல்லழிசியார் தம் பாடலில் பரங்குன்றிலிருந்து அருவிநீர் வீழ்ந்து அங்குள்ள வயல்களுக்குப் பாய்வதையும், மலையடிவாரத்தில் தங்கியிருப்போர், வானுலகத்தில் உரையும் வாழ்க்கைப்பேறு கிடைத்தால்கூட, இதனை விடுத்து அதனை விரும்பமாட்டார் என்றும் கூறுவதிலிருந்து திருப்பரங்குன்றத்தின் எழிலினை நாம் அறிதல் கூடும். நப்பண்ணனார் பாடியுள்ள பாடலில் மதுரை மக்களும் மன்னவன் பாண்டியனும் தம் உரிமைச் சுற்றத்தாருடனும், அமைச்சர் பெருமக்களோடும் பெருங்கூட்டத்தோடும் மலைமீதேறி அங்குள்ள முருகப்பெருமானின் திருக்கோயிலை வலம் வந்தார்கள் என்று உரைக்கின்றார். இதனை,

சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடைவருசூழல் - புலமாண் வழுதி
மடமயிலோடும் மனையவரோடும்
கடனறி காரியக் கண்ணவரோடும்
நின் சூருறை குன்றின் தடவரை ஏறிமேல்
பாடுவலம் திரி பண்பின்....

- என்று கூறியுள்ளார். இச்சான்று கொண்டு நோக்கும்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றத்தின் உச்சியில்தான் கந்தனின் திருக்கோயில் திகழ்ந்தது என்பது உறுதியாகின்றது. மலைமீது திகழ்ந்த கந்தனின் கோயிலில் ‘எழுத்து நிலை மண்டபம்’ என்ற பெயரில் ஒரு ஓவியக்கூடம் திகழ்ந்ததையும் அப்புலவர் தம் பாடலில் காட்டுகின்றார். அங்கு கோள் நிலைகளைக் காட்டி நிற்கும் ஓவியக் காட்சியும், இந்திரன், கௌதமனின் மனைவி அகலிகையை மாற்றுரு கொண்டு ஏமாற்றி கௌதமன் வருகையின்போது பூனையாக மாறியது, கௌதமரின் சாபத்தால் அகலிகை கல் உரு பெற்றது ஆகிய காட்சிகளும் அங்கு திகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலைமேல் திகழ்ந்த அக்கோயிலின்கண்ணே திகழ்ந்த குரங்குகளுக்கு சிலர் பணியாரம் போன்ற பொருட்களைக் கொடுப்பதாகவும், அங்கே சிலர் தெய்வப்பிரமம் எனும் வீணையினையும், குழலினையும், யாழினையும் இசைத்தனர் என்றும் கூறியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் ஏழிலைப் பாலை மரம் அடர்ந்து இருந்ததாக நல்லச்சுதனார் ஒரு பாடலில் குறித்துள்ளார். மேலும், திருமால், பன்னிரு ஆதித்தர், அசுவனி மருத்துவர் இருவர், பதினொரு உருத்திரர், எட்டு திசை பாலகர் என தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும் பரங்குன்றத்தில் வந்து நிற்பதால் அக்குன்றம் இமயக் குன்றம் போன்று இருந்தது என்றும் கூறியுள்ளார்.

குன்றம்பூதனார் என்ற புலவர் பரிபாடலில் பரங்குன்று பற்றி இரண்டு பாடல்களில் (9, 18) சிறப்பித்துப் பாடியுள்ளார். மான் ஈன்ற வள்ளி நாயகியை முருகப்பெருமான் மணந்து கொண்டதை அறிந்த இந்திரன் மகளாகிய தெய்வானையின் கண்கள் நீர் சிந்தின என்றும், அதனைக் கண்டதும் கடுமையான அக்கோடை காலத்தில் மேகங்கள் திரண்டெழுந்து தாமும் அழுவன போல மிகுந்த மழையினை அப்பரங்குன்றத்தின்மீது பொழிந்தன என்றும் கூறியுள்ளார். வள்ளி நாயகியின் வெற்றிக்கொடி அக்குன்றத்தின்மீது பறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பதினெட்டாம் பாடலில் குன்றத்தில் திகழ்ந்த குமரவேளின் திருக்கோயிலில், ‘எழுதெழில் அம்பலம்’ எனப்பெறும் அழகிய ஓவியங்கள் தீட்டப்பெற்ற அம்பலமொன்று இருந்ததை இப்புலவரும் சுட்டிக்காட்டியுள்ளார். பரிபாடலில் நல்லந்துவனார் முருகன் உறையும் திருப்பரங்குன்றத்தின் சிறப்பைக் கூறியமையை அகநானூற்றுப் புலவர்களுள் ஒருவரான மருதனிளநாகனார், ‘சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ (பாடல் எண். 59) எனக் குறிப்பிடுவதிலிருந்து திருப்பரங்குன்றத்தின் உச்சிமிசை விளங்கிய முருகவேளின் திருக்கோயில் எவ்வளவு சிறப்புடையதாகத் திகழ்ந்தது என்பதறிகிறோம்.

அறுபடை வீடுகளுள் ஒன்றாகத் திகழ்ந்த அத்திருக்கோயில் காலவௌ்ளத்தில் மறைந்தது என்பது வேதனைக்குரிய ஒன்றாம். தற்காலத்தில் திருப்பரங்குன்றத்து கோயில் என்றால் பரங்குன்றத்து மலையின் வடபுறம் திகழும் குடைவரைக் கோயிலைக் குறிப்பிடுவதோடு, அதுவே அறுபடை வீடு எனவும் போற்றி வருகிறோம். ஆனால், அக்குடைவரையில் திகழும் இரண்டு கல்வெட்டுகள் அக்கோயில் சிவனுக்காக எடுக்கப்பெற்ற சிவாலயம் என்பதையும், அதனை யார் எப்போது எடுப்பித்தார் என்பதையும், ஐயம் திரிபர தெளிவாகச் சுட்டுகின்றன. முதற் கல்வெட்டு வடமொழியில் கிரந்த எழுத்துகளால் அமைந்ததாகும்.

அதில் கலியாண்டு 3874ல் (கி.பி. 773-774) சாமந்தபீமன், வைத்யமுக்கியன் எனும் பட்டங்களை உடைய கணபதி எனும் உயர்நிலை அலுவலனால் பரமசிகரினி எனும் இம்மலையில் சம்புவாகிய சிவபெருமானுக்காக இக்கோயிலை எடுப்பித்தேன் என்று கூறியுள்ளான். வட்டெழுத்தில் அமைந்த தமிழ்க் கல்வெட்டில் கோமாறஞ்சடையன் எனப்பெறும் பாண்டிய மன்னனின் ஆறாம் ஆட்சியாண்டில் மகாசாமந்தனாகிய அதே சாத்தன் கணபதி எனும் கரவந்தபுரத்தில் வசிக்கும் வைத்தியன் பாண்டி அமிர்தமங்கலவரையன் இக்குடைவரையையும், திருக்குளத்தையும் திருத்தங்கள் செய்தான் என்றும், அவன் மனைவியாகிய நக்கங்கொற்றி என்பாள் அங்கு துர்காதேவி கோயிலையும், ஜேஷ்டையார் கோயிலையும் எடுப்பித்தாள் என்றும் கூறுகின்றது.

மகாசாமந்தனாகிய கணபதி என்பான் சிவனுக்காக எடுத்த இக்குடைவரையினுள் கிழக்கு நோக்கியவாறு சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பெற்ற கருவறையும், அதன் நேர் எதிரே மேற்கு நோக்கியவாறு திருமாலுக்குரிய கருவறையும் உள்ளன. இவற்றுக்கு இடையே குடைவரை சுவரில் நடுவே மகிடத் தலைமீது நிற்கும் கோலத்தில் துர்காதேவி திகழ, வலப்புறம் அமர்ந்த கோலத்தில் முருகன் ஒருபுறம் தெய்வானையும், மறுபுறம் நாரதரும் நிற்க அருளும் கோலக்காட்சியும் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்பெறுகின்றன. துர்காதேவியின் இடப்புறம் கணபதிப்பெருமான் இடம்பெற்றுள்ளார். இவர் பின்கரங்களால் ஒரு கரும்பைப் பிடித்தவாறு காணப்பெறுகிறார். இது அபூர்வமான அமைப்பாகும்.

இக்குடைவரையின் இருமருங்கும் சிவபெருமான் சதுர நடனமாடுவது, எழுவர் தாய்மாரும் நாட்டியமாடுவது. நரசிங்கமூர்த்தி, வராகமூர்த்தி, வைகுண்டநாதர், கங்காதரர், கருடாழ்வார், துர்காதேவி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகிய தெய்வத் திருவுருவங்கள் உரிய இடங்களில் இடம் பெற்றுள்ளன. இக்கோயிலின் பிரதான தெய்வமான சிவபெருமானின் கருவறைக்குள் லிங்கத்திற்குப் பின்புறம் சுவரில் சோமாஸ்கந்தரின் மிகப்பெரிய திருவடிவம் புடைப்புச் சிற்பமாக இடம்பெற்றுள்ளது. இச்சிவாலயத்தின் பரிவார மூர்த்திகளுள் ஒருவராகத்தான் முருகப்பெருமான் தெய்வானையுடன் இங்குத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைக்காலத்தில் இக்குடைவரையில் பல குறுக்குச் சுவர்களை அமைத்து பல தெய்வத் திருமேனிகளை மறைத்துள்ளதும், சிவாலயம் எனக் கொள்ளாமல் முருகப் பெருமானின் ஆலயமாகவே மாற்றிவிட்டதும் பண்டு ஆலயம் எடுக்கப் பெற்றதற்கான நோக்கத்தை மாற்றிவிட்டன.இப்பரங்குன்றத்தின் தென்புறம் காணப்பெறும் குடைவரை, கலையழகு மிகுந்தவொன்றாம். இதனை தற்காலத்தில் உமையாண்டார் கோயில் என அழைப்பர். கி.பி. 1216 முதல் 1238 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பிரசன்ன தேவர் என்பார் வேண்டிக்கொள்ள ‘சுந்தரபாண்டிய ஈஸ்வரம்’ என்ற பெயரில் இக்கோயில் எடுக்கப்பெற்றதாக அங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது.

இக்கோயிலின் நுழைவாயிலின் இருமருங்கும் மலைப்பாறையில் கணபதி, பிரசன்னதேவர், அவர் மாணவர் அமர்ந்தகோல மணிவாசகர், பெரிய மாடமொன்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் திருவுருவங்களும், நாயுடன் இரு கரங்களுடன் திகழும் பைரவர் திருமேனியும் இடம் பெற்றுள்ளன. குடைவரையின் உட்புறச் சுவரில் நடராஜர், சிவகாமசுந்தரி, ஹேரம்ப கணபதி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகிய உருவங்கள் காணப்பெறுகின்றன. இக்குடைவரை கலையறிவற்ற ஈனர்களால் ஒரு காலகட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளானதால் பெரும்பாலான சிற்பங்கள் சிதைந்த நிலையிலேயே காணப்பெறுவது வருத்தமளிக்கின்றது.

குடைவரைகளாக உள்ள இவ்விரு சிவாலயங்கள் தவிர தற்காலத்தில் மலைமேல் காசிவிஸ்வநாதர் கோயில் என்ற சிவாலயம் ஒன்றும் அங்குள்ள பாறையில் ஐந்து சிவ லிங்கங்கள், பத்மாசனத்தில் அமர்ந்தகோல சிவபெருமான், விநாயகர், மயிலுடன் கூடிய முருகப்பெருமான், விசாலாட்சி, பைரவர் போன்ற சிற்பங்கள் காணப்பெறுகின்றன. மலைமேல் மற்றொரு பகுதியில் பிற்காலத்திய பழனியாண்டவர் திருக்கோயிலொன்றும் உள்ளது. சந்நதித் தெருவில் சொக்கநாதர் கோயில் என்ற மற்றொரு சிவாலயமும் நாயக்கர் கால கட்டுமானங்களுடன் திகழ்கின்றது. திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் எது என்பது புலப்படவில்லை.

சேரமான் பெருமாளோடு திருப்பரங்குன்று வழிபடச்சென்ற சுந்தரர் பரங்குன்றில் இருந்த சிவாலயத்தை வலங்கொண்டு பின்பே உள்புகுந்தார் எனச் சேக்கிழார் குறிப்பதால் அது ஒரு தனித்த கட்டுமான சிவாலயம் என்பது தெளிவு. மேலும், பரங்குன்றத்திலுள்ள குடைவரைக் கோயில்களாகிய சிவாலயங்கள் இரண்டும் சுந்தரர் காலத்திற்குப் பின்பே தோற்றுவிக்கப்பெற்றவையாகும். எனவே, சம்பந்தரும், சுந்தரரும் வழிபட்ட சிவாலயம் எது என்பதை அறிய முடியவில்லை. முற்காலப் பாண்டியர் காலந்தொட்டு மதுரை நாயக்க அரசர்கள் காலம்வரை வெட்டுவிக்கப்பெற்ற பல கல்வெட்டுகள் இங்குள்ள குடைவரைக் கோயில்களில்
உள்ளன.

வடபுற குடைவரைக்கு வெளியே திகழும் பெரிய ராஜ கோபுரத்தில் நிகழ்ந்த நிகழ்வு பற்றி குறிப்பிடும் ஒரு கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயப் படை கோயிலுக்குள் புக முற்பட்டபோது வயிராவி முத்துக்கருப்பன் என்ற கோயில் ஊழியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து கோபுரம் மீதேறி கீழே விழுந்து உயிர் துறந்தார் என்றும், அதனால், ஆங்கிலேயர் படை வருவது தடுக்கப்பட்டதாகவும், உயிர் துறந்தவருக்காக கோயிலார் ரத்த காணிக்கையாக நிலம் அளித்ததும் அக்கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது. ஈராயிரம் ஆண்டு வரலாற்றுத் தடயங்களுடன் திகழும் திருப்பரங்குன்றம் தமிழகத்தின் ஈடிணையில்லா கலைச்சொத்து என்பதில் ஐயமேதுமில்லை.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்