மகாமகக் குளம் : ட்வென்ட்டி 20
2013-12-11@ 16:00:48

மாசி மகம் 25.2.2013
மாசி மாத மக நட்சத்திர தினத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாளே மகாமகத் திருநாள். லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று இத்திருக்குளத்தில் நீராடி புண்ணியம் பெறுகின்றனர்.
அமிர்தத்தைப் பெற தேவர்- அசுரர் போராட்டம் நிகழ்ந்த போது, அமிர்தத் துளிகள் தெறித்துச் சிதறிய இடங்களுள் இக்குளமும் ஒன்று.
‘மாமாங்கமாடி, மதுரைக்கடலாடி, ஸ்ரீரங்கமாடி, திருப்பாற்கடலாடி’ என்ற சொற்றொடர் மாமாங்கப் பெருமை சொல்லும்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, காவேரி, சிந்து, கோதாவரி, சரயூ, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளும் ஒன்பது கன்னிகளாக உருமாறி, பக்தர்கள் தங்களிடம் விட்டுச் சென்ற பாவங்களை, இந்த மகாமக குளத்தில் நீராடிக் கழித்து, குளக்கரையிலேயே ஆலயமும் கொண்டருள்கின்றனர்.
அமிர்த குடத்தை கும்பேஸ்வரராக மாற்றிய ஈசன், கிராத மூர்த்தியாக கும்பேஸ்வரர் ஆலயத்தில் அருள்கிறார். சுதை மூர்த்தியான இவருக்கு விசேஷ நாட்களில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.
நவகன்னியரும் இந்தக் குளத்தில் நீராடியதால் கன்னியர் தீர்த்தம் என்றும் இத்திருக்குளம் அழைக்கப்படுகிறது.
கும்பகோண மகாத்மியம், இந்த மகாமகக் குளத்தின் வடக்கில் 7 தீர்த்தங்களும் கிழக்கில் 4 தீர்த்தங்களும் நடுவில் அநேக புண்ணிய தீர்த்தங்களும் உள்ளதாக சொல்கிறது.
மகாமக நன்நாளில் இத்தீர்த்தத்தில் அமிர்தம் கலக்கும் ஐதீகத்தால், அம்ருதசரோருகம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்திருக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவும் அதன் கரைகளில் 16 சிவ சந்நதிகளைக் கொண்டும் விளங்குகிறது.
குளத்தைச் சுற்றிலும் பிரம்மதீர்த்தேசம் முதலான 13 ஆலயங்கள் உள்ளன.
மகாமக திருக்குளத்தையும் சுற்றியுள்ள சிவாலயங்களையும் கட்டி திருப்பணி செய்தவர் அச்சுதப்ப நாயக்கனின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர்.
கோவிந்த தீட்சிதரின் திருவுருவை லிங்க வடிவில் கும்பேஸ்வரர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
மாசிமகத்தன்று இத்திருக்குளக் கரையில் உள்ள வீரபத்திரரின் ஆலயத்திற்கு கும்பேஸ்வரர் எழுந்தருள்வார். அப்போது வீரபத்திரரே அவருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் அவிட்ட நட்சத்திர பரிகாரத் தலமாகும்.
கோடி அன்னதான கர்த்தா, தேப்பெருமாநல்லூர் மகானான அன்னதானசிவன், மகாமகத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க தயிர் தேவைப்படுமே என்று முதல் வருடமே மரப்பீப்பாய்களில் தயிரை தோய்த்து மகாமகக்குளத்தினுள் சேமித்து வைப்பாராம். அடுத்த வருடம், அந்த மரப்பீப்பாய்களில் உள்ள தயிர் புளிக்காமலும், தயிர் தட்டுப்பாடே ஏற்படாததும் இறையருளே.
கிருஷ்ணதேவராயர் இத்திருக்குளத்தில் நீராடியதாக ஒரு கல்வெட்டு சொல்கிறது.
மாசிமக தினத்தன்று இதில் நீராடி, விரதமிருந்து, அன்னதானம் செய்தால் ஆண் வாரிசு பிறக்கும் என்பது நம்பிக்கை.
மாசி மகத்தன்று நீராடி ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களை தானம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
மாசிமகம் முடிந்து 48 நாட்கள் இக்குளத்தில் நீராடினால் மகாமக ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
-ந.பரணிகுமார்
மேலும் செய்திகள்
பாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20
காயத்ரி தகவல்கள்:ட்வென்ட்டி 20
ஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20
பிரார்த்தனை : ட்வென்ட்டி 20
கருடன் : ட்வென்ட்டி 20
முருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்