நேரில் வந்த தெய்வங்கள் : ட்வென்ட்டி 20
2013-12-11@ 16:00:48

வேடன் கண்ணப்பன், காட்டில் தனியாகக் கிடந்த சிவலிங்கமூர்த்தியை பக்தியால் ஆராதித்தான். அவனை சோதிக்க எண்ணிய பரமேஸ்வரன் தன் ஒரு கண்ணில் இருந்து ரத்தத்தைப் பெருக்க அதைக் கண்டு திகைத்த கண்ணப்பன், தன் கண்ணைப் பிடுங்கி அந்தக் கண்ணில் வைத்து, பெருகும் குருதியை நிறுத்தினான். ஈசனின் மறு கண்ணிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தோட தன்னுடைய மறு கண்ணைப் பெயர்க்க கண்ணப்பன் முயன்றபோது ஈசன் அவன் முன் பிரத்யட்சமாகி அருளினார்.
சீர்காழி திருக்குளத்தின் கரையில் தன் தாய், தந்தையர் நீராடச் சென்று நேரம் ஆகியதால் குளத்தில் நின்றிருந்த மூன்று வயதுக் குழந்தை, சம்பந் தர் ‘அம்மையே, அப்பா’ என்றழைக்க, ஸ்திரசுந்தரி அன்னை அவருக்கு பொற்கிண்ணத்தில் திருமுலைப் பாலைத் தந்து ஞானக்குழந்தையாக்கினாள்.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமானுக்கு ஈசனே குரு வடிவில் நேரில் வந்து உபதேசம்
செய்தருளினார்.
சுந்தரர் கயிலை மலை செல்ல ஔவையாரை அழைத்தபோது, தான் கணபதி பூஜையை செய்துவிட்டுதான் வருவேன் என ஔவையார் கூற, சுந்த ரர் அவரை விட்டுவிட்டுச் சென்றார். பூஜை முடிந்ததும், தன் துதிக்கையால் ஔவையாரை சுமந்து, சுந்தரருக்கு முன்னால் கயிலையில் கொண்டு சேர்த்தார் திருக்கோவிலூர் பெரியானைக் கணபதி.
வள்ளலாருக்கு அவர் அண்ணியின் உருவத்தில் வந்து அன்னம் பாலித்த பெருங்கருணை கொண்டவள் திருவொற்றியூரில் அருளாட்சி புரியும் வடிவுடையம்மன்.
கவிச் சக்ரவர்த்தி கம்பர் தன் காவியத்தை அரங்கேற்றியபோது அதில் இடம் பெற்றிருந்த ‘துமி’ என்ற சொல் வழக்கத்தில் இல்லாதது என்று பலர் வாதாடினர். ஆனால் கம்பருக்காக, கொட்டிங் கிழங்கு விற்பவளாக வந்து ‘துமி தெறிக்கும், தூரப்போ’ எனக்கூறி அந்தச் சொல் வழக்கத்தில் உள்ள தை நிரூபித்தாள், சரஸ்வதி தேவி.
திருத்தணி முருகப்பெருமான் சங்கீத மும்மூர்த்தியரில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதருக்கு தரிசனம் கொடுத்ததோடு, கல்கண்டும் தந்து அவரை ஆசிர்வதித்தார்.
முன் ஜென்ம சாபத்தால் பேச்சற்றவனாகப் பிறந்த காளிதாசன், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் ஊழியம் செய்து வந்தான். ஒரு முறை அங்கு, மந்திர சித்தி பெறுவதற்காக பூஜை செய்த ஸ்ரீவித்யா உபாசகருக்காக நேரில் வந்தாள் அன்னை. அந்த உபாசகரோ, வந்தது அன்னை என அறியாமல் ‘தூரப்போ’ என அன்னையை விரட்டினார். வாய் நிறைய தாம்பூலம் போட்டுக் கொண்டுவந்த அன்னை அங்கு தூங்கிக் கொண்டிருந்த காளிதாசனை எழுப்பி அவன் வாயில் அந்த தாம்பூலச்சாற்றை உமிழ்ந்தாள். உடனே அவன் பேசும் சக்தி பெற்று ஆர்யா சதகம், மந்தஸ்மித சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம் என ஒவ்வொன்றிலும் நூறு துதிகள் அடங்கிய மூகபஞ்சசதியைப் பாடி; மூக கவி காளிதாசன் என்று பெயரும் பெற்றார்.
தேவியின் தியானத்தில் ஆழ்ந்திருந்தார், அம்பிகை உபாசகர் சுப்ரமணியம். அன்று அமாவாசை. தேவியின் பிரகாசமான திருமுக ஒளியில் மனதை இழந்திருந்தார். அப்போது அங்கு வந்த சரபோஜி மன்னர் அன்று என்ன திதி என அவரைக் கேட்க, தேவியின் முக ஒளியில் மனதை வைத்திருந்த உபாசகர், பௌர்ணமி என்று பதிலளித்தார். மன்னன் மீண்டும் மீண்டும் கேட்க, அதே பதில்தான் கிடைத்தது. தியானம் கலைந்த உபாசகரிடம், ‘அமாவாசை திதியான இன்று, பௌர்ணமி என்று உளறுகிறீர். இன்று மட்டும் முழு நிலவு வானில் வராவிட்டால் மரண தண்டனைதான் எனக்கூறி, கீழே எரியும் நெருப்பின் மேலே ஊஞ்சல் கட்டி ஒவ்வொரு பிரியாக அறுத்துக் கொண்டே வரச் செய்தார். ‘விழிக்கே அருளுண்டு...’ எனும் பதிகத்தை சுப்ரமணியம் பாடிய போது தேவி நேரில் தோன்றி தன் தாடங்கத்தை வானில் வீசி, அதையே பௌர்ணமி நிலவாக்கி அற்புதம் புரிந்தாள்.
வாத நோயால் பாதிக்கப்பட்ட நாராயண பட்டத்ரிக்கு குருவாயூரப்பன் நேரில் தோன்றி, ‘மச்சத்திலிருந்து என் துதியை ஆரம்பி’ எனக் கூறி, ‘நாராய ணீயம்’ எனும் மகா காவியம் உருவாகக் காரணமாயிருந்தார். அவ்வாறு நாராயணீயம் பாடி முடித்ததும் அவர் பிணி அவரை விட்டு நீங்கியது.
கோபண்ணா எனும் அடியார் ராம கைங்கர்யம் செய்வதற்காக அரசாங்க கஜானாவில் பணத்தைக் களவாடினார். அதனால் அவர் சிறைப்பட்டார். அவர் சிறையிலிருந்த போது ராம, லட்சுமணரே வந்து, அந்தக் கடனை பொற்காசுகளாக ஹைதராபாத் நிஜாமிடம் தந்து, கோபண்ணாவுக்கு திருவருள் புரிந்தனர்.
பாண்டிய நாட்டில் புட்டு வியாபாரம் செய்யும் கிழவி வசித்து வந்தாள். ஒரு முறை வைகை உடைபடும் நிலையில் இருந்தது. வீட்டிற்கொருவர் மண் சுமந்து அந்த உடைப்பை அடைக்க அரசு ஆணை பிறப்பித்தது. தன்னைத் தவிர தன் வீட்டில் யாரும் இல்லாத அந்தக் கிழவி, சோமசுந்தரரிடம் வேண்டிக்கொள்ள, அவரே வேலையாளாக வந்து உடைப்பை அடைக்கக் கூலியாக புட்டு கேட்டு, உண்டு, பின் உறங்கி, பாண்டிய மன்னனால் பிரம் படி பட்டார். அந்தப் பிரம்படி உலக ஜீவராசிகள் அனைத்தின் மீதும் விழுந்தபோதுதான் தெரிந்தது, வேலையாளாக வந்தவர் வேலவனின் தந்தை என்பது!
கம்பர் தன் ராமாயண மகாகாவியத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார். அப்போது தன் நூலில் அவர் நரசிம்மரை விவரித்ததை பிற அறிஞர்கள் ஏற் றுக் கொள்ளவில்லை. ராமாவதாரத்தில் நரசிம்ம அவதாரத்தைப் புகுத்துவது முறையற்றது என்று வாதாடினார்கள். ராவணனைத் திருத்தும் வகையில் பலவாறாக விபீஷணன் பேசியபோது இந்த நரசிம்ம சரிதத்தையும் சொன்னதாக கம்பர் சித்திரித்திருந்தார். ‘சிரித்தது செங்கட்சீயம்’ எனும் அடியை கம்பர் பாடியபோது, அரங்கிலுள்ளோர் ஆட்சேபம் தெரிவித்த அதே நேரம், ஸ்ரீரங்கக் கோயிலினுள் இருந்த மேட்டு அழகிய சிங்கர் ஹூங்காரமாகச் சிரித்து கம்பரை ஆதரித்தார்.
தன் கணவர் கொடுத்தனுப்பிய இரு மாங்கனிகளை ஒரு சிவனடியாருக்கு தானமளித்தார் காரைக்கால் அம்மையார். கணவர் வியாபார தலத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அந்தக் கனியை உண்ணக் கேட்டபோது பதறிப்போன அம்மையாரை ஈசன் ஒரு மாங்கனி கொடுத்து அமைதிப்படுத்தினார். அதை உண்ட கணவர், அதன் தெய்வீக ருசி உணர்ந்து பெரிதும் பரவசப்பட்டு இன்னொரு மாங்கனியையும் கேட்க, ஈசனருளால் மீண்டும் ஒரு மாங்கனி பெற்று, கணவருக்கு அளித்தார்.
மார்க்கண்டேயன் யமபயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரரைத் தழுவினார். யமன் வீசிய பாசக்கயிறு அமிர்தகடேஸ்வர ரின் மேல் விழ அமிர்தகடேஸ்வரர் ப்ரத்யட்சமாகி யமனை எட்டி உதைத்து, மார்க்கண்டேயனைக் காத்து, சிரஞ்சீவி பதவி தந்தார்.
திருவாரூர் தியாகராஜப் பெருமான், சுந்தரருக்காக காதல் தூது சென்றவர். தியாகராஜ புராணத்தில் நாரணனும், நான்முகனும் பெருமானின் அடி-முடி தேடி வராகமாகவும், அன்னப்பறவையாகவும் உருமாறியிருக்கத் தேவையேயில்லை; திருவாரூரில் சுந்தரரின் வீட்டு வாயிலின் முன் நின்றிருந் தாலே ஈசனின் அடி-முடியைக் கண்டிருக்கலாம் என சுவையாகக் கூறியுள்ளது.
கீத கோவிந்தம் எனும் புகழ் பெற்ற துதியை எழுதிய ஜெயதேவர் அதில் ஒரு ஸ்லோகத்தில் கிருஷ்ணரின் திருவடியை பதிக்கத் தகுந்த இடம் ராதையின் மார்பகங்கள் என எழுத நினைத்தார். அது தவறு என நினைத்து நீராடச் சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அவர் அந்த வரி கள் எழுதப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார். ஜகந்நாதப் பெருமாள், ஜெயதேவர் வடிவில் வந்து அவர் மனைவியிடம் அந்த வரிகளை எழுதச் சொன்னது தெரியவந்தது.
காசி மன்னன் சபையில் உருது மொழி பேசத்தெரியாத குமரகுருபரர் சரஸ்வதியை வேண்ட அவள் அவருக்கு ப்ரத்யட்சமாகி சகல பாஷைகளையும் போதித்தாள். அதற்கு நன்றிக்கடனாக குமரகுருபரர் சகலகலாவல்லி மாலை எனும் அற்புதத் துதியை பாடியருளினார். இன்றும் கல்வி வளம் பெருக அதைப் பாராயணம் செய்து பலன் பெறும் பக்தர்கள் பலர் உண்டு.
பிறவியிலேயே பேச்சிழந்த குமரகுருபரன் திருச்செந்தூர் முருகனருளால் பேசும் சக்தி பெற்று கவியானார். அவர் மதுரை மன்னன் சபையில் பாடிய போது மகிழ்ந்த மீனாட்சி தேவி, சிறு குழந்தை வடிவில் அங்கு தோன்றி அவருக்கு முத்து மாலை பரிசளித்தாள்.
முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் காலில் அடிபட்டதால் சென்னை பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் அவரால் இனி நடமாடவே முடியாது எனக் கூறிவிட்டனர். அப்போது பாம்பன் சுவாமிகள் முருகனைப் பிரார்த்தித்து, ‘அண்டமாய் அவனியாகி..’ எனத் தொடங் கும் ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தார். உடனே, திறந்திருந்த ஜன்னல் வழியே மயில் வடிவில் முருகப்பெருமான் வந்து பாம்பன் சுவாமி களை தலையிலிருந்து கால்வரை தன் தோகையால் விசிறி பின் வந்த வழியே பறந்தான், அடுத்த கணம் பாம்பன் சுவாமிகள் எழுந்து நடமாடினார். இன்றும் சென்னை பொது மருத்துவ
மனையில் பாம்பன் சுவாமிகள் சிகிச்சை பெற்ற வார்டில் அவர் திருவுருவப் படத்தைக் காணலாம்.
-ந. பரணிகுமார்
மேலும் செய்திகள்
பாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20
காயத்ரி தகவல்கள்:ட்வென்ட்டி 20
ஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20
பிரார்த்தனை : ட்வென்ட்டி 20
கருடன் : ட்வென்ட்டி 20
முருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்