SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழர் உணவு

2018-01-12@ 17:05:19

அவனா...! அவன் சரியான சாப்பாட்டு ராமனாச்சே...! என்று யாரைப்பார்த்தாவது ஒருவர் சொன்னால், சொல்லப்பட்ட நபரை பார்த்து ‘நக்கலாக’ சிரிக்காதவர்கள் குறைவு. நீங்களும் அப்படி சிரிக்காதீங்க.. ஏன் என்றால் நல்லா சாப்பிட்டால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பொருள். எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும் பருவம் ஒரு பருவம். சாப்பிட்டது செரிக்கவில்லை என்றால்... அவ்வளவுதான் ‘விதி’  என்று பயப்பட வேண்டாம்.  செரித்தல் திறனுக்கு ஏற்ப சாப்பிட வேண்டும் என்பது மருத்துவ விதி. ஆரோக்கிய ரகசியம் அதிலேதான் அடங்கியிருக்கிறது. அதனால் தான் அவ்வைப் பாட்டி, ‘பசித்துப் புசி’ என்றார். எல்லா வசதிகள் இருந்தும் சர்க்கரை நோய் காரணமாக சாப்பிட முடியாதவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ணிப்பாருங்கள்.

சரி.... விஷயத்துக்கு வருவோம். சாப்பாடு என்றாலே  சோறு, குழம்பு, ரசம், மோர், அதற்கு பொரியல், ஊறுகாய் இதெல்லாம் தான் நமக்கு சாப்பாடு. இடத்துக்கும், காலத்துக்கும் ஏற்ற சாப்பாட்டைத்தான் உலக மக்கள் பழக்கமாக வைத்துள்ளனர். அதைப் போலவே தமிழகத்தில் நமது முன்னோர் நமது காலநிலைக்கு ஏற்ற உணவுகளையும், அந்தந்த இடங்களில் கிடைத்த பொருட்களையும் உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஐந்துவகை நிலங்களாக பிரிந்து வாழ்ந்த தமிழர்கள் அந்தந்த நிலப்பகுதிக்கு ஏற்ற உணவு வகைகளையே உண்டு வந்துள்ளனர். அந்த உணவுகளுக்கு பல்வேறு பெயர்களும் வட்டார வழக்காக இருந்துள்ளது. அவை என்ன? ‘உணாவே, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆசாரம், உறை ஊட்டம்’ என்று பல வகையான உணவுகளை தொல்காப்பியர் சொல்கிறார்.

இதுதவிர புகா, மிசை என்ற இரண்டு பெயர்களை சேர்த்து மேலும் வகையான உணவு பழங்காலத்தில் இருந்ததாக அதன் உரையாசிரியர்கள் சொல்கின்றனர்.  சரி இதெல்லாம் என்ன என்று நமக்கு எப்படித் தெரியும். நெல், காணம்(கொள்), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கும் உணவு என்று  விளக்கமும் சொல்லியுள்ளனர். சரி... உணவு என்றால் எப்படி இருக்கும். பொருங்கதை என்ற நூலில் ‘‘ ஐயேறு அமைந்த அடிசிற் பள்ளியும்’’ என்று சொல்கிறது. அதாவது உண்பது, தின்பது, கொறிப்பது, நக்குவது, பருகுவது என்று ஐந்து தன்மையாக  உணவு இருக்கிறது என்கிறார்கள்.  பெரும்பாலும் தமிழர்கள் நெல்லில் இருந்து அரிசியை எடுத்து உணவு சமைத்து உண்டதாக சொன்னாலும், சிறுதானியங்களையும் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். சோறு என்றால் எல்லாம் சோறுதானா என்ற சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத் தான் சோற்றை தனித்தனியாக சமைத்தனர்.

அதாவது, பச்சரியில் செய்தால் அது ‘‘பொங்கல்’’, வேகவைத்த அரிசியில் சமைத்தால் அதற்கு ‘‘புழுங்கல்’’ என்று பெயர் வைத்தனர். அதுவும் மங்கல நிகழ்ச்சிகளில் சமைக்கப்படும் சோற்றுக்கு ‘சிறு சோறு’ என்றும், அமங்கலமான நிகழ்வுகளில் சமைக்கப்படும் சோற்றை ‘பெருஞ்சோறு’ என்றும் வேறுபடுத்திப் பார்த்தனர் தமிழர்கள். மேலும், உணவின் தன்மைக்கு ஏற்ப உணவின் பெயர்கள் விதவிதமாக அழைக்கப்பட்டன.  ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெல் சோறு, புளிச்சோறு, உழுந்தஞ்சோறு, பாற்சோறு, வெண்சோறு என்று இருந்தன. இதிலே சைவ, அசைவ வகைகளும் உண்டு. பழங்கால தமிழர்களும் சைவ, அசைவ உணவுகளை சாப்பிட்டனர். சைவத்தில்  சோறு, அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை என்று சைவ உணவு வகைகள் இருந்தன. கஞ்சியும் ஒரு உணவாக இருந்துள்ளது.  அசைவத்தில், பைந்தடி, ஊன், பைந்துணி போன்ற பெயர்களில் அசைவ உணவு இருந்துள்ளது. தமிழர்கள் இறைச்சிதான் சிறந்த அசைவ உணவாக தேர்வு செய்துள்ளனர்.  

இறைச்சியை துண்டு துண்டாக வெட்டி வெயிலில் பாறைகளில் போட்டு காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வது. இது ஒருவகை பதப்படுத்தல் முறையாக இருந்துள்ளது.  மற்றொரு முறையில் உப்புடன் சேர்த்து பதப்படுத்தப்படுத்துவதும் உண்டு. இந்த இறைச்சிக்கு உப்புக்காண்டம் அல்லது கொடியிறைச்சி என்று அழைத்தனர்.  மான் கறியும் சாப்பிட்டுள்ளனர். இது பற்றி சிறுபாணாற்றுப்படையில் செய்திகள் இருக்கிறது.  இறைச்சியை காயவைத்து பதப்படுத்துவது தவிர, எண்ணெயில் பொரிப்பது, தீயில் வாட்டி சாப்பிடுவதும் உண்டு.  கடலோர மக்களின் உணவில் முக்கிய இடம் பிடித்தது மீன்தான்.  மீன் உணவில், வாளை மீன் சதையில் இருந்து ‘உவியல்’ என்ற ஒரு ஸ்பெஷல் ரெசிபி தயாரித்துள்ளனர்.  அயிரை(அயிலை) மீன் மற்றும் புளி சேர்த்து புளிக்கறியும், நண்டு, பீர்க்கங்காய் இரண்டையும் சேர்த்து சமைப்பது என சமையலில் தமிழர்கள் பல்வேறு ரெசிபிகளை தயாரித்து அசத்தியுள்ளனர். மீன் தவிர  பறவைகளையும் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

கஞ்சி பெரும்பாலும் வறுமையில் இருந்தவர்களின் உணவு என்பர். இந்த கஞ்சிக்கு காடி, மோழை, சுவாடு என்று பெயர் வைத்துள்ளனர். இது தவிர இடியாப்பம், ஆப்பம், கும்மாயம், இட்லி, தோசை போன்றவையும் தமிழர்கள் உணவாக சாப்பிட்டுள்ளனர். இப்போது உள்ளது போல பல்வேறு கருவிகள் அந்தக் காலத்தில் இல்லை. ஆனாலும், அந்தந்த இடங்களில் கிடைத்த பொருட்களை வைத்தே வாழ்க்கையை நகர்த்திய அந்தக் கால தமிழர்களின் வாழ்க்கை சுகமாக இருந்துள்ளது.  ஆனால் இப்போதோ ஒரே பரபரப்பான வாழ்க்கை. எதிலும் திருப்தி இல்லை. நிம்மதி  இல்லை. அதனால் நிம்மதி, திருப்தியை மட்டுமல்ல தமிழரின் உணவையும் உலகம் தேடத் தொடங்கியுள்ளது.

கோவலூர் புகழேந்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • af-earthquake-19

  ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

 • Thaipoosam

  ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்