SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சங்கடங்கள் எல்லாம் தீர்க்கும் சனிபகவான்!

2018-01-08@ 09:49:34

விளங்குளம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவானவை, உருவாக்கியவை அனைத்தும் அழிய, மகாபிரளயம் ஒன்று உண்டாகும். புவியின் உயிரினங்கள் அனைத்தும் மறைந்து, மீண்டும் தோன்றும். அப்படி ஒரு பிரளயகால முடிவில் பொய், புரட்டு, வழு, தவறு எல்லாம் உலகம் முழுவதும் அதிகரித்தன. அதனை சீரமைக்க வேண்டிய அவசியமும், காலமும் உருவாயின. உலகம் முழுவதும் நெருப்பாலும் காற்றாலும் பகுதி பகுதியாய் அழிந்து போனது.

அதுபோக ஜலப்பிரளயம் உண்டாகி முற்றிலும் அழித்தது. இறைவன் ஒரு இடத்தைத் தேர்ந்து எடுத்து குறையில்லாத இறைவனாகத் தோன்றி உலகைப் புதியதாக உருவாக்கத் தொடங்கிய நேரம். சிவமும், சக்தியும் சேர்ந்து இயங்க  பூமியில் மீண்டும் உயிரினங்கள் தோன்றவும். மனிதகுலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியை நன்னாளில் பூவுலகில் விளாமரக் காடுகள் நிறைந்த  ஓரிடத்தில் எழுந்தருளினார். புதியதாகத் தொடங்கி மேன்மேலும் வளர்ச்சிக்கு அடிகோலியதால் அவர் லிங்க வடிவில் அருள்தரும் அட்சயபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

அவருக்குத் துணையாக உலகை விரிவாக்க, அன்னை பார்வதியும் எழுந்தருளினாள். அதனால் பின்நாளில் நின்ற கோலத்தில், அபிவிருத்திநாயகியாகத் திகழ்ந்தாள். அதுமுதல் இத்தலம், உருவான அனைத்தையும், விரிவாக்கிப் பெருக்கும் அபிவிருத்தித் தலமாகவும், குறை நீங்கி வளம் கொழிக்கச் செய்யும் அட்சய திரிதியை தலமாகவும் விளங்கத் தொடங்கியது.  சூரியனின் மனைவி சமிக்ஞை. இவருடைய மகன் யமன். சமிக்ஞைக்கு சூரியனின் வெம்மையைத்  தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன் நிழலாக சாயாதேவி என்ற பெண்ணைப் படைத்து, தன் கணவனிடம் விட்டுவிட்டு அவரிடம் தகவல் சொல்ல கூச்சமும், அச்சமும்பட்டு சொல்லாமல் தந்தைவீடு  சென்றுவிட்டாள். சூரியனும் சாயாதேவியை தன் மனைவி என்றே எண்ணினார். சூரியன்-சாயாதேவி தம்பதிக்கு மகனாக சனிபகவான் தோன்றினார். பிள்ளைகள் வளர்ந்து வரும்போது யமனுக்கும், சனிக்கும் அடிக்கடி சண்டை உண்டாகி, ஒருகட்டத்தில் யமன் சனிபகவானின் ஒருகாலை ஊனப்படுத்திவிட்டார். அதனால் சனிபகவான் தன் கால் ஊனம் நீங்க மனித உருவில் பூமியெங்கும் இறைவன் விளங்கும் இடத்தைத் தேடிவந்தார்.

அப்போது, சிவனும் உமையும் குடிகொண்டிருந்த, விளாமரங்கள் அடர்ந்த  காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஒரு பெரிய விளாமரத்தின் வேர்தடுக்கி அடுத்திருந்த பள்ளத்தில் விழுந்தார். அந்நாள் சித்திரைத் திங்கள் பூசநட்சத்திரம், வளர்பிறை திருதியை திதியுடன் கூடிய சனிக்கிழமை ஆகும். சனிபகவான், ‘ஈசனே’ எனக் கத்திக்கொண்டு  கீழேவிழ, பள்ளத்தில் பலயுகங்களாக மறைந்திருந்த பூசஞானவாவி என்ற தீர்த்தம் பீறிட்டுக் கிளம்பியது. அட்சயபுரீஸ்வரர் அருள் பெருக, சனிபகவானின் ஊனம் நீங்கியது. சனிபகவானை தீர்த்தம் அவரை மேலே உயர்த்திக் கொண்டுவந்தது.

குற்றமற்ற  அட்சயபுரீஸ்வரர் அருளால் தன் ஊனம் நீங்கி விட்டதை உணர்ந்த சனி, சிவனை வழிபட்டார். சிவபெருமான் அவருக்குத் திருமண வரம்கொடுத்து மந்தா, ஜேஷ்டா, தேவியரைத் திருமணம் செய்துகொள்ள அருளினார். இறைவனும் திருமணக் கோலத்தில் இங்கேயே எழுந்தருளி இவ்வுலக மாந்தரின் அல்லல் நீக்க வேண்டும் என பணித்தார். அதுமுதல்கொண்டு இத்தலத்தில் தம் இரு மனைவியருடன் திருமணக்கோலத்தில்அமர்ந்து சனிபகவான் அருள்வழங்கி வருகிறார். விளாமரங்கள் அதிகம் இருந்ததாலும், சனியின் கால்ஊனம் விலகி விளங்கியதாலும் இத்தலம் விளங்குளம் என அழைக்கப்பட்டது.

சனிபகவான் கால் ஊனம் நீங்கவும், திருமணம் நடைபெறவும் இறைவன் அருளியதால் இத்தலத்தில் தம் தேவியரான மந்தா, ஜேஷ்டாவுடன் மணக்கோலத்தில் எழுந்தருளியுள்ள சனிபகவான் பரிகார நாயகராக, சனிதோஷம்  தீர்த்து சங்கடங்கள் போக்குபவராக தனிசந்நிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். உலகம் உருவாகி, இறைவன் ஆணைப்படி, இங்கு முதன்முதலாக எழுந்தருள்வதால் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்றும் மங்களங்கள் உருவாக்கும் பரிவார தேவராக விளங்குவதால் மங்கள சனீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.  

வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியர், விநாயகர், நாகம், கோஷ்ட தேவதைகள் பைரவர் ஆகியோரும் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலிலுள்ள பிற்காலப் பாண்டியர்களில் முதலாம் பராக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டுகள் மூலம் இத்தலத்தின் தொன்மையை உணரலாம். இது பூச நட்சத்திரத்துக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது. பூசமருங்கர் எனும் சித்தர் இங்கே வழிபட்டிருக்கிறார். சனிப் பரணி சித்தர் என்பவர் முன்யுகத்தில் இத்தலத்தில் தோன்றி, உலகில் உள்ள அனைத்து பித்ரு, சாபங்களும் நீங்க அருள்புரிந்த தலம் என்பர். அதனால் இன்றளவும் சனிப்பரணி சித்தரும், பூச மருங்க சித்தரும், சூக்கும வடிவில் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதாக வரலாறு சொல்கிறது.

எனவே, பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமையில் பிறந்தவர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது வந்து வழிபட வேண்டிய புண்ணிய கோயில் இது. அருள்மிகு ஆதிபிருஹத் சனீஸ்வரனின் நட்சத்திரம்  பூசம். எனவே, பூசநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா நலன்களையும் இந்த சனிபகவான் அருள்வார் என்பது ஏராளமான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.   
 
காலை 8.30 முதல் 12.30 மணிவரையும், மாலை 4.30 முதல் 7.30 வரையும் கோயில் திறந்திருக்கிறது. அட்சய திருதியை, திருக்கார்த்திகை, ஆருத்திரா, மஹாசிவராத்திரி ஆகிய நாட்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க இவ்வாலயத்தில் 19.12.2017 அன்று சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு, சனிப்பெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. காலை முதல் மாலைவரை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. தொடர்ந்து 24.12.2017 அன்று லட்சார்ச்சனையும், 30.12.2017 மற்றும் 31.12.2017 தேதிகளில் பரிகார ஹோமங்களும் நடைபெறவுள்ளன.

தஞ்சாவூர்  மாவட்டம், பேராவூரணி வட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ. தொலைவில், சென்னையிலிருந்து கடலூர், அதிராம்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விளங்குளம் கிராமம்.

 - இரா.இரகுநாதன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 30-09-2020

  30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்