SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு : சிறப்புகளும் பலன்களும்

2017-09-21@ 09:15:06

நவராத்திரி வழிபாடு புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை கொண்டாடப்பட்டு அடுத்த நாள் விஜயதசமியுடன் நிறைவுறுகிறது. அன்னை பராசக்தியை துர்கா, லட்சுமி, சரஸ்வதி எனும் பிரதான மூன்று ரூபங்களில் முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்களும் மஹாலக்ஷ்மியையும் இறுதி மூன்று நாட்களும் சரஸ்வதி தேவியையும் வழிபடவேண்டும். அதே சமயம் நவதுர்கா என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை குறிக்கும். சைல புத்ரி, ப்ரம்ம சாரிணீ, சந்த்ர கண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காலராத்ரி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி எனும் இந்த ஒன்பது வடிவங்களையும் தினம் ஒரு வடிவம் வீதம் பூஜிப்பது நமக்கு மிகப்பெரிய பலன் தரும்.

‘பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரிணீம் திருதீயம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம் பஞ்சமம் ஸ்கந்தமாதேதி  ஷஷ்டமம் காத்யாயனீம் சப்தமம் காலராத்ரிச  அஷ்டமம் மகாகௌரிம் நவமம் சித்திதாத்ரி’அதாவது பிரதமைசைலபுத்ரி,  த்விதியைபிரம்மச்சாரிணி, திரிதியை சந்திரகாண்டா, சதுர்த்திகூஷ்மாண்டா, பஞ்சமிஸ்கந்தமாதா, சஷ்டிகாத்யாயனி, சப்தமிகாலராத்ரி, அஷ்டமிமஹாகௌரி ,நவமிசித்தாத்ரி இவ்வாறு நாளுக்கு ஒரு வடிவத்தில் ஒன்பது நாட்களும் வணங்குவதால் சகல நன்மைகளும் நம்மை வந்தடையும்.

(மனித உடலில் கண்ணுக்குத் தெரியாத ஏழு சக்கரங்கள் உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களின் செயல்பாட்டினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன. சித்தத்தை இந்த சக்கரங்களில் நிலைநிறுத்தி தேவியை வழிபட்டால் அதன் மூலம் சிறப்பு சக்திகளை பெறலாம். யோக சாதனைகள் செய்யலாம். யோகசாதனைகள் செய்வதற்கு தகுந்த குருவின் வழிகாட்டுதலும் பயிற்சியும் தேவை. ஏழு சக்கரங்களான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம். பின்வரும் ஸ்லோகங்களை சொல்லி நாம் ஒன்பது நாட்களும் அன்னையை வழிபடலாம்.

முதல் நாள்:


சைலபுத்ரி. அதாவது மலைமகள். பார்வதி. முதல் சக்கரத்திற்கு மூலாதாரத்திற்குரிய தேவி.  “விருஷபம் (நந்தியின்) மேல் ஏறி வருபவளும், சூலத்தை ஆயுதமாகக் கொண்டவளும், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் தேவியாம் சைல புத்ரி தேவியை வணங்குகின்றேன்”.

இரண்டாம் நாள்:
 

பிரம்மச்சாரிணி . பிரம்ம தபஸ். ‘தபசாரிணி’. இத்தேவியை இரண்டாவது சக்கரத்தில் வைத்து பூஜிக்கவேண்டும். அறிவு, ஞானம் இவற்றின் வடிவான இத்தேவியை வணங்குபவர்களுக்கு எத்துன்பத்திலும் தளராத மனத்தையும் சுறுசுறுப்பையும் தருவாள். கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்ம ஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கருள வேண்டும்.

மூன்றாம் நாள்:


சந்த்ர கண்டா. சந்திர பிறையை அணிந்த தேவி. சந்திர பிறை முன் நெற்றியில் மணிபோல் இருப்பதால் சந்த்ர கண்டா. இத்தேவியை மூன்றாவது சக்கரமாகிய மணிபூரக சக்கரத்தில் வைத்து பூஜிக்கவேண்டும்) இத்தேவியை வணங்குபவர்கள் பாவம் அழியும். பார்வையே பக்தர்களின் துன்பத்தை போக்கி சகல சுபிட்சங்களையும் வழங்கும். வீரம் பெறுவர். சிம்மத்தின் மீது ஏறி வருபவளும், சந்திர கண்டா என்னும் பெயர் கொண்டவளும், கடும் கோபமும் ஆக்ரோஷமும் கொண்டவளுமாகிய தேவி சந்திரகாண்டா என் மீது கருணை பொழிய வேண்டும்”.

நான்காம் நாள்:

கூஷ்மாண்டா. உலகத்தை படைத்தவள் என்று அர்த்தம். இத்தேவியை பூஜிப்பதால் கையில் வைத்திருக்கும் கலசத்தின் மூலம்அஷ்ட சித்தியும் நவ நிதியும் அருள்வாள். உடல் சக்கரங்களில் ‘அனாஹத’ சக்கரத்திற்குரிய தேவி இவள். ‘‘தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும், தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து, அதை பரிபாலனம் செய்பவளாகிய தேவி கூஷ்மாண்டா என் மீது கருணை பொழிவாளாக”.

ஐந்தாம் நாள்:


ஸ்கந்தமாதா. முருகனின் அன்னை என்று பொருள். இத்தேவியயை வழிபடும்போது நாம் முருகனையும் சேர்த்து வழிபடுகிறோம். இந்த அன்னையை வணங்குவோர் மனம் அமைதி பெரும்.துன்பங்களை மறப்பர். இந்த அன்னையின் அருள் மோட்சத்திற்கு வழிகோலும். மனதில் தூய்மை உருவாகும். விசுத்தி சக்ரத்திற்குரிய தேவி.‘‘தன் இருகரங்களில் தாமரை மலர் ஏந்தியவளும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும் தேவி துர்க்கையை நான் வணங்குகின்றேன்”.

ஆறாம் நாள்:

காத்யாயனி. ஒரு சமயம் துர்க்கை காத்யாயனர் எனும் முனிவரின் மகளாக அவரின் வேண்டுகோளை ஏற்று தோன்றினாள். இதனால் இப்பெயர். இத்தேவியை நம் மகள் போல் நினைத்து வணங்கவேண்டும். தீய சக்திகளையும் பாவங்களையும் அழித்து நம் துயர் போக்கும் தேவி. சக்கரங்களில் ஆக்ஞா சக்கரத்திற்குரிய தேவி. ‘‘ஒளி வீசும் வாளை ஏந்தியவளும், கம்பீரமான சிம்மத்தில் ஏறி தீய சக்திகளை அழிப்பவளாம் அன்னை காத்யாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும்.''

ஏழாம் நாள்:

காலராத்ரி. காலத்தின் முடிவு என்று பொருள். சுபங்கரி என்ற நாமமும் இத்தேவிக்கு உண்டு. இத்தேவியின் பார்வை பட்டாலே பாவம் விலகும். பேய், பிசாசுகள் பயந்து ஓடும். ஏழாம் சக்கரமாகிய ஸஹஸ்ரஹாரத்திற்கு உரிய தேவி. யோகிகள் இச்சக்கரத்தில் வைத்து பூஜிப்பர்.“நீளமான நாக்கு கொண்டு, கழுதை மீது ஏறி வருபவளும், ஆக்ரோஷமாக இருப்பவளும், பல வண்ணங்களில் ஆபரணம் அணிந்து இருப்பவளுமாகிய பயங்கரியாம் அன்னை காளராத்திரி என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருளை போக்கி அருள வேண்டும்”.

எட்டாம் நாள்:

மகா கௌரி. மகா=பெரிய கௌரி = வெண்மையான/ தூய்மையான. இத்தேவி மிகுந்த வெண்மையாக இருப்பதால் மகா கௌரி என அழைக்கப்படுகிறார். இத்தேவியின் வாகனம் ஆபரணம் அனைத்தும் வெண்மையாக இருக்கும். யோகிகள் இத்தேவியை மனதில் வைத்து பூஜிப்பர். இத்தேவி பக்தர்களின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுபவர். “வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும், தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும், தூய்மையானவளும், மகாதேவரின் நாயகியாம் அன்னை மகா கௌரி எனக்கு அனைத்து நலன்களையும், வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன்.''

ஒன்பதாம் நாள் :

சித்திதாத்ரி. தாத்ரி எனில் தருபவள். சித்திதாத்ரி எனில் அனைத்து சித்திகளையும் தருபவள். யோகிகள் இத்தேவியின் அருளால் இறுதியில் பேரின்ப பேற்றை அடைவர். எல்லாம் ஒரு மகா சக்தியிலிருந்து தோன்றியது என்பதை உணரவைக்கும் தேவி இவள். இத்தேவியை வழிபடுவோர்க்கு ஐயங்கள் நீங்கும். தேவை என்று எதுவும் இருக்காது. சித்தர், கந்தர்வர், தேவர், முனிவர், மனிதர், யட்சர் என அனைவராலும் வணங்கப்படுபவளும், என்றும் வெற்றி ஒன்றையே பெறும் தேவி சித்திதாத்ரி என்னுடைய அனைத்து செயல்களிலும் ஜெயத்தை தர வேண்டும்.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்