SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறளில் மணம் வீசும் மலர்கள்!

2017-08-03@ 12:54:21

குறளில் குரல் - 64

பூத்தொடுப்பது போல வார்த்தைகளைத் தேர்ந்துத் தேர்ந்துத் தொடுத்து, ஓர் அழகிய இலக்கிய மாலையாய் திருக்குறளைப் படைத்துத் தமிழன்னைக்குச் சூட்டியிருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. தன் ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக் குறள்களில் மொத்தம் எத்தனை பூக்களை உவமையாக எடுத்தாண்டிருக்கிறார் அவர்? இரண்டே இரண்டு பூக்களைத்தான் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்! ஆனால், உண்மை அதுதான். ஒன்று அனிச்ச மலர். இன்னொன்று குவளை மலர். தவிர `மலர்’ என்ற வார்த்தையை முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில்பயன்படுத்தி இருக்கிறார். மலரினும் மெல்லிது காமம் என இன்பத்துப் பாலிலும் மலரோடு காதலைஒப்பிட்டுப் பேசுகிறார். `மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்’ ‘மலரில் உறையும் இறைவனது புனிதத் திருவடிகளைச் சரண்புகுந்தவர்கள் இந்த நிலவுலகில் நீண்ட ஆயுள்பெற்று வாழ்வார்கள்,’ என்கிறார்.

இந்தக் கருத்தின் பின்னணியில் ஓர் உளவியல் விஞ்ஞானச் சூட்சுமம் இருக்கிறது. இறைவனைச் சரணடைந்து வாழ்பவர்கள், `எல்லாம் இறைச்செயல்’ என்றெண்ணி ஆறுதல் கொள்வார்கள். இன்ப துன்பங்களை ஒன்றாக நோக்கும் பக்குவம் பெறுவார்கள். துன்பங்களால் கலங்க மாட்டார்கள். இறைவன் தங்களைப் புடம்போடவேதுன்பங்களைத் தருகிறான் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எனவே பதற்றமில்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். பதற்றமில்லாதவர்களிடம் ரத்த அழுத்தம் தோன்றாது. அவர்களை நோய்கள் அணுகும் வாய்ப்பு குறைவு. அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வதில் வியப்படைய எதுவுமில்லை...

இறைவனை மலரில் உறைபவன் என்று வள்ளுவர் குறிப்பிடுவது நம் ஆன்மிக மரபோடு இணைந்து செல்கிறது. நமது தெய்வங்கள் பலரும் மலரில் உறைபவர்கள்தான். வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் கல்வித் தெய்வமான அன்னை கலைவாணி. செந்தாமரையில் வீற்றிருப்பாள் செல்வத் திருமகளான லட்சுமிதேவி. ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாய்த் தோன்றிக் கார்த்திகைப் பெண் களால் வளர்க்கப்பட்ட அறுவரையும் ஒருசேர அணைத்து அறுமுகம் கொண்ட ஆறுமுகனாய் மாற்றினாள் அன்னை பார்வதி. மலரின்றி நம் ஆன்மிகம் ஏது? மலர்களாலேயே இறைவனுக்கு அலங்காரம் செய்கிறோம். மலர்களாலேயே இறைவனை அர்ச்சிக்கிறோம். வேத காலம் தொட்டு இந்த மலர் வழிபாட்டு மரபு நம் பாரத தேசத்தில் வழிவழியாய்ப் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மலர் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்தது என வகுத்து வைத்திருக்கிறோம். விநாயகரை எருக்கம் பூவால் வழிபடும் நாம் பிற தெய்வங்களுக்கு அந்த மலரைப் பயன்படுத்துவதில்லை. சிவனுக்குத் தும்பைப் பூ. பார்வதி தேவிக்குச் செம்பருத்தி, அரளி உள்ளிட்ட சிவப்பு வர்ண மலர்கள். மல்லிகை, முல்லை, செண்பகம், தாமரை, பவழமல்லி போன்ற மலர்கள் எல்லாத் தெய்வங்களுக்கும் உரியன. எத்தனை மலர்களால் இறைவனை வழிபட்டாலும் இறைவனுக்கு மிகவும் விருப்பமான மலர் ஒன்றிருக்கிறது.

அந்த மலர் எது எனத் தம் கவிதையில் அழகாக ஆராய்கிறார், யாழ்நூல் எழுதிய இலங்கைத் தமிழறிஞர் விபுலானந்தர். `வெள்ளை நிற மல்லிகையோ? வேறெந்தமாமலரோ? வள்ளல் அடியிணைக்கு வாய்த்தமலரெதுவோ? வெள்ளை நிறப் பூவுமல்ல, வேறெந்தமலருமல்ல, உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!’ உள்ளக் கமலத்தில் உறைபவனல்லவா ஈசன்? உள்ளத் தாமரையை அல்லவா அவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்? `மலர்மிசை ஏகினான்’ என்று வள்ளுவர் கடவுளைப் பற்றி குறிப்பிடுகிறாரே, அவர் சொல்லும் மலர் உள்ளத் தாமரை தானோ? நம் ஆன்மிக மரபில் ஏன் இறைவனை மலர்களால் வழிபடுகிறோம்? வேத காலம் தொட்டு வழிவழியாய்த் தொடரும் இந்த மலர் வழிபாட்டு நெறியின் பின்னணி என்ன?

இதுகுறித்து ஆராய்கிறார் புதுவை ஸ்ரீஅன்னை. தம் ஞானம் என்னும் கைவிளக்கைக் கொண்டு அவர் ஆராய்ந்தறிந்து தெரிவித்த உண்மைகள் பலவற்றில், மலர் வழிபாட்டின் பின்னணியும் மிக முக்கியமான ஒன்று. அன்னையன்பர்கள் தங்கள் இல்லங்களில் மலர் வழிபாட்டைப் பின்பற்றுகிறார்கள். ஸ்ரீஅன்னையின் கருத்து இதோ: மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு `கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்’ என்று பல்வேறு மொழிகள் பயன்படுகின்றன.

அதாவது, மனிதரும் மனிதரும் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தும் கருவி மொழி. மனிதன் இறைவனிடம் கருத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் மொழி எது? மலர்கள் தான் அந்த மொழி என்கிறார் அன்னை. ஒவ்வொரு மலரும் இறைச்சக்தியிடம் மனிதனின் ஒவ்வொரு வேண்டுதலைச் சொல்கிறது என்கிறார்.

செம்பருத்தியையும் நாகலிங்கப் பூவையும் செந்தாமரையையும் வைத்து வழிபட்டால் அந்த மலர்கள் ‘எங்களை வைத்து வழிபடுபவனுக்குச் செல்வம் தேவை’ என இறைவனிடம் தெரிவிக்குமாம். ஜெவந்தி போன்ற மஞ்சள் வண்ண மலர்கள் ஆரோக்கியம் வேண்டும் என ஆண்டவனுக்கு விண்ணப்பிக்குமாம். போகன்வில்லா மலர்கள் எனப்படுகிற காகிதப் பூக்கள் பாதுகாப்புணர்வு தேவை என்று சொல்லுமாம். கொடி ரோஸ் சண்டை சச்சரவற்ற சுமுக நிலை வேண்டும் எனக் கூறுமாம்.

வாடாமல்லி, நீண்ட ஆயுளைத் தருமாறு கேட்டுக் கொள்ளுமாம். ஒவ்வொரு மலரும் இறைச்சக்தியுடன் உரையாடுவதற்கான ஒரு குறியீட்டு மொழி என்கிறார் அன்னை. சாதாரண எழுத்து மொழி எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் ஷார்ட் ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்து மொழியை அதைக் கற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. தந்தி அடிப்பவர்கள் பயன்படுத்துவது சங்கேத மொழி. எல்லோராலும் அதைப் புரிந்துகொள்ள இயலாது.

இறைவன் எல்லா மொழிகளையும் புரிந்துகொள்ளக் கூடியவன். மெளன மொழியைக் கூட அறியும் வல்லமை பெற்றவன். தட்சிணாமூர்த்தி வடிவில் மெளன குருவாய் இருந்து மெளனத்திலேயே உபதேசிப்பவன். என்றாலும் இறைவன் அதிகம் விரும்புகிற மொழி மலர்மொழி என்பது அன்னையின் கருத்து. இறைவனுடன் மனிதன் பேசுகிற மலர்மொழியின் சங்கேதக் கருத்துகளை அன்னை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்விதம் ஸ்ரீஅன்னை வெளிப்படுத்திய இந்த வெளிப்பாடு, ஆன்மிக அன்பர்கள் வாழ்வில் ஒரு புதுவித மலர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. வேதகாலம் தொட்டுப் பொருளறியாமல் நாம் பயன் படுத்திப் பலன்பெற்ற இந்த மலர் மொழியை, ஸ்ரீஅன்னை மூலம் பொருளறிந்து பயன்படுத்தும் பேறு நமக்குக் கிட்டியுள்ளது. இப்படிப் பொருளுணர்ந்து பயன்படுத்துவதால் அதன் முழுப் பலனையும் நாம் விரைவில் அடைய முடிகிறது.

அன்னையின் தத்துவப்படி, நாம் வழிபடும் தெய்வம் எதுவானாலும், நமக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் மஞ்சள் வண்ண மலர்களை நம் தெய்வத்திற்கு அர்ப்பணித்து நாம் உடல் நலனை அடைய முடியும். செம்பருத்தியை அர்ப்பணித்துச் செல்வத்தை அடைய முடியும். இவ்விதமே நமக்கு எந்தெந்த வாழ்க்கைச் சூழலில் எது எது வேண்டுமோ அதற்குத் தக்கபடி அந்தந்த மலர்களால் இறைவனை வழிபட்டு நாம் எளிதில் பலன் பெற முடியும். எருக்கம்பூ வழிபாடு தைரியத்தைத் தரும் என்கிறார் ஸ்ரீஅன்னை.

தைரியம் வந்தால் தடைகளைத் தகர்த்து முன்னேறுவோம். தடைகளைத் தகர்ப்பவர் விக்ன விநாயகர். விநாயகருக்கு உகந்த மலர் என நம் மரபு சொல்வது எருக்கம்பூ தான். அன்னையின் ஆராய்ச்சி முடிவும் நம் மரபின் சம்பிரதாயங்களும் ஒன்றுபடுவதைக் காண முடிகிறது. நம் வேத மரபைத் தன் ஆய்வின் மூலம் புனருத்தாரணம் செய்தவர் தானே அன்னை? விஷ்ணு ஸஹஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற தோத்திரங்களில் பலஸ்ருதி என்ற பகுதி உண்டு. அந்தத் தோத்திரங்களைப் பாராயணம் செய்வதால் அன்பர்கள் என்னென்ன நன்மைகளை அடைய முடியும் என்பதைத் தோத்திரங்களின் நிறைவாக இடம்பெறும் பலச்ருதி பகுதி தெரிவிக்கும்.

அதுபோலவே ஸ்ரீஅன்னையின் மலர் வழிபாட்டுக்கான பலஸ்ருதி ஒவ்வொரு மலருக்கும் தனித்தனியானது. அதை உணர்ந்து அந்தந்த மலரைப் பயன்படுத்தும்போது நாம் அடையும் பலன் விரைந்து நமக்குக் கிட்டுகிறது. மலர் என்ற சொல்லைக் கடவுள் வாழ்த்தில் பயன்படுத்திய வள்ளுவர், அனிச்ச மலரை மூன்று இடங்களில் பயன்படுத்துகிறார்.

அந்த மூன்று அனிச்ச மலர்களில் ஒரு மலர் அறத்துப் பாலில் மலர்ந்து மணம் வீசுகிறது. மற்ற இரு அனிச்ச மலர்களும் இன்பத்துப் பாலில் இடம்பெற்று இலக்கிய நயத்தை மிகுவிக்கின்றன. அறத்துப் பாலில் இல்லறவியலில் `விருந்தோம்பல்’ என்ற அதிகாரத்தில் விருந்தினரைப் பற்றிய தம் கருத்தொன்றை வலியுறுத்த அனிச்சப் பூவைத் துணைசேர்த்துக் கொள்கிறார் வள்ளுவர். `மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்துநோக்கக் குழையும் விருந்து.’   
 
அனிச்ச மலர் மிக மிக மென்மையானது. முகர்ந்து பார்த்தாலே அது வாடிவிடும். விருந்தினர்களும் அப்படித்தான். மலர்ந்து வரவேற்காமல் சற்றே முகம் வேறுபட்டுப் பார்த்தாலே வாடி விடுவார்கள். எனவே விருந்தினரை உபசரிக்கும்போது வாய்மொழி மட்டுமல்ல, நம் உடல்மொழியும் சரியாக இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளம் ஈடுபட்டு அவர்களை வரவேற்க வேண்டும். இன்பத்துப் பாலில் இடம்பெறும் இரு அனிச்ச மலர்கள் பெண்களின் மென்மையைச் சொல்லப் பயன்படுகின்றன.

அனிச்ச மலரின் தாவரவியல் பெயர் அனாகலிஸ் ஆர்வென்சிஸ் என்பது. (Anagallis arvensis). தலைவலி, உடல்வலி போன்றவற்றைப் போக்கும் மருத்துவ குணங்களும் அனிச்சப் பூவுக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. வள்ளுவர் சொன்ன அனிச்ச மலரால் கவரப்பட்ட எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி `அனிச்ச மலர்’ என்ற தலைப்பிலேயே ஒரு சமூக நாவல் எழுதியுள்ளார். `அனிச்சப்பூ கால்களையா பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை.’ அனிச்சப் பூவைக் காம்பு நீக்காமல் சூடிக் கொண்டுவிட்டாளாம் தலைவி.

அடடா, காம்பின் கனத்தை அவள் மெல்லிய இடை தாங்குமா? அது ஒடிந்து அவள் உயிருக்கு ஊறுநேர்ந்து சாக்காட்டுப் பறை ஒலிக்கும் சூழல் ஏற்படாதிருக்க வேண்டுமே என அங்கலாய்க்கிறான் தலைவியின் அன்புக் காதலன்! உண்மை தானே? `மலரினும் மெல்லிது காதல் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்!’ எனக் காதலுணர்வைப் பூவை விட மெல்லியது என்று சொன்னவர் அல்லவா வள்ளுவர்? `அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.’

அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் மென்மையானவை தான். ஆனால் மென்மையான அவை காதலியின் கால்களில் முள்போன்று குத்தக் கூடியவை என்றால், காதலியின்காலடிகளின் மென்மை பற்றி என்ன சொல்ல என வியக்கிறான் தலைவன்! காதலியின் காலடி புண்ணாவதைப் பற்றிக் கவலைப்படுகிறான் வள்ளுவன் காட்டும் காதலன். கவிஞர் வாலி காட்டும் காதலனோ காதலி நடந்தால் தன் இதயம் புண்ணாகும் என உருகுகிறான்! `பவழக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும், கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால் பெண்மயில் என்றே பேராகும்’ என்ற பாடல் `பணம் படைத்தவன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் வரும் வரிகள்: `பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல சொல்லிய வார்த்தை பண்ணாகும் - அவள் காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் இதயம் புண்ணாகும்!’ அழகிய நீலநிறக் குவளை மலர்களைக் கண்ணுக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. வள்ளுவர் குறள் ஒன்று அந்த மரபில் நடக்கிறது.

காணில் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் மாணிழை கண் ஒவ்வேம் என்று.’ குவளை மலர்கள் காதலியின் கண்களைப் பார்த்தால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக மாட்டோம் என்று வெட்கித் தலைகுனிந்து தரையைப் பார்க்குமாம்! அவ்வளவு அழகாம் காதலியின் நீல விழிகள். கண்ணதாசனின் ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்று 'புதிய பூமி’ திரைப்படத்தில் வரும், `சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு’ என்று வரும் பாடல். வளை என்ற சொல்லில் வார்த்தை விளையாட்டு விளையாடி, தம் கவிதையில் தமிழை வளைத்துப் போடுகிறார் கவியரசர்! அந்தப் பாடலில் வரும் ஒரு வரி வள்ளுவ மரபில், குவளை மலரோடு காதலியின் விழிகளை ஒப்பிடுகிறது.

'வந்தவளை கரம் தந்தவளை நீ
வளைத்துக் கொள்வாய் வளையிட்டு!
பூங்குவளைக் கண்கள் கொண்டவளை புதுப்
பூப்போல் பூப்போல் தொட்டு!’

பல்வலி, சளி, இருமல் ஆகியவற்றிற்குக் குவளை மலர் நிவாரணம் தரும் என்கிறதுமருத்துவம். குவளை மலரின் தாவரவியல் பெயர் நிம்ஃபியா ஓடோரடா என்பது. (Nymphaea odorata). அனிச்சம், குவளை போன்ற மலர்கள் வாசமுடையவை தான். ஆனாலும் காலப்போக்கில் வாசமிழந்து வாடிவிடக் கூடியவை. ஆனால், தமிழின் பரந்த இலக்கிய நந்தவனத்தில் நிரந்தரமாய் நறுமணம் வீசும் என்றும் வாடாத இலக்கிய மலர் திருக்குறள். அனிச்சத்திற்கும் குவளைக்கும் உடல்நலத்தைத் தரக்கூடிய மருத்துவ குணங்கள் உண்டு என்பது மெய்தான். ஆனால், மனநலத்தைத் தரக்கூடிய மாமருந்து வள்ளுவம் தான் என்பதில் சந்தேகமில்லை. உடல்நலமும் மன நலமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதை இன்றைய மருத்துவ விஞ்ஞானமே ஒப்புக் கொள்கிறது. எனவே திருக்குறள் வழியில் நின்று மனநலத்தைப் பேணுவோமானால் நம் உடல் நலமும் மேம்படும் என்பது மெய்தானே?

- திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்