SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவலை நீக்கும் காரணீஸ்வரர்

2013-12-11@ 16:00:48

தேவேந்திரன் தன் தேவலோகப் பசுவான காமதேனுவை வசிஷ்ட மாமுனிவருக்கு அர்ப்பணித்தான். பிரம்ம ரிஷியான வசிஷ்டர் காமதேனுவைக் கொண்டு தம்மை நாடி வரும் இறையன்பர்களுக்கு இன்னமுது  செய்து  மகிழ்வித்தார். தான்  அளித்த  காமதேனுவால் முனிவர் பெயரும், புகழும் பெற்றது கண்டு பொறாமை கொண்ட இந்திரன், காமதேனுவை மீண்டும் தேவலோகத்திற்கே அழைத்துக் கொள்ள முடிவெடுத்தான்.

 ஆனால், ஒரு ரிஷிக்கு தானமாகக் கொடுத்ததை திரும்பக் கோருவது முறையல்ல என்பதை அவன் உணரவில்லை. முறை உணராதவனிடம் நெறி இருக்குமா? ஆகவே காமதேனுவைக் கொணரத் தன் போர் வீரர்களை அனுப்பினான். மகரிஷியின் நேரமும், அவரின் புனிதமும் புரியாத வீரர்கள் அவரை நச்சரித்தார்கள். பூஜையின் போது குறுக்கிட்டார்கள். அதுமட்டுமில்லாது ‘தேவேந்திரன் கட்டளை, உடனே தேவலோகம் புறப்படு’ என்று காமதேனுவையும் விரட்டி இழுத்தார்கள்.

வசிஷ்டர் கோபம் கொண்டார்.காமதேனுவின் நிகரற்ற சக்திதானே இந்த இழிச் செயலுக்குக் காரணம்? அது தன் அபார சக்தியை இழந்து காட்டுப் பசுவாகிவிட்டால்..? அவர் அப்படி நினைத்த மாத்திரத்திலேயே காமதேனு தெய்வீக சக்தியை இழந்து காட்டுப் பசுவாகி விட்டது. வீரர்கள் திகைத்தார்கள். தேவேந்திரன் விஷயத்தின் விபரீதம் அறிந்து முனிவரிடம் ஓடோடி வந்தான். தன் தவறுக்காகத் தன்னை மன்னிக்கும்படி கேட்டழுதான். காமதேனு இழந்த சக்தியை எப்போது திரும்பப் பெறும் வழி கேட்டு மன்றாடினான்.

‘‘தொண்டை மண்டலத்தின் நடுவில் சோலை உண்டாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் காமதேனுவின் சாபம் நீங்கி இழந்த சக்தியை மீண்டும் பெறலாம்’’ என்று முனிவர் கூறினார். உடனே தேவேந்திரன் கார்மேகங்களைப் பொழியச் செய்து சோலையுண்டாக்கி, அங்கே சிவலிங்கத்தை வைத்து வழிபட்டான். அதனாலேயே இத்தலம் ‘காரணி’ எனப் பெயர் பெற்றது. ஈசனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று திருநாமம் ஏற்பட்டது.

நாமகளுக்கும் பூமகளுக்கும் தம்மில் கருணை மிக்கவர் யார் என்று தர்க்கம் ஏற்பட்டது. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் பூமகளுக்குப் பரிந்துபேச, அவன் மனைவி நாமகள் கோபம் கொண்டு தமது சக்தியான சிருஷ்டி தண்டத்தைப் பிரம்மனிடமிருந்து பறித்து விடுவதாகவும், இலக்குமி தேவியின் ஆலோசனைப்படி பிரம்மன் இத்தலத்து இறைவனை வழிபட்டு சிருஷ்டி தண்டத்தைத் திரும்பப் பெற்றதாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. குருக்ஷேத்திர யுத்தத்திற்குப் பிறகு அர்ஜூனன் இத்தலத்தின் இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கியதாகவும் இன்னொரு வரலாறு கூறுகிறது.

கோயிலின் ராஜகோபுரம் தென்திசை நோக்கிக் கம்பீரமாக நிற்கிறது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் ஒருபக்கத்தில் நாயோடு பத்ரகிரியாரும், எதிர் திசையில் அவருக்குக் குருவான பட்டினத்தாரும் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். கோபுரத்தின் மாடத்தில் காஞ்சி காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருவுருவச் சிலைகளைப் பார்க்கலாம். ராஜகோபுரத்தில் புராணக் கதைகளை எழில்மிகு சிலைகள் விவரிக்கின்றன. உள்பக்கம் ராமாயணப் பட்டாபிஷேகக் காட்சி நம் கண்களைக் கவருகிறது.

ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் இடப்புறம் ஆலய அலுவலகம். எதிரில் விநாயகர் சந்நதி. விநாயகரை வலமாகச் சுற்றிக்கொண்டு வந்தால் கிழக்குத் திசையில் இறைவன் காரணீஸ்வரர் சந்நதிக்கு வாசல் இருக்கிறது. கொடிமரம், நந்தியைக் கடந்தால் கருவறை. நம் பிறப்பிற்கும், வாழ்விற்கும், வளத்துக்கும், அனைத்துக்கும் காரணமாக விளங்கும் காரணீஸ்வரர் அங்கே காட்சி தருகிறார். ஐந்து தலை நாகம் குடைவிரிக்க, மேலே தாரா பாத்திரத்திலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க, அற்புதப் பொலிவோடு வீற்றிருக்கிறார். பொங்கும் அருள் பிரவாகமாகி, சந்நதியில் அதிர்வுகளாய் நகர்வதை பாமரரும் எளிதாக உணரலாம். கருவறை வாயிலில் இருபுறமும் விநாயகரும், வள்ளி-தேவசேனா சமேத முருகப் பெருமானும் காட்சி தருகிறார்கள்.

கருவறையைச் சுற்றி பிராகாரத்தின் சுவரில் திருத்தொண்டர் திருத்தொகை, சிவபுராணப் பாடல்களை பக்தர்கள் படித்துப் பாடி இன்புற எழுதி வைத்திருக்கிறார்கள். கருவறையைச் சுற்றி துர்க்கை, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி திருமூர்த்தங்கள் உள்ளன.

ஈஸ்வரன் சந்நதிக்கு அருகிலேயே தேவி சொர்ணாம்பிகையின் கருவறையும் இருக்கிறது. நின்ற திருக்கோலத்தில், திருமுகத்தில் பேரெழில் பொங்க அன்னை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். தேவியின் கருவறையைச் சுற்றி பிராகார சுவரில் அனுமந்தபுரம் காளிதாசர் இயற்றிய சொர்ணாம்பிகை நவரத்ன மாலை, அபிராமி அந்தாதி, குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலைப் பாடல்களை எழுதி வைத்திருக்கிறார்கள். காரணீஸ்வரர் ஆலயத்தின் உள்ளேயே திரிபுர சுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் கோயிலும் உள்ளது. இக்கோயிலின் தனிச் சிறப்பே இதுதான்.

வெளிப் பிராகாரம் சுற்றி வருகையில் சுப்ரமணியர் சந்நதி சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அறுபடை வீடு, கந்த புராணக் காட்சிகளும், கந்த சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா, சண்முக கவசம், ராமலிங்க அடிகளாரின் பாடல்கள் என சுற்றிலும் முருகனின் பெருமை துலங்குகிறது.

நவகிரக மண்டபத்திற்கு அருகில் ஆஞ்சநேயருக்கும், சனி பகவானுக்கும் தனித்தனிச் சந்நதிகள் உள்ளன. சனிக் கிரக தோஷம் உள்ளவர்கள் இந்த சந்நதியில் பிரார்த்தனை செய்து கொண்டு விசேஷ பூஜை செய்தால் தோஷம் நீங்கி, நற்பலன் விரைவில் கை கூடுகிறது என்கிறார்கள். நவகிரக மண்டபத்திற்கு அருகில் அகோர வீரபத்திரர் சந்நதி. கோயிலுக்குப் பழம் பெருமை உண்டென்றாலும் சென்ற நூற்றாண்டில்தான் ராஜகோபுரமும், உள் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கோயிலுக்கு வெளியே மேற்குப் பக்கத்தில் கோபதிசரஸ் திருக்குளம் இருக்கிறது. 1982-ம் ஆண்டு கோயிலுக்குத் திருப்பணி செய்து, திருக்குளத்தையும் செப்பனிட்டுச் சுற்றுச்சுவர் எழுப்பி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998-ம் ஆண்டு விமானங்களுக்கு வண்ணப்பூச்சும், பிராகாரங்களுக்கு பளிங்கு கற்கள் பதித்தும், சுற்றுச் சுவர்களில் பதிகங்கள் பொறித்தும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சித்திரையில் பிரம்மோற்சவம், ஆனியில் திருமஞ்சனம், ஐப்பசியில் கந்த சஷ்டி, மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தையில் தெப்போற்சவம் என காரணீஸ்வரர் ஆலயம் எப்போதும் திருவிழாக் கோலத்தில் திகழ்கிறது. சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் ஈசனுக்கு 1008 சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சித்திரைப் பெருவிழாவின்போது முன்பெல்லாம் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும்போது மேற்கிலிருந்து கிழக்கில், ரெயில் பாதையைக் கடந்து சென்று வருவது வழக்கம். இதற்கு ஏதுவாக ரயில்வே கேட் அருகில் மேலே செல்லும் மின்சார டிராக்ஷன் கம்பிகள் சிறிது தூரத்திற்கு இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருந்தன. இப்போது இந்த வசதி இல்லாததால் வீதி உலா கிழக்கு சைதாப்பேட்டைக்கு வருவதில்லை.
சைதாப்பேட்டை காரணீஸ்வரர் நம் மனக் கவலைகளை விலக்கி வாழ்வில் புத்தொளி  தோற்றுவிக்க காத்திருக்கிறார்.

watching my girlfriend cheat open my girlfriend cheated

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்