SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்தம் அருளும் அன்னபூரணி

2013-12-11@ 16:00:48

தஞ்சாவூர்

பதிணென் சித்தர்களில் ஒருவர் கொங்கணச் சித்தர். இவர் திருமழிசை ஆழ்வாரின் நண்பர் என்றும் ஒரு கருத்துண்டு. இவரது வரலாறு வள்ளுவரின்  வரலாற்றோடு இணைந்து கூறப்படுவதுண்டு. ஒருமுறை திருவோடு ஏந்தி வள்ளுவரின் இல்லத்திற்கு இவர் சென்றார். கொங்கணர் யாசித்து குரல்  கொடுத்தார். அப்போது வள்ளுவரின் மனைவி வாசுகி தன் கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். எனவே பிட்சையிட தாமதமாக வந்தாள்.  தாமதமாக வந்த வாசுகியை கொங்கணர் கோபமாக நோக்க, ‘‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’’ என்று வாசுகி கோபமாக கூற, அவளது  கற்பின் வலிமையை உணர்ந்து சித்தர் தலை வணங்கியதாகவும் ஒரு கதை உண்டு.

கொங்கணர் இமயமலையில் தவமிருந்தார். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், ‘‘நீ தெற்கே உள்ள சமீவனம் எனும் புனித இடத்திற் குச் சென்று, கொங்கணேஸ்வரர் என்ற பெயரில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து சித்தி பெறுவாயாக’’ என அருள்பாலித்தார். சித்தரும் அதன்படியே சமீவனம் என அழைக்கப்பட்ட தஞ்சபுரிக்கு வந்து சேர்ந்தார். கொங்கணரிடம் ஒரு குணம் உண்டு. தான் விரும்பும் பொருளை அடையும்போது அதை தனது ஜடா முடியில் மறைத்து வைத்துக் கொள்வார். கொங்கணர் தஞ்சாவூர் என அழைக்கப்படும் தஞ்சபுரியில் தவம் இருக்கத் தொடங்கினார். அவரது கடுமையான தவத்தைக் கண்டு மனம் இளகிய மகாதேவன் கொங்கணருக்கு காட்சி தந்தார்.

தனது  வழக்கப்படி கொங்கணர் ஈஸ்வரனை தனது ஜடா முடியில் மறைத்து வைத்துக் கொண்டு மீண்டும் தவமியற்றத் தொடங்கினார். அடுத்த கணம்
பூவுலகை இருள் சூழ்ந்தது. தேவர்கள் செய்வதறியாது தவித்தனர். ஒரு புலியை ஏவி சித்தரின் தவத்தை கலைக்க முடிவு செய்தனர். தேவர்கள் எண்ணியபடியே ஒரு புலியை அவர் மீது ஏவ, தனது தவ வலிமையால் அந்தப் புலியைத் தனது தண்டத்தால் அமுக்கி தனது வாகனமாக்கிக் கொண்டு தவத்தைத் தொடர்ந்தார். தேவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் சப்தரிஷிகளிடம் போய் முறையிட்டனர். சப்தரிஷிகள் கொங்கண சித்தரை வழிபட்டு நின்றனர். பின், உல குக்கு ஒளி வர என்ன செய்ய வேண்டும் என்று சித்தரை வேண்டி கேட்க, அவர் சொன்னபடியே ஒரே நாளில் 365 தீபங்களை ஏற்றி வழிபட, பரமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் ஞானாம்பாளுடன் காட்சி அளித்தார். உடனே, சித்தர் சிவபெருமானையும், ஞானாம்பாளையும் அங்கேயே பிரதிஷ்டை செய் தார். அது முதல் அங்கு அருள்பாலிக்கும் இறைவன் கொங்கணேஸ்வரர் என அழைக்கப்படலானார்.

இதுவே தஞ்சையில் உள்ள கொங்கணேஸ்வரர் ஆலயத்தின் தல வரலாறாகும். இந்த ஆலயத்தில் இரண்டு அம்மன் சந்நதிகள் உள்ளன. இரண்டாவ தாக உள்ள அம்மனின் திருப்பெயர் அன்னபூரணி. இந்த அன்னைக்கு தனி வரலாறு உண்டு. இந்த ஊரில் ஒரு தீவிர பக்தர் இருந்தார். அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. தனக்கு குழந்தை இல்லையே என அவர் பெரிதும் வருந்தினார். தினம் தினம் இறைவனிடம் தன் குறையைக் கூறி அழுதார். அவரது வேண்டுகோளுக்கு இறைவன் செவி சாய்த்தார். ஒரு அசரிரீ, ‘‘உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும், கவலைப்படாதே’’ என்று ஒலித்தது.

மறுநாள் அவர் கோயில் தீர்த்தத்தில் குளிக்கச் சென்றபோது குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஓடிப் போய் அந்தக் குழந்தையை எடுத்தார். அது ஒரு  பெண் குழந்தை. அன்னபூரணி என பெயரிட்டார். குழந்தை வளர்ந்து குமரியானாள். அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய அவளது பெற்றோர்  முனைந்தனர். இதைக் கேள்விப்பட்ட அன்னபூரணி ஆலயத்திற்குச் சென்றாள். ‘‘நான் சிவபெருமானைத்தான் மணந்து கொள்வேன்’’ எனக் கதறினாள். அவள் முன் விநாயகர் தோன்றினார். ‘‘நீ இறைவனை நோக்கித் தவமிரு. நிச்சயம் நீ அவரை அடைவாய்’’ எனக்கூறி அவள் தவமிருக்க வேண்டிய முறைகளையும் விநாயகர் அவளுக்கு கற்றுக் கொடுத்தார். அன்னபூரணி இறைவனை நோக்கித் தவமிருந்தாள்.

அவளது தவத்திற்கு காவலாக மேற்கு  முகமாக காளியும், கிழக்கு முகமாக துர்க்கையும் இருந்தனர். இறைவன் அவளது தவத்திற்கு இரங்கி, காட்சியளித்து, அவளை தன்னுடன் இணைத்துக்  கொண்டார். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகிய ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் விசாலமான அலங்கார மண்டபம். அதை அடு த்து துவஜ மண்டபம். நெடிதுயர்ந்த கொடிமரம். அதனைக் கடக்கும் போதே வலதுபுறம் அன்னை அன்னபூரணியை தரிசிக்கலாம். இறைவி இங்கு  அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறாள். தன்மேல் வலதுகரத்தில் அங்குசத்தையும் மேல் இடது கரத்தில் பாசத்தையும் கீழ் வலது,  இடது கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் அன்னை அமர்ந்துள்ள அழகே அழகு.

அடுத்துள்ள சோமாஸ்கந்தரை தரிசிக்கிறோம்.  மண்டப நுழை வாயிலின் வலதுபுறம் அன்னை அன்னபூரணி யோகம் செய்ய உதவிய யோக விநாயகரின் திருமேனி உள்ளது. உள்ளே இறைவி ஞானாம்பாளுக்குத்  தனி சந்நதி. அடுத்து, மகா மண்டபம். இதன் நுழைவாயிலில் கம்பீரத் தோற்றத்தில் துவார பாலகர்கள். கருவறையில் இறைவன் கொங்கணேஸ்வரர்  லிங்கத் திருமேனியாய் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவ கோஷ்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தியும் மேற்கில் விஷ்ணுவும் அருள் பாலிக்கின்றனர். இறைவியின் தேவ கோஷ்டத்தில் கீழ்புறம் அம்மனும் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் அன்னபூரணியின் திருமேனிகளும் உள்ளன.

அன்னை ஞானாம்பாள் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். இறைவியின் மேல் வலது கரத்தில் மானும் மேல் இடது கரத்தில் மழுவும் கீழ்  வலது மற்றும் இடது கரங்களில் அபய வரத ஹஸ்தங்களுடன் திகழ்கிறாள். அன்னை நின்ற கோலத்தில் புன்னகை தவழ காட்சியளிக்கும் அழகைக்  காணக் கண் கோடி வேண்டும். பிராகாரத்தில் கொங்கண சித்தர் தனி சந்நதியில் தரிசனம் தருகிறார். சித்தருக்கு அபிஷேகம் செய்து, 365 தீபம் ஏற்றி  வணங்கி வந்தால் நினைத்த காரியம் ஒரு வருடத்துக்குள் நிச்சயம் நடந்தேறுகிறது. இவருக்கு அடுத்தது திரியம்பகேஸ்வரர், திரிபுர சுந்தரி திருமேனி கள் உள்ளன.

பிராகாரத்தின் தென்பகுதியில் நால்வர் சந்நதி உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் கோடி விநாயகர், வள்ளி-தெய்வானை-முருகன், விஸ்வநாதர், விசா லாட்சி, பஞ்ச லிங்கங்கள், கெஜலட்சுமி, சதாசிவலிங்கம் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். இதுதவிர ஜுரஹரேஸ்வரர் தனி சந்நதியில் வீற்றிருக்கிறார். தீராத ஜுரத்தை நிவர்த்தி செய்வதில் ஜுரஹரேஸ்வரர் வல்லவர் என பக்தர்கள் அனுபவபூர்வமாகக் கூறுகின்றனர். வடக்குப்  பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சந்நதி. ஆலயத்தில் மகிழமரம், வன்னிமரம் என இரண்டு தல விருட்சங்கள். இவை இரண்டும் ஆலயத்தின் வடக்கு  பிராகாரத்தில் உள்ளன. கிழக்குப் பிராகாரத்தில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, சூரியன், சனிபகவான், பைரவர் போன்றோர் கொலுவிருக்கின்றனர்.

புகழ்ச் சோழனின் தந்தையாகிய வீரமார்த்தாண்டன், இந்த ஆலயத்தை புதுப்பித்து குடமுழுக்கும் செய்தார். அதன்பின் வந்த மன்னர்களும் ஆலயத்  தொண்டைத் தொடர்ந்தார்கள். தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்தலம், 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இங்குள்ள கொங்கண சித்தரையும் ஈசனையும் பிரதோஷம், திங்கட்கிழமைகள், சிவராத்திரி தினங்களில் வழிபட்டால் எம பயம் நீங்கும். தஞ்சாவூர்-சிவகங்கை பூங்கா அருகே, மேலராஜ வீதியில் இந்த கொங்கணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

ஜெயவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்