SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாரதர் விமோசனம் பெற்ற விராலிமலை முருகன் கோயில்

2016-11-04@ 14:04:00

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற சுப்ரமணிய சுவாமி (முருகன்) கோயில் உள்ளது. மயில்கள் நிறைந்த மலை மேல் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். 207 படிகளைக் கடந்தால் கோயிலை அடையலாம். ஆறுமுகப்பெருமான் வீற்றிருக்கும் தெற்குப் பார்த்த மயில் அசுர மயில் என்றழைக்கப்படுகிறது. மூலவர் - சண்முகநாதன்(ஆறுமுகம்). அம்மன் - வள்ளி மற்றும் தெய்வானை. தல மரம் - காசிவில்வம். வயலூரில் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்த முருகன், விராலிமலைக்கு வரச் சொன்னதால் இங்கு அருணகிரிநாதர் வந்தார். வயலூரில் இருந்து புறப்பட்ட அருணகிரிநாதர் விராலிமலை செல்ல வழி தெரியாமல் தவிக்கவே, வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரி நாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம்.

தற்போது கோயில் இருக்கும் இடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அந்த மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடத்தையே ஆறுமுகனாரின் உறைவிடமாக கொண்டு வழிபடத் துவங்கியதாகவும் கூறுவர். இத்தலத்தில் வசிஷ்டரும், அவர் தம் இல்லாள் அருந்ததியும் சாபம் நீங்க தவமிருந்தனர். இம்மலையில் தான் பரகாயப் பிரவேசனம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்து திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன. நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம் மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர். இத்தலம் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனி கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம், கந்தசஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.

தவிட்டுக்கு பிள்ளை: பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சித்தப்பாமார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டை கொடுத்து பிள்ளையைப் பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது. முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டம், அடிப்பிரதட்சணம் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கின்றனர். கார்த்திகை மாதம் விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் செய்யலாம்.

வளைந்த தம்புரா நாரதர்: விராலிமலை சண்முகர் கோயிலில் நாரதர் உற்சவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன் அவரது ஒரு தலையை கொய்தார். அப்போது, நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். அவரது தம்புராவும் வளைந்தது. எனவே, இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா செல்வது சிறப்பாகும்.
கோயிலை சுற்றி அதிகமான மயில்கள் உள்ளன. கோயில் வளாகத்தில் நாரத முனி மற்றும் ரிஷி காஷ்யபரின் சிலைகள் உள்ளன. கோயில் தூண்களில் ஆறுமுகம் மற்றும் அருணகிரி நாதரின் பல்வேறு உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

சுருட்டு படைப்பது ஏன்?

எந்த ஒரு முருகன் கோயிலிலும் இல்லாத சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் விசித்திர வழக்கம் இக்கோயிலில் உண்டு. இதற்கு ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும்  துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்ற அடியவர் நிற்கையில், அருகில் நின்ற மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு  இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றை கருப்பமுத்து  கொடுத்தாராம். பின்னர், இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமல் போய் விட்டது  கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதை கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என  உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டை மன்னர் தடையிடவும், பெருமான்  அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை  வளர்க்கும் குறியீடு தான் எனவும், புகைப்பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல  எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.

விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழித்தடத்தில் 20 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்