SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஷ்டங்களை போக்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்

2016-08-27@ 12:41:46

நெல்லும், தென்னையும், மஞ்சளும், வாழையும் செழித்து நிற்கும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கிருஷ்ணகிரி வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த நகரம். 500 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயநகரப் பேரரசின் ஆளுகையில் இந்த நகரம் இருந்தது. மன்னர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி காலத்தில் இங்கு, ஏராளமான சைவ, வைணவ கோயில்கள் கட்டப்பட்டன. இதேபோல் கற்பாறைகளில் ஆஞ்சநேயரின் வீரம் ததும்பும் உருவங்கள் செதுக்கப்பட்டன. அப்படி பாறை மீது செதுக்கப்பட்ட ஓர் அரிய கலைச் சிற்பத்திற்காக, மன்னரால் உருவாக்கப்பட்டது தான் காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில். கிருஷ்ணகிரியில் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தேவசமுத்திரம் கிராமத்தில் காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம் என்று அண்டை மாநில மக்களும் திரண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர். ராமபிரான் மீது அளவில்லா பற்று கொண்ட அனுமான், சிறுவயதிலேயே வனத்தில் வாழ்ந்து சீதைக்கு உதவினார் என்று ராமாயணம் சொல்கிறது.

இதை நினைவு படுத்தும் வகையில் காட்டில் கோயில் கட்டப்பட்டது. இதனால் ‘காட்டுவீர ஆஞ்சநேயர்’ என்ற  திருநாமம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மூலவரான ஆஞ்சநேயர், ஒரே கற்பாறை மீது செதுக்கப்பட்டுள்ளார் என்பது வேறு எங்கும் இல்லாத ஒன்று. கரடு முரடான பாறைகளுக்கு மத்தியில் காட்டுப்பகுதியில் கொலுவீற்றிருக்கும் ஆஞ்சநேயரை தரிசித்து, மனதார வேண்டினால் கஷ்டங்கள் அனைத்தையும் கடுகாக்குவார் என்பது மூன்று மாநில மக்களும் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. ஆஞ்சநேயருக்கு அருகில் யோக நரசிம்மர், லட்சுமி தாயார் சன்னதிகள் கலையம்சத்தோடு இருப்பதும் சிறப்பு. தீபாவளி, பொங்கல், தமிழ் வருடபிறப்பு, யுகாதி என்று அனைத்து முக்கிய விழா நாட்களிலும் தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளும் பிரகார உற்சவம் நடைபெறுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும், பவுர்ணமி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, நரசிம்ம ஜெயந்தி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கமாக உள்ளது. இந்த நாட்களில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெண்ணெய் காப்பு, சந்தன காப்பு சாற்றி  நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

தேங்காய் பை கட்டி வினோத நேர்த்திக்கடன்

நூற்றாண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலையை சேர்ந்த சித்தர் ஒருவர் இங்கு வந்துள்ளார். அப்போது காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் தேங்காய் பை கட்டி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்று கூறியுள்ளார். இதையடுத்து இக்கோயிலில் தேங்காய் பைகள் கட்டி வேண்டுதல் வைப்பது பிரபலமானது. கல்வி, செல்வம், தொழில்வளம் என்று வேண்டுதல்களுக்கு பை கட்டினால் 11 நாட்கள், 11 வாரங்கள், 11 மாதங்களில் அது நிறைவேறும் என்பது ஆண்டாண்டு காலமாய் ஆஞ்சநேயரை வழிபடும் மக்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறினால் அந்த பையில் உள்ள தேங்காயை உடைத்து பொங்கல் வைத்து, ஆஞ்சநேயருக்கு படைத்துவிட்டு உண்ணும், நேர்த்திக்கடனும் இங்கு வினோதமானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்