SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாமகம் என்பது என்ன கணக்கு?

2016-02-18@ 10:41:07

கோவிந்த தீட்சிதர் முறைகேடாக நடந்து கொண்டதாக மன்னர் கோபம் கொண்டார். ஆனால், அவரை சமாதானப்படுத்திய தீட்சிதர் அவரை துலாபாரம் போடும்படி கேட்டுக்கொண்டாராம். அதாவது மன்னர் தராசின் ஒரு தட்டில் அமர, மக்கள் தம்மாலியன்ற பொன், பொருட்களை இடுவார்கள். மன்னரின் எடைக்கு எடை, பொன் முதலான பொருட்கள் சேர்ந்துவிட, அந்தப் பொருட்களை வைத்து மன்னர் விரும்பியபடியே விஷ்ணு கோயிலைக் கட்டித் தந்தாராம் கோவிந்த தீட்சிதர். மகாமகக் குளத்தின் மேற்குக் கோடியில் இன்றும் துலாபார மண்டபம் துலங்கக் காணலாம். உள்ளே உள்ள துலாபார சிற்பம், மேலே சொன்ன புராண சம்பவத்துக்கு ஆதாரமாக அழகுடன் மிளிர்கிறது. கோவிந்த தீட்சிதர் நிர்மாணித்த சிவலிங்கங்கள் அழகிய முன்மண்டபங்களைக் கொண்டு மகாமகக் குளத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. வடக்குக் கரையில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனச்சுரர், இடபேஸ்வரர் ஆகிய நான்கு சிவ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. குளத்தின் வடகிழக்குக் கோடியில் பாணேஸ்வரர் கொலுவிருக்க, கிழக்குக் கரையில் கோணேஸ்வரர், குணேஸ்வரர் ஆகியோரும் தென்கிழக்குக் கோடியில் பைரவேஸ்வரர், தெற்குக் கரையில் அகத்தீஸ்வரர், வியாகேஸ்வரர், உமாபாகேசர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.

மேலும் குளத்தின் வடமேற்குக் கோடியில் க்ஷேத்திரபாலேச்சுரர், மற்றும் மேற்குக் கரையில் ரிஷபேஸ்வரர் பக்திகேஸ்வரர், நைனிகேஸ்வரர், கங்கேஸ்வரர் ஆகியோரும் அருளாசி வழங்குகின்றனர். இந்த சிவ மண்டபங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திய பெருமையும் கோவிந்த தீட்சிதரையே சாரும். இப்படி பதினாறு சிவசந்நதிகளைக் கட்டி மகாமகக் குளத்துக்கு சிறப்பு செய்த கோவிந்த தீட்சிதர், குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகளைக் கட்டி பக்தர்கள் அதன் வழியே இறங்கி குளத்தில் நீராட வழிவகை செய்து கொடுத்தார். குளக்கரைகளில் உள்ள இந்த சிவன் கோயில்களுக்கு நித்ய பூஜை தவறாமல் நடைபெறுகிறது. மாத சிவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி தினங்களில் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. மஹாசிவராத்திரி அன்று எல்லாவகை அபிஷேகங்களும் இந்த சிவலிங்கங்களுக்கும் உண்டு. இந்த மகாமக குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசிமகம் கொண்டாடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் வரும் மகம் நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் நீராடி ஆன்மிகப் பலன் எய்துகிறார்கள்.

மகாமகம் நீராடல் என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஜோதிடரீதியாக அந்த நாள் இப்படிக் கணக்கிடப்படுகிறது: சூரியனுடைய ஆட்சி வீடு சிம்ம ராசி. இந்த சிம்ம ராசியில் சந்திரனும், குருவும் ஒன்றாகச் சேர்ந்து இருக்க, சிம்மராசிக்கு ஏழாவது வீடாகிய கும்ப ராசியில் சூரியன் அமர்ந்து கொண்டு அங்கிருந்தபடியே தன் சொந்த வீடாகிய சிம்மராசியில் இருக்கும் குருவையும், சந்திரனையும் பார்க்கும் நாள், இது. இத்தகைய கிரக அமைப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படும். இந்த சமயத்தில் சந்திரன், மாசி மாதத்தில், மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமியாக ஒளிருவார். இந்தநாள்தான் மகாமக தினம். இந்த தினத்தில் மகாமகக் குளத்தில் நீராடி தம் பாவங்கள் தொலையப்பெற்று நற்கதி அடைகிறார்கள், பக்தர்கள். இந்தக் குளத்திற்கு அமுதவாவி, கன்னியர் தீர்த்தம், அமுதத் தீர்த்தம், பாபநாசத் தீர்த்தம் ஆகிய பெயர்களும் உண்டு. இந்த மகாமகக் குளத்தினுள் மொத்தம் இருபது தீர்த்தங்கள் அதாவது ஊற்றுகள் உள்ளன. ஒவ்வொரு ஊற்றும் ஒவ்வொரு வகையான பலனைத் தரக்கூடியது. மகாமக தினத்தன்று தம்மை நாடிவரும் பக்தர்களுக்குப் பல நற்பலன்களை அளிக்க அந்தந்த தீர்த்தங்கள் தயாராக உள்ளன.

ஆபத்தின்றி நீராட...

மகாமக குளத்தின் தரைப் பகுதியில் ஆற்று மணல் பரப்பிச் செப்பனிட்டிருக்கிறார்கள். நீராடும் பக்தர்கள் சேற்றில் கால் புதையவோ, சறுக்கி விழவோ கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதேபோல நாற்புற படிக்கட்டுகளையும் புள்ளியிட்டு (Sand Blasting) செய்து சொரசொரப்பாக்கி யிருக்கிறார்கள் - பாசி படிந்து சறுக்கிவிடக்கூடாது என்பதற்காக. 24 மணிநேரமும் நீராடலாம் மகாமகக் குளத்தில் பகல், இரவு எல்லா நேரங்களிலும் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளத்திற்கு வரும் வழியெங்கும் 400 எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்ட கூடுதல் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நகரெங்கும் கூடுதலாக 100 மின்கம்பங்கள். குளத்துக்கு நீர் சப்ளை குளத்தில் தினமும் 60 லட்சம் லிட்டர் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் விடப்படுகிறது. இந்த நீர் சுத்தம் செய்யப்பட்டதை நகராட்சி மருத்துவர்களும், நகராட்சிப் பொறியாளர்களும் சோதித்து உறுதி செய்வார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்