SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரஸ்வதி அருள் பெற்று சாதனை படைத்தவர்கள்

2015-10-20@ 12:12:06

நன்றி ஆன்மீக பலன்

கம்பர்


ராமாயணம் புனைந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவழுந்தூரில் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் தந்தை பெயர் ஆதித்தர். தமிழில்  `விருத்தம்’ என்னும் பா வகையை முதன் முதலில் இவர்தான் அறிமுகப்படுத்தினார். இவருக்குப் பிறவியிலேயே, சரஸ்வதிதேவியின் அருள்  நிறைந்திருந்தது. உலகம் உய்யவும், உலகில் உள்ள அனைவரும், அனைத்து நலன்களையும் பெற்று வாழவும், கம்பர், சரஸ்வதி மீது 30 பாடல்களை  இயற்றினார். இவற்றில் சரஸ்வதிதேவியின் வடிவழகையும், குணாதிசயங்களையும் அருளையும் விவரித்துள்ளார். இந்த சரஸ்வதி அந்தாதியை  மாணவர்கள் மனப்பாடம் செய்தால் சரஸ்வதியின் அருள் பெற்று சிறந்த புலவனாக கல்வியாளனாக விளங்கலாம். கம்பரால் வழிபடப்பட்ட சரஸ்வதி, தற்போது கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரம் கோட்டையில் எழுந்தருளி இருக்கிறாள்.

காளிதாசர் மகிஷபுரியில் மகேந்திரன் என்ற அரசன் ஆட்சி  செய்து வந்தான். அவனுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் எல்லாக் கலைகளையும் கற்றவள். அற்புத அழகு வாய்ந்தவள். அவளைத் தகுந்த  ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க அரசன் ஆசைப்பட்டான். அவளுடன் வாதில் வெல்பவருக்கே அவளை மணம் முடித்துக் கொடுப்பதாக  அறிவித்தான். இதையறிந்து எத்தனையோ அரசகுமாரர்கள் வந்து அவளுடன் வாதிட்டுத் தோல்வியே கண்டனர். இதனால் மனம் வெறுத்த அந்த அரச  குமாரர்கள், ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள். அதன்படி, கல்வி அறிவே இல்லாமல் ஆடுமாடு மேய்க்கும் ஒருவனை வரவழைத்து அவனை  மகாவித்வான் என்று கூறி கொலுமண்டபத்தில் அமர வைத்தார்கள்.

அவனை அவர்கள் தங்கள் குரு என்றும், மௌனமூர்த்தி என்றும் கூறினார்கள். அரசகுமாரி அவனுடன் சமிக்ஞையாக வாதாட ஆரம்பித்து, உலகத்திற்கு  மூல காரணம் ஒன்று என்பதை கேட்கும் விதமாக ஒரு விரலைக் காட்டினாள். அதற்கு அவன் இரண்டு விரல்களைக் காட்டினான். உடனே சீடர்கள்  என்று தங்களைக் கூறிக் கொண்ட அந்த அரச குமாரர்கள், இரண்டு தத்துவங்கள் சேர்ந்துதான் உலகம் உண்டாகின்றது என்று வாதாடி அரச குமாரியை  வாதில் வென்றார்கள். பிறகு அரசன் அந்த ஆடு மேய்ப்பவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்தார். அன்றிரவே அவனைப் பற்றிய உண்மையை அறிந்த அரசகுமாரி கடும் கோபம் அடைந்தாள்.

அவனிடம், “நீ காளிதேவி கோயிலுக்குச் செல். இந்தச் சமயத்தில் தேவி வெளியில் சென்றிருப்பாள். நீ உள்ளே சென்று கதவை அடைத்துக் கொள்.  அவள் வந்தவுடன் ‘பீஜாட்சரத்தை என் நாவில் எழுதினால் தான் கதவைத் திறப்பேன் என்று கூறு’ என்று சொல்லி அனுப்பினாள். அவனும் அவ்வாறே  செய்தான். அதன்படி சரஸ்வதியின் ரூபமான காளிதேவி, அவனின் வேண்டுகோளின்படி, நாவில் தன் சூலத்தால் பீஜாட்சர மந்திரத்தை எழுதினாள். காளியின் அருள் பெற்று வந்த அவனது அறிவால் ஒளி வீசியது. இதைக்கண்ட அரசகுமாரி மகிழ்ந்தாள். “ஏதாவது கல்விப்பயன் உண்டா? என்று  கேட்டாள்.

உடனே அவர் `குமாரசம்பவம்’, `மேகஸந்தேசம்’, `ரகுவம்சம்’ ஆகிய காவியங்களை அமிர்தமழை பொழிவது போல் பொழிந்தார், காளிதாசரானார்.  அதைக் கண்டு அரசகுமாரி அவன் மீது மிகுந்த காதல் கொண்டு அவனுடன் வாழ விரும்பினாள். ஆனால், தன் வித்தைக்கு காரணமாக இருந்த  அவளை, தன் தாய்க்கு சமமாகக் கருதி அவர் விலகினார். மகாசரஸ்வதியாகிய காளிதேவியின் அருள் பெற்றதால், இவரை `காளிதாசர்’ என்று  எல்லோரும் அழைத்தனர்.  காளிதாசர், மன்னன் விக்கிரமாதித்தன் அரண்மனையில் `கவிகுல திலகமாக’ விளங்கினார்.

ஒட்டக்கூத்தர்

சிவகங்க பூபதி-வண்டார் குழலி தம்பதியர் நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினர். ஒருநாள் சிவபெருமான் அவர்களிடம், “நீங்கள் இருவரும் சிதம்பரத்தை அடைந்து நடராஜரை வழிபடுங்கள்’’ என்று கூறினார். அதை கேட்ட சிவகங்க பூபதி மகிழ்ந்து சிதம்பரத்துக்கு சென்றார்.  அத்திருத்தலத்தையே வாசஸ்தலமாகக் கொண்டார். தினந்தோறும் மனைவியோடு சென்று அம்பலவாணர் முன் நின்று போற்றினார். ஓர்நாள்  கனகசபையரின் கருணையினால் “இனி உனக்கு அம்பலக் கூத்தனின் அருள் உண்டாகும்’’ என்ற அசரீரி வாக்கைக் கேட்டனர். இதனால் மகிழ்ந்த  தம்பதியினருக்கு, விரைவில் மகப்பேறு ஏற்பட்டது. ஒரு அழகான ஆண்பிள்ளைப் பிறந்தது. அதற்கு `அம்பலக் கூத்தன்’ என்று பெயர் வைத்தனர். அவன்  வளர வளர, சிறுவர்கள் அவனை `கூத்தன்’ என்றே அழைத்தார்கள். 5 வயதிலேயே கல்வித் திறனைப் பெற்று வித்தை பல பயின்றார்.

சரஸ்வதிதேவியின் படத்தை வைத்து வணங்கி வந்தார். அதோடு சிற்ப சாஸ்த்ர விதிப்படி எழுதி ஓர் பூஜா மண்டபம் அமைத்து வேத ஆகம விதிப்படி  பூஜித்து ஆகாரம், தூக்கம் துறந்து விரதம் இருந்து வந்தார். ஓர் நாள் இரவில் மிகக் களைத்துச் சோர்ந்து சாய்ந்தார். அப்போது சரஸ்வதி தன்  திருமுலைப் பாலை வட்டிலில் கறந்து குடிக்க கொடுத்தாள். பிறகு `சகலகலா நிலய’மென்ற ஓர் புத்தகத்தினை அவர் கையில் தந்து மறைந்தாள்.  கூத்தன் சோர்வு நீங்கி எழுந்து புத்தகம் தந்தவள் சரஸ்வதிதேவியே என்ற முடிவுக்கு வந்தார். பிறகு விரதத்தினை பூர்த்தி செய்தார். சரஸ்வதிதேவி  அளித்த புத்தகத்தை இடது கரத்தில் ஏந்தி பலமுறை படித்து அதை உலகமெங்கும் சொல்லக் கிளம்பினார். பிறகு கூத்தனூரில் சரஸ்வதிக்கு கோயில்  கட்டி வழிபட்டார்.

காளமேகப் புலவர்

திருவானைக்கா தந்த தமிழ்ப்புலவர். தாயுமானவருக்கும் முந்தைய காலத்தவர். கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் வரதன். ஸ்ரீவைணவ  சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் பரிசாரகராய் இருந்தார். திருவானைக்கா  கோயில் தேவதாசியிடம் கொண்ட மையலால் அவளை மணந்து சைவர் ஆனார். தினமும் ஆலயத் திருப்பணிகளை இருவரும் செய்து வந்தனர்.  ஒருநாள் அர்த்தஜாம வழிபாட்டின்போது வரதன் மனைவி மோகனாங்கி நாட்டியம் ஆடும் முறை வந்தது. தான் நாட்டியம் ஆடிவிட்டுத் திரும்ப நேரம்  ஆகும் என்பதால் கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொல்லியிருந்தாள் மோகனாங்கி.  தன் வேலைகள் முடித்து மண்டபத்திற்கு  வந்து காத்திருந்த வரதன் அசதி மிகுதியால் தூங்கிவிட்டார்.

ஆடிமுடித்து வந்த மோகனாங்கிக் கணவனை அழைத்தாள். அவன் வராத காரணத்தால் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என நம்பி வீடு சென்றாள். ஆனால்,  நடந்தது என்ன? அந்த மண்டபத்தில் வரதன் தனியே இருக்கவில்லை. அம்பிகையின் அருளை வேண்டி ஒரு பண்டிதரும் இரவு பகல் பாராமல் தவம்  செய்துகொண்டிருந்தார். ஞானம் வேண்டித் தவம் செய்த அவருக்கு ஞானம் கொடுக்க எண்ணிய அம்பிகை அங்கே வந்தாள். தூங்கிக் கொண்டிருந்த  வரதன் திடுக்கிட்டு எழுந்தான். என்ன சத்தம் அது? கால்களில் சிலம்பும், பாடகங்களும் அணிந்து ஒரு பெண் நடக்கும் ஒலி கேட்டது. வரதன் பார்த்துக்  கொண்டே இருந்தான். அப்போது அழகான சின்னஞ்சிறு பெண் ஒருத்தி தன் காலணிகள் கணீர் கணீரென ஒலி எழுப்ப வந்தாள்.

பண்டிதர் அருகில் சென்று, தன் வாயில் இருந்த தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே அவர் வாயைத் திறக்கச் சொன்னாள். அம்பிகையை  எதிர்பார்த்திருந்த பண்டிதர் ஒரு சிறு பெண் வந்து எச்சில் தாம்பூலத்தைத் தன் வாயில் துப்ப வாயைத் திறக்கச் சொல்கின்றாளே என எண்ணிக்  கோபத்துடன் அவளைத் திட்டி அனுப்பினார். திரும்பிச் செல்ல முயன்ற அம்பிகையோ தூணில் சாய்ந்து அரை உறக்கத்தில் தன்னையே பார்த்துக்  கொண்டிருந்த வரதனைக் கண்டாள்.  ஒன்றும் புரியாமல் வாய் திறந்த வரதனின் வாயில் அம்பாள் தாம்பூலம் உமிழ்ந்தாள். அன்று முதல் சாதாரண
வரதன் கவி காளமேகம் ஆனார்.

அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராய் விளங்கிய காளமேகக் கவி, அகிலாண்டேஸ்வரியை சரஸ்வதியாகவே பாவித்து சரஸ்வதி மாலை  என்னும் நூலைப் பாடினார். திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், தனிப்பாடல்கள், யமகண்டம் என்ற பாடல் தொகுப்புகள் காளமேகத்தால்  பாடப்பட்டவை. சிலேடை எனப்படும் இரு பொருள் கொண்ட கவிகளும், நகைச்சுவைக் கவிகளும் மிகுதியாகப் பாடியுள்ளார்.  பிறரை எள்ளி நகையாடும்  வண்ணமும் பாடியதால் வசைக்கவி என்ற பெயரும் இவருக்கு உண்டு.

குமரகுருபர சுவாமிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் வாழ்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் மகனாக குமர  குருபரர் பிறந்தார். இவர் ஐந்து வயது வரையிலும் பேச்சுத்திறன் இல்லாமல் இருந்தார். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானிடம் அவரது பெற்றோர்  மனம் உருகி வேண்ட, முருகனின் அருளால் பேசத் தொடங்கினார். முதன் முதலில் அவர் பாடியது. `கந்தர் கலிவெண்பா’ என்ற முருகன் புகழ் மாலை  ஆகும். 17ம் நூற்றாண்டில் இந்த அற்புதம் நடந்தது. இறைவன் அருளைப் பெற்ற குமரகுருபரர், இல்லறத்தை வெறுத்துத் துறவு நிலை கொண்டார்.  இவர் வடநாடு செல்லும் முன்பு மதுரை ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ பாடினர். அதனை மதுரை மன்னன் திருமலைநாயக்கர் மதுரை  மீனாட்சியம்மனின் திருமுன் அரங்கேற்றம் செய்து வைத்தார்.

அவர் இயற்றிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழில், வரும் பத்து பருவங்களில் (காப்பு, செங்கீரை, தாலப்பருவம், சப்பாணி, முத்தப்பருவம், வருகை,  அம்புலி, அம்மானை, கழங்கு, ஊசல்) ஆறாவது பருவமான வருகைப் பருவத்தைப் பாடியபோது மதுரை மீனாட்சி அம்மன் ஒரு சிறு பெண் குழந்தையாக  வந்து குமரகுருபரரின் மடியில் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தார். குமரகுருபரர் காசியில் ஒரு மடம் அமைக்கக் கருதினார். அதன் பொருட்டு, டெல்லி  பாதுஷாவைச் சந்தித்து இந்துஸ்தானி மொழியில் உரையாட அம்மொழி கற்க விரும்பினார். அம்மொழியை விரைவில் கற்றுக் கொள்ள  அருள்புரியும்படிக் கலைமகளை வேண்டி பத்துப் பாடல்கள் பாடினார். அவர் பாடிய அந்த பத்துப் பாடல்களே `சகலகலா வல்லி மாலை’ ஆகும்.  இதனால் சரஸ்வதியின் அருள் பெற்று விரைவில் இந்துஸ்தானியும் கற்றார்.

டெல்லி மன்னரைச் சந்தித்து மடமும் அமைத்தார். இவரால் அமைக்கப் பெற்ற அம்மடம் `குமாரசாமி மடம்’ என்ற பெயரோடு இன்றும் திகழ்கிறது.  திருக்கேதாரம் என்னும் இடத்தில் ஒரு கோயிலை அமைத்து வழிபாடு செய்து வந்தார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சி அம்மைக் குறம்,  இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, சிதம்பர  மும்மணிக் கோவை, சிதம்பர செய்யுட் கோவை ஆகிய ஆன்மிக-இலக்கிய பொக்கிஷங்களைத் தந்து சென்றுள்ளார். இவர் பாடிய, சரஸ்வதி  தோத்திரமாகிய `சகல கலா வல்லி மாலையை’ படிப்பவர்கள், கல்வியறிவே இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கல்விஞானம்  கைவரப்பெறும் என்பது அனுபவ உண்மை.

- சாந்தா கந்தவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

 • noru-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்