திருச்சி: மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று 9வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சியில் வாமடம் என்ற பகுதியில் தாத்தா-பாட்டி வீட்டில் 9வயது சிறுமி தங்கி 4ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானாள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் சிறுமி இருப்பதாக தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது சிறுமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை வாலிபர் ஒருவர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். சத்திரம் பஸ் நிலையம் அழைத்து சென்று, அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு சென்று இரவு முழுவதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலை மீண்டும் சிறுமியை சத்திரம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு தப்பியுள்ளார் என்றனர்.
இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த சின்ராசு(24) என்பதும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த சின்ராசுவை பிடிக்க முயன்றனர். அப்போது ேபாலீசாரிடமிருந்து தப்பி ஓடிய சின்ராசு தடுமாறி விழுந்ததில் கால் முறிந்தது.
இதையடுத்து போலீசார் சின்ராசுவை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் கூறுகையில், சின்ராசுக்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் முதல் திருமணம் நடந்தது. சில மாதங்களில் மனைவி பிரிந்து சென்றார். தொடர்ந்து, சேலத்தில் 2வது திருமணம் செய்துள்ளார். அவரும், சில மாதங்களில் சின்ராசுவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சின்ராசு இதுபோன்ற செயலில் மற்ற பகுதிகளில் ஈடுபட்டுள்ளாரா? என்று விசாரணை நடக்கிறது என்றனர்.
* சிறுமிக்கு பாலியல் ெதால்லை 17 வயது அண்ணன் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அங்குள்ள தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சிறுமியின் பெரியப்பா மகனாக 17 வயது சிறுவன், ஐடிஐ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். கடந்த 13ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ‘இதுகுறித்து வெளியே கூறினால் உனது பெற்றோரை கொன்று விடுவேன்’ என மிரட்டினாராம். இதுபற்றி பெற்றோரிடம் கூறி சிறுமி அழுதார். பெற்றோர் கொடுத்த புகாரின்படி செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர்.