துபாய்: 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4ம்தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் இணைந்து நடத்துகின்றன. மொத்தம் 10 மைதானங்களில் போட்டி நடைபெற உள்ளது. முதன்முறையாக அமெரிக்காவில் ஃப்ளோரிடா, டல்லாஸ், நியூயார்க் ,மோர்சிவெயில் ஆகிய நகரங்களில் உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை தலா 5 அணிகள் என 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். இதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும்.
சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளாக நான்கு அணிகள் களமிறங்கும். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். இந்த தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 15 அணிகள் இதுவரை தகுதிபெற்றுள்ளன. இன்னும் 5 அணிகள் தகுதி சுற்றுகள் மூலம்தேர்வாக உள்ளது. இந்த தொடர் மூலம் அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது. இதேபோன்று 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி தீவிரமாக முயற்சித்து வருகிறது.