கராச்சி: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 வீரர்கள் பலியான நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் நடத்திய என்கவுன்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் மேற்குப் பகுதியான பன்னு மாவட்டத்தில் நேற்று தற்கொலைப் படையை சேர்ந்த ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ராணுவ வாகனத்தின் மீது மோதி தன்னைத் தானே வெடிக்கச் செய்ததில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் உள்நாட்டில் வளர்ந்த தலிபான் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்றவை, காவல்துறை இல்லாத எல்லையைக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது’ என்றனர்.
நேற்று முன்தினம் நடந்த மற்றொரு சம்பவத்தில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட் மற்றும் பலுசிஸ்தானின் பிஷின் மாவட்டங்களில் நடந்த என்கவுன்டரில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பயங்கரவாத தடுப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.