வேலூர், நவ.9: வேலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ அனைத்து நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. அதேபோல் ஆட்டோக்களிலும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் பெற்று பாதுகாப்பற்ற முறையில் நிரப்பப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இதையடுத்து டிஆர்ஓ மாலதி உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பறக்கும்படை தாசில்தார் வினாயகமூர்த்தி, காட்பாடி டிஎஸ்ஓ ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை முதல் மாலை வரை குடியாத்தம், காட்பாடி பகுதிகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் டீக்கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட 34 வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களை கைப்பற்றி, காட்பாடி சமையல் காஸ் ஏஜென்சியிடம் ஒப்படைத்தனர். அதேபோல் குடியாத்தம் பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ், நுகர்வோர் ஆய்வாளர் ஜோதிராமலிங்கம் தலைமையிலான குழுவினர் நடத்திய ரெய்டில் பரதராமி, கே.வி.குப்பம், குடியாத்தம் பகுதியில் மொத்தம் 98 காஸ் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டு அங்குள்ள காஸ் ஏஜென்சியில் ஒப்படைக்கப்பட்டன.