புதுடெல்லி: அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களால் 95 கோடி இந்தியர்கள் பலனடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது: அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2015ல் 25 கோடிக்கும் குறைவானவர்களே இந்த திட்டங்களால் பலனடைந்தனர். இன்றைக்கு என்னுடைய அரசின் முனைப்பால் பலனடைபவர்கள் எண்ணிக்கை 95 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பும் தனது அறிக்கையில், இந்தியர்களில் 64 சதவீதம் பேர் ஏதாவது ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்தின் பலனை பெறுகிறார்கள். உலக அளவில் அதிக மக்கள் தொகையை சமூக பாதுகாப்பு திட்டம் சென்றடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது, சமூக நீதியின் இன்றைய நிலை. இந்த சாதனை, வருங்காலம் இன்னும் வளமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. டிராக்கோமா என்ற பாக்டீரியா தொற்றுதான் உலககெங்கும் கண் பார்வையை பறிப்பதில் முக்கிய காரணமாக உள்ளது.
மருத்துவர்களின் தொடர் முயற்சியால், டிராக்கோமா தொற்றை முற்றிலும் அழித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சுவச் பாரத், ஜல் ஜீவன் திட்டங்கள் இந்தியா இந்த நிலையை அடைய உதவி உள்ளன. அமர்நாத் யாத்திரை வரும் 3ம் தேதி தொடங்க உள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரையும் விரைவில் தொடங்குகிறது. இந்த யாத்திரைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த 21ம் தேதி உலக யோகா தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. தினந்தோறும் யோகா செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர முடிகிறது. இந்தியாவின் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி உலகை சுற்றி வருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.