சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரயில்நிலையங்கள், இயக்கப்படும் ரயில்களில் ஆதரவற்றிருந்த 945 குழந்தைகள் கடந்த ஓராண்டில் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, அரக்கோணம் என தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில்நிலையங்களில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை கல்வி, வேலை, மருத்துவ வசதி உள்பட பல்வேறு தேவைகளுக்காக லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் சில பயணிகளின் கவனக் குறைவு காரணமாக பொருட்கள் காணாமல் போவதும், பயணிகளின் அலட்சியத்தை பயன்படுத்தி திருடுவதும் தொடர்கிறது. இதுதொடர்பாக தினமும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது மட்டுமின்றி குழுந்தைகள் காணாமல் போவதும் அடிக்கடி நடக்கிறது. இவர்களில் வீட்டுக்கு சொல்லாமல் ஓடிவரும் குழந்தைகள், பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக விட்டுவிட்டுச் செல்லும் குழுந்தைகள், படிக்க பயந்து, உறவினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஓடி வரும் குழந்தைகள் தனி பிரச்னை. சில நேரங்களில் ரயில்நிலையங்களில் இரவு நேரங்களில் தங்கும் பெற்றோர்களின் கை குழுந்தைகள் கூட காணாமல் போகும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.
இப்படி ரயில்நிலையங்களில் சுற்றித் திரியும் குழந்தைகள் தவறானவர்களின் கைகளில் சிக்கும் போது அவர்களின் வாழ்க்கை திசை மாறி வீணாகிறது. எனவே இப்படி ரயில் நிலையங்களில், ரயில்களில் ஆதரவற்று அல்லல்படும் குழந்தைகளை மீட்க, பாதுகாக்க ரயில் நிலையங்களில் குழந்தைகள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்பதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே போலீசார், குழந்தைகள் நல குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து காணாமல் போன குழந்தைகளை மீட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க உதவி செய்கின்றன. உதாரணமாக, தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பெண் பயணிகள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய, தெற்கு ரயில்வேயுடன் இணைந்து தமிழக ரயில்வே போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் (2022-25) தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் சுமார் 2,300 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் மற்றும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 532 ரயில் நிலையங்கள் உள்ளன. 2,300 குழந்தைகள் மீட்கப்பட்டது மாநிலத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் மும்பை, கொல்கத்தாவில் ஓராண்டில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், தமிழ்நாடு குறைவாகவே உள்ளது.
இதுகுறித்து ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் கூறியதாவது: வறுமையால் வேலை தேடி வருதல், பெற்றோர்களிடம் கோபப்பட்டு வந்து விடுவது, ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற விருப்பம், பருவக்காதல் இப்படி பல காரணங்களால், சிறுவர் சிறுமியர் வீட்டை விட்டு வெளியேறி, ரயிலில் ஏறி சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற ரயில் நிலையம் வருகின்றனர். அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்கும்போது தன்னார்வலர்களால் மீட்கப்படுகின்றனர். இவர்களில் குழந்தை தொழிலாளர்களும் உண்டு. மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நல குழு மூலமாக விசாரிக்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
அந்த வகையில், கடந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் (2024-25) சென்னை, திருச்சி, சேலம் ரயில் நிலையங்களில் சுமார் 945 குழந்தைகள் உதவி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் சுமார் 65% ஆண் குழந்தைகள் மீட்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த ஓராண்டில் மீட்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் குழந்தைகளை கவனத்துடன் கவனித்து, அவர்களை தனியாக விடக்கூடாது. ரயில் நிலையங்களில் காணாமல் போன குழந்தைகளை கண்டால், உடனடியாக ரயில்வே போலீஸ் அல்லது குழந்தைகள் நல குழுக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் காணாமல் போனால், உடனடியாக 1098 என்ற சைல்டுலைன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சவால்கள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்ட குழந்தைகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, மனித கடத்தல், குழந்தை தொழில், அல்லது பிற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதும் முக்கியமானது. இருப்பினும், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இந்த செயல்முறையில் சில சவால்கள் உள்ளன. ரயில் நிலையங்களில் குழந்தைகள் மீட்கப்படும்போது, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறை இணைந்து செயல்படுகின்றன. மீட்கப்பட்ட குழந்தைகள் மனித கடத்தல், குழந்தை தொழில், அல்லது கைவிடப்பட்ட நிலையில் இருக்கலாம். மீட்புக்கு பிறகு குழந்தைகள் நலக் குழுவிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்படுகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில், எழும்பூர் (செப்டம்பர் 19, 2024) மற்றும் பெரம்பூர் (ஜூன் 20, 2024) ரயில் நிலையங்களில் மீட்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
அதேபோல் எழும்பூரில் 12 வயது சிறுவன் குழந்தை தொழிலில் இருந்து மீட்கப்பட்டார். ஆனால் அந்த குழுந்தையின் தாய் கோரிக்கையை ஏற்று எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. மேலும் பெரம்பூரில், 11 குழந்தைகள் மனித கடத்தலில் இருந்து மீட்கப்பட்டனர். அதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இப்படி வழக்கு பதிவு செய்யாததால் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர முடியாமல் ரயில்வே காவல்துறையினர் தவிக்கின்றனர்.
ஆர்பிஎப் மற்றும் ஜிஆர்பி காவல்துறை இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் ஆர்பிஎப் போலீசார் குற்றவாளிகளை விட்டு விடுகின்றனர். எனவே, ஆர்பிஎப் மற்றும் ஜிஆர்பி அதிகாரிகளுக்கு குழந்தைகள் மீட்பு மற்றும் எப்ஐஆர் பதிவு தொடர்பாக தொடர் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும், குழந்தைகள் நலக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும்.