சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக அருண் பதவியேற்ற 2 மாதங்களில் ரவுடிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைந்துள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 90 சதவீத விசாரணை முடிந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உதவி கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய நபர்கள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரிகளில் ரூட் தல பிரச்னையில் ஈடுபடும் மாணவர்கள் சினிமா பாணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
நான் கமிஷனராக பதவியேற்ற 2 மாதத்தில் ரவுடிகள் உட்பட 150 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளேன். பல ரவுடிகள் சென்னையை விட்டு வெளியேறிவிட்டனர். இருந்தாலும் அவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இடையில் முறையாக செயல்படாமல் இருந்ததால், அதை மாற்றி அமைத்துள்ளோம். அதேபோல் உளவுத்துறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை போலீசார் போலீஸ் போல் இருக்க வேண்டும். காவல் நிலையத்தில் பஞ்சாயத்துக்களில் ஈடுபடக் கூடாது. அப்படி யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு குட்காவை அனுப்பும் மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
* கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை
சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்திய கமிஷனர் அருண், அடுத்த நடவடிக்கையாக முற்றிலும் கஞ்சாவை ஒழிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக உதவி கமிஷனர் தலைமையில் பிரத்யேகமாக போதை பொருள் தடுப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரும் நபர்ககளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கமிஷனர் தெரிவித்துள்ளார்.