திருவள்ளூர்: திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை முன்னிட்டு காலை உணவு வழங்கும் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வு தொடங்கும் வரை காலை சிறப்பு வகுப்புகள், சிறப்பு பயிற்சித்தேர்வுகள் காலை 7.30 மணி முதல் 9.30 வரை நடத்தப்படுகிறது. இதனால் காலையில் மாணவ, மாணவிகள் தினமும் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர். இதுபற்றி அறிந்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருமித்த ஆலோசனைபடி ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு சமூக ஆர்வலர்கள் உதவியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் இருந்து நாள்தோறும் காலையில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராஜம்மா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பாகிரதி சாரதி, மகாலட்சுமி, ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பழனி, நிறுவனத் தலைவர் சா.அருணன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.திலீப்ராஜ், துணைத் தலைவர் கோ.கிரி, ஊராட்சி மன்ற உறுப்பினர் கோ.சுபாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தனர். அதன்படி ஒருநாள் இட்லி, அடுத்தநாள் பொங்கல், அதற்கு அடுத்தநாள் கிச்சடி மற்றும் வடை சாம்பார், தேங்காய் சட்னி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் லதா, கலியபெருமாள், கல்பனா, மரிய சுந்தரி, பூங்கோதை, மோகன்ராஜ், கோமதி, சத்துணவு அமைப்பாளர் கவிதா, உதவியாளர் புவனா, பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில் தமிழாசிரியர் கோபிநாத் நன்றி கூறினார்….