உடுமலை, ஜூன் 3: தொடர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 9 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் சீராக தண்ணீர் கொட்டுவதால் இதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஏப்ரல், மே மாதம் திருமூர்த்தி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதலான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வெள்ளமென கொட்டி மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக மழை நீடித்து வந்த நிலையில், நேற்று வெயில் அடிக்க தொடங்கியது. அருவியில் நீர்வரத்து சீரானதால் வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியதை தொடர்ந்து அறநிலைத்துறையினர் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளித்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இல்லை. இருந்த போதும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.