சென்னை: 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு சேவை இல்ல காவலாளியை போலீசார் கைது செய்தனர். தாம்பரம், சானிடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேர்ந்து குரோம்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சேவை இல்லத்தில் சிறுமி தூங்கி எழுந்து வரும்போது மர்ம நபர் ஒருவர் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளார். மாணவி அலறி எதிர்ப்பு காட்டவே அந்த நபர் மாணவியை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஆட்கள் வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். மாணவி மீட்கப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அரசு சேவை மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் சேவை இல்ல காவலாளி மேத்யூ(49)தான் இச்செயலை செய்தது தெரிய வந்தது. மாணவியும் அவரை அடையாளம் காட்டினார். இதனைத்தொடர்ந்து போலீசார் மேத்யூவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி மேத்யூவை போலீசார் சிறையில் அடைத்தனர். மேத்யூ அரசு சேவை இல்லத்தில் உள்ள வேறு ஏதாவது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என மற்ற மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.