சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக நேற்று 5 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக அனேக இடங்களில் குறைந்த பட்சமாக 90 டிகிரி முதல் அதிகபட்சமாக 102 டிகிரி வரையில் நேற்று வெயில் நிலவியது. அதிகபட்சமாக வேலூர், தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கரூர் மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
சென்னை, ஈரோடு, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர் 100 டிகிரி, கடலூர், நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருத்தணி 99 டிகிரி வெயில் நிலவியது. மேலும், தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் வேலூர் பகுதிகளில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெ ப்பநிலை இருந்தது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் வெப்பச்சலன இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்துள்ளது. இருப்பினும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 8ம் தேதி வரை தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும்.