ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 466 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இரவு தனுஷ்கோடி அருகே கடல் எல்லையோரம் 50 படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது மன்னார் கடல் பகுதியில் இருந்து 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த வேர்கோடு பகுதியை சேர்ந்த ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் அண்ணாமலை (55), கல்யாணராமன் (45), செய்யது இப்ராஹிம் (35), முனீஸ்வரன் (39), செல்வம் (29), காந்திவேல் (69), பாலமுருகன் (25), படகு உரிமையாளர் ஜேசு (39) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். பின்னர் படகுடன் 8 மீனவர்களையும் மேல் நடவடிக்கைக்காக மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தடைகாலத்துக்குப் பிறகு மீண்டும் தொழிலைத் துவக்கியுள்ள நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.