நித்திரவிளை: டிக்கோகார்சியா தீவு பகுதியில் விசைப்படகில் மீன் பிடித்த குமரி மீனவர்கள் 8 பேர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். நித்திரவிளை அருகே தூத்தூர் அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்த பால் சர்ஜன்(39). இவருக்கு சொந்தமான பெனடிட்டா என்ற விசைப்படகில் டிசம்பர் மாதம் 29ம் தேதி தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பால் சர்ஜன், தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜெர்சன் (32), அஜின்(41), ஏசுதாசன் (32), லிபரா (63), டார்சன் (29) மற்றும் இருவர், வட மாநிலத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 15 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட டிக்கோகார்சியா தீவு பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடித்துள்ளனர். அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பு படையினர் விசைப்படகுடன் 15பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனால் தூத்தூர் மண்டல மீன்பிடி தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


