அக்ரா: பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் 6, 7ம் தேதி பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்ேகற்க உள்ளார். தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கான 8 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இதில் கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அவர் செல்ல உள்ளார்.
இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, பயணத்தின் முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்றடைந்தார். அதிபர் ஜான் டிராமானி மஹாமாவின் அழைப்பின் பேரில் கானா சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் அக்ரா சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்திற்கு முன்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘உலகளாவிய தெற்கில் கானா இந்தியாவின் மதிப்புமிக்க நாடு மட்டுமின்றி, ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார பங்களிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியா-கானாவின் வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை திறப்பதையும் நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்குகிறேன்’’ என்றார். பிரதமர் மோடியை வரவேற்ற கானா அதிபர் ஜான் டிராமானி அவருக்கு இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இப்பயணத்தில் 2ம் நாளான இன்று பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார். மேலும், கானா நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார். கானாவைத் தொடர்ந்து இன்று இரவு டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை மற்றும் நாளை மறுதினம் அர்ஜென்டினாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதில் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலாவை மோடி சந்தித்து பேசுகிறார். 57 ஆண்டுகளில் இந்திய பிரதமர் அர்ஜென்டினா செல்வது இதுவே முதல்முறை. தொடர்ந்து 6, 7ம் தேதியில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வாவிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாற்றுவார். இம்மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்களையும் மோடி சந்திக்கிறார். அதன்பின் நமீபியா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். அதன்பின் 9ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு டெல்லி திரும்புகிறார். இந்த 5 நாடுகளுக்கான பயணம் உலகளாவிய தெற்கில் இந்தியாவின் பிணைப்பு மற்றும் நட்பை வலுப்படுத்தும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* பிரிக்ஸ் மாநாட்டை தவிர்த்த சீன அதிபர்
பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜின்பிங் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மாவோ நிங்க் நேற்று உறுதிபடுத்தினார். ஜின்பிங்கிற்கு பதிலாக சீன பிரதமர் லி குயாங்க் பங்கேற்க உள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த ஆண்டு ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.