கலசபாக்கம், ஆக. 25: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 87,842 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த சிற்றுண்டிகளை சமைப்பதற்காக 4,605 மகளிர் சுய உதவி குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து விட்டு பள்ளிக்கு வருவதால் சத்து குறைபாடு ஏற்பட்டு மாணவர்கள் உடல் நலனும், கற்றல் திறனும் பாதிக்கிறது. எனவே பள்ளிகளிலேயே முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து முதல் கட்டமாக 2022-2023 கல்வி ஆண்டில் மாநகராட்சி நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது 2023-2024 கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்திடவும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ரத்த சோகை குறைபாட்டினை நீக்கிட மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்திடவும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணி சுமையை குறைத்திட முதல்வரின் காலை உணவு திட்டம் இன்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, வந்தவாசி நகராட்சிகளில் 17 பள்ளிகள், 10 பேரூராட்சிகளில் 47 பள்ளிகள் மற்றும் 17 ஒன்றியங்களில் 1488 பள்ளிகள் உள்பட மொததம் 1522 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 87,842 மாணவ, மாணவிகள் காலை உணவு பெற்று பயன் பெற உள்ளனர். மேலும் காலை உணவு சமைக்கும் பணியில் 4,605 மகளிர் சுய உதவி குழுவினர் ஈடுபடுகின்றனர். அதற்காக ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.
அதற்காக, ஏற்கனவே அவர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், காலை உணவுக்கான சமையல் கூடங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காலை உணவு திட்டம் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்து பள்ளிகளிலும் நேற்று காலை உணவு தயார் செய்யப்பட்டு பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்தது. அதனை, அதிகாரிகள் நேரில் பார்வைிட்டு ஆய்வு செய்தனர். கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஏற்கனவே காலை உணவுக்கான சமையல் கூடங்களை திறந்து வைத்து தயார் படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கான சமையல் கூடத்தை எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் திறந்து வைத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து குறித்து பல்வேறு கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார். கலசபாக்கம் துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் 174 மையங்களில் 9,297 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் இன்று முதல் பயன் பெறுகின்றனர். இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் இனாம் காரியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம் பார்வையிட்டார். மேலும் சமையல் பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுவினரை அழைத்து அவர்களிடம் காலை உணவு சுகாதார முறையிலும் சுவையாகவும், சூடாகவும் மாணவர்களுக்கு பரிமாற வேண்டும், மேலும் சமையலறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.பி அண்ணாமலை, பிடிஓக்கள் பாபு, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பா.ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய பொறியாளர் பிரசன்னா, துணை பிடிஓ பி.கே முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.