மதுரை, ஜூன் 18: கடந்த 2022ம் ஆண்டு ஆந்திராவிலிருந்து மதுரைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ஒத்தக்கடை அருகே சரக்கு வேனை மடக்கி பிடித்து சோதனை செய்த போது வேனில் 810 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்திய டி.மேட்டுபட்டி பிரகாஷ்(25), அவனியாபுரம் நிஷாந்தன் (31), உசிலம்பட்டி முருகன் (43), நாகபட்டினத்தை சேர்ந்த குணசேகரன் (36) ஆகிய 4 பேரையும் கைது செய்து, 810 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஸ்வரன் ஆஜரானார். இந்த வழக்கில் நீதிபதி எம்.செங்கமலச் செல்வன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் கஞ்சா கடத்திய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறையும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.