சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு 1970, 1980, 2000, 2005 மற்றும் 2013ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்துள்ளது. கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரியனின் கதிர்கள் காலை நேரத்தில் நந்தி பகவான் வழியாக நேரடியாக சிவலிங்கத்தின் மேல் விழுந்துள்ளது. தற்பொழுது கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை. இதை தொல்லியல் துறையினர் மூலம் ஆய்வு செய்தபோது கோயில் தரைதளத்தில் இருந்து 5 அடி ஆழப்பள்ளத்தில் உள்ள காரணத்தால் சூரிய ஒளி எதுவும் தற்போது சிவலிங்கத்தின் மீது விழவில்லை எனவும், கோயிலை உயர்த்தி வைப்பது ஒன்று மட்டுமே இதற்கு உரிய வழி என்றும் தொல்லியல் துறை சார்பில் ஆய்வறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முறையான அனுமதி பெற்று கோயிலுக்குள் மீண்டும் சூரிய ஒளி நுழைந்து சிவனின் மேல் படும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜாக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோயிலை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, உபயதாரர் நிதியாக ஒரு கோடியே 43 லட்ச ரூபாயும், கோயில் நிதியாக 50 லட்சம் ரூபாயும் என மொத்தம் ஒரு கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாலாலயம் எனப்படும் ஆரம்பப் பணிகள் நேற்று காலை தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டிசேகர் ஆகியோர் கலந்துகொண்டு பாலாலயம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட இணை ஆணையர் முல்லை, கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், ஆய்வாளர் யுவராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.