சென்னை: தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறைக்கு அனுமதி கோரி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்க கடைகளுக்கு படையெடுத்துள்ளனர். வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனை செய்ய விரும்புபவர்கள் தீயணைபுத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
அந்த வகையில் கடந்த 10 நாட்களாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் அந்தந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர்.
பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடைகள் அமைக்க வேண்டும். கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்பது போன்ற 30 விதிகள் தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த 30 விதிகளை முறையாக பின்பற்றி பட்டாசு கடைகள் அமைக்க முன் வரும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருமண மண்டபம், அடுக்குமாடி குடியிருப்பு, பெட்ரோல் மற்றும் காஸ் நிரப்பும் நிலையங்கள், பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் மட்டும் 800 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறைக்கு வந்தது. அதில் வீரர்கள் நேரில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் படி 500 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நேற்று முன்தினம் வரை ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதன்படி தற்போது கடைகள் அமைக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 6,563 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓரிரு நாட்களில் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.