சோழவந்தான், மே 21: மதுரை எஸ்.பி.அரவிந்த் உத்தரவின்படி, சமய நல்லூர் டி.எஸ்.பி.ஆனந்தராஜ் ஆலோசனையின் பேரில் போதைப் பொருள்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சோழவந்தான் பேருந்து நிலையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார்,எஸ்.ஐக்கள் முருகேசன், இரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சாக்கு மூட்டையுடன் இருந்த வாலிபரை பிடித்து சோதனையிட்ட போது, 8 கிலோ கஞ்சா இருந்துள்ளது.
விசாரணையில் பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் மனோஜ் பிரபு (33) என தெரிய வந்தது.மேலும் லாரி டிரைவரான இவர் ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று வரும் போது கஞ்சா வாங்கி வந்து, விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து சோழவந்தான் போலீசார் மனோஜ் குமாரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.