திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகள் மற்றும் சாலியார் ஆற்றில் நேற்று 7வது நாளாக உடல்களை தேடும் பணி நடந்து. நிலச்சரிவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும், சாலியார் ஆற்றில் இருந்தும் தினமும் உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. ராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1200க்கும் மேற்பட்டோர் உடல்களைத் தேடி வருகின்றனர்.
இது தவிர சமூக சேவகர்கள் 1500 பேரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலியார் ஆற்றில் இருந்து தினமும் உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருவதால் நேற்று அங்கும் உடல்களை தேடும் பணி நடைபெற்றது. சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்களை பயன்படுத்தி உடல்களை தேடி வருகின்றனர். இதற்கு கேரள போலீசின் ட்ரோன்களும், ராணுவத்தின் 2 ரேடார்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று 4 உடல்களும் ஒரு உடல் பாகமும் கண்டு எடுக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவால் வீடுகள் இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமாகி விட்டதால் எங்கெங்கு வீடுகள் இருந்தன என்பது குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசித்தவர்களை வரவழைத்து அவர்கள் மூலம் வீடுகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு உடல்களை தேடி வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதால் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. பலியானவர்களில் 74 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை.
நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் அடையாளம் காணப்படாத உடல்கள் மற்றும் உடல் பாகங்களை சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அருகிலுள்ள புத்துமலை என்ற பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இங்கு 8 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று 29 உடல்களும், 158 உடல் பாகங்களும் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன. கை, கால்கள் என்று தனித்தனியாக கிடைத்த உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி உடல்களாக பாவித்து எல்லா மரியாதையும் கொடுத்து அடக்கப்பட்டன. அப்போது போலீஸ் மரியாதையும் அளிக்கப்பட்டது.
* ‘சகதியில் சிக்கியவரை மீட்க கயிறு வாங்கச் சென்று திரும்புவதற்குள் ஒரு கிராமமே காலியாகி விட்டது’
கல்பெட்டா-சூரல்மலை-முண்டக்கை இடையே ஒரு கேரள அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இந்த பஸ் சூரல்மலைக்கு இரண்டு முறையும், முண்டக்கைக்கு மூன்று முறையும் இயக்கப்படுகிறது.இந்த பஸ்சின் கண்டக்டரான முகம்மது குஞ்சி மற்றும் டிரைவரான சஜித் ஆகிய இருவரும் தான் நிலச்சரிவின் பயங்கரத்தை முதலில் பார்த்தவர்கள். இதுகுறித்து கண்டக்டர் முகம்மது குஞ்சி கூறியது: கல்பெட்டாவிலிருந்து சூரல்மலைக்கு தினமும் இரவு 8.30 மணிக்கு கடைசி பஸ் புறப்படும்.கடந்த 29ம் தேதி நானும் சஜித்தும் தான் பணியில் இருந்தோம். அன்று வழக்கம்போல இரவு 9.45 மணியளவில் சூரல்மலையை அடைந்ததோம். பஸ்சை சூரல்மலையிலுள்ள ஒரு கிளினிக் அருகே நிறுத்திவிட்டு அந்த கிளினிக்கை ஒட்டியுள்ள ஒரு அறையில் தான் நாங்கள் தங்குவோம்.
அன்றும் வழக்கம் போல பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் அறைக்கு சென்றோம். மறுநாள் (30ம் தேதி) அதிகாலையில் எழுந்து வெளியேவந்து பார்த்த போது அறைக்கு வெளியே வெள்ளம் சூழ்ந்திருந்தது. அப்போது அது நிலச்சரிவின் பாதிப்பு தான் என்பதை நான் உணரவில்லை. சாதாரணமான மழை வெள்ளமாகத் தான் இருக்கும் என்று கருதினேன். சிறிது தூரம் சென்ற போது ஒருவர் நெஞ்சுவரை சகதியில் மூடிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். என்னால் அவருக்கு அருகே செல்ல முடியவில்லை. அவரைக் காப்பாற்றுவதற்காக கயிறு வாங்குவதற்காக உடனடியாக அங்குள்ள கடைக்கு ஓடினேன்.திரும்பி வந்து பார்ப்பதற்குள் அந்த கிராமமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. காட்டாறு 50 மீட்டர் தள்ளி வந்திருந்தால் நாங்களும் நிலச்சரிவில் சிக்கி பலியாகி இருப்போம். மாலை ஆற்றில் சற்று தண்ணீர் குறைந்த போது நாங்கள் இருவரும் நீந்தி மறுகரை சேர்ந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
* ஒரு வாரத்திற்குப் பிறகு புறப்பட்ட அரசு பஸ்
நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதிக்கு கல்பெட்டாவில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடைசி பஸ் இரவில் முண்டக்கையில் நிறுத்தப்படும். மறுநாள் காலை அங்கிருந்து பஸ் கல்பெட்டாவுக்கு புறப்பட்டு செல்லும். நிலச்சரிவு ஏற்பட்டதற்கு முந்தைய நாளான 29ம் தேதி இரவு இந்த பஸ் வழக்கம் போல முண்டக்கைக்கு வந்தது. ஆனால் நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை இடையே இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த பஸ்சால் பின்னர் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ராணுவத்தினர் அங்கு தற்காலிக இரும்புப் பாலம் அமைத்தனர். இதையடுத்து அந்தப் பாலம் வழியாக நேற்று முன்தினம் இந்த பஸ் கல்பெட்டாவுக்கு புறப்பட்டு சென்றது. நேற்று முதல் வழக்கம் போல முண்டகைக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
* பள்ளி, கல்லூரிகள் திறப்பு
கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. குறிப்பாக வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு உள்பட பல மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பெரும்பாலான நாட்கள் பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுக்கு முன்பு ஒரு வாரம் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டதால் கடந்த வாரமும் இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் வயநாடு மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் நிவாரண முகாம்கள் செயல்படும் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல செயல்படத் தொடங்கின.