மும்பை: கோரேகாவில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 44 பேர் காயம் அடைந்துள்ளனர். மும்பை கோரேகாவ் மேற்கில், ஆசாத் மைதான் அருகில் ஜெய் பவானி என்ற 7 மாடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. நேற்று அதிகாலை 3.05 மணிக்கு இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையான முயற்சிக்கு பின்னர் காலை 6.45 மணிக்கு தீயை அனைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 51 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இவர்களில் 3 பெண்கள், 2 சிறுமிகள் உட்பட 7 பேர் இறந்து விட்டனர். 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கட்டத்தின் கீழே பார்க்கிங்கில் இருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசமாகின.