சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஊழல் வழக்கில் சுமார் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வின்சென்ட் ஹூங் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
முதல் கட்ட விசாரணையில் ஈஸ்வரன், பதவிக்காலத்தில் பரிசு பொருட்களை பெற்றது, நீதிக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவருக்கு 6 முதல் 7 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.