புதுடெல்லி: தனிநபர்கள் 2022-23ம் நிதியாண்டிற்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டிய தொழில் நிறுவனங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி கடந்த அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி வரை அனைத்து மதிப்பீட்டு ஆண்டிற்கும் சேர்த்து நடப்பாண்டில் 7.85 கோடி பேர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இது வருமான வரி ரிட்டன் தாக்கலில் புதிய சாதனை என ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டில் மொத்தம் 7.78 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர்.