பீஜிங்: உலகெங்கும் உள்ள இந்தியர்கள் 78வது சுதந்திரதினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய தூதரக வளாகத்தில் சுதந்திரதின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சீனாவுக்கான இந்திய தூதரர் பிரதீப் குமார் ராவத் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய சுதந்திரதின உரையின் சில பகுதிகளை வாசித்தார். இதில் ஏராளமான புலம்பெயர் இந்தியர்கள், தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா ஹவுசில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான புலம்பெயர் இந்தியர்கள் கலந்து கொண்டு தேசபக்தி பாடல்களை பாடினர். இலங்கை கடற்படை இசைக்குழுவினர் வந்தே மாதரம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை இசைத்தனர். மேலும் அசாமில் இருந்து வந்திருந்த இந்திய கலாச்சார உறவுகளுக்கான குழுவின் பிஹூ நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வங்கதேச தூதரக வளாகத்தில் நடந்த சுதந்திரதின கொண்டாட்டத்தில் வங்கதேசத்துக்கான இந்திய தூதரர் பிரனய் வர்மா கலந்து கொண்டு தேசியகொடி ஏற்றி வைத்தார். மேலும் குடியரசு தலைவர் முர்மு ஆற்றிய உரையின் சில பகுதிகளை வாசித்தார். மாலத்தீவில் இந்திய தூதரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாலத்தீவுகளுக்கான இந்திய தூதர் முனு மஹாவர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, இந்திய குடியரசு தலைவர் முர்மு ஆற்றிய உரையை வாசித்தார்.
சிங்கப்பூர் தூதரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தூதரக உயரதிகாரி ஷில்பக் அம்புலே தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய பள்ளி மாணவ, மாணவிகள் தேசபக்தி பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் கோபால் பாக்லே மூவர்ண கொடியை ஏற்றி வைத் தார். இங்குள்ள ஏடிசிஎஸ் தமிழ் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் தமிழ் மொழியில் இந்திய தேசபக்தி பாடல்களை பாடினர். தொடர்ந்து ஐஸ்வர்யா, ஆனந்த் ஆகிய மாணவர்கள் பங்கேற்ற கீ போர்ட் மற்றும் கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதேபோல் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் சுதந்திரதினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.