ஊட்டி, ஆக. 15: நீலகிாி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டியில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிாி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி அரசு கலைக் கல்லூாி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், போலீசார் ஊர் காவல்படையினர், என்சிசி, என்எஸ்எஸ், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கிறார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட எஸ்பி நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கௌசிக் உட்பட பலர் பங்கேற்கின்றனர். சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கடந்த சில நாட்களாக காவல்துறையினர், தேசிய மாணவர் படை மாணவர்கள், ஊர்காவல் படையினர் உள்ளிட்டவர்கள் காலை, மாலை என தீவிர அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நேற்று இறுதி கட்ட ஒத்திகை நடந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு கலை கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.