திருப்பூர், ஆக. 15: 78வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அரசு மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழா நடைபெறும் மேடைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கல்லூரியின் நுழைவு வாயிலில் வெடிகுண்டு பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் வரும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட அனைவரும் பலத்த சோதனைக்குப்பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சிக்கு வருகின்ற மாணவ, மாணவிகள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்ட அனைவரும் அமர்வதற்கு தனித்தனியே இட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.