சங்கரன்கோவில் : 77வது சுதந்திர தினத்தையொட்டி சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் ஒன்றிணைந்து 760 தேசிய கொடிகளை கையில் ஏந்தி வந்தே மாதரம் பாடலைப்பாடி ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெகார்டில் இடம் பிடித்து உலக சாதனை படைத்தனர்.சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளிச் செயலாளர் ராஜேஷ் கண்ணா தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் பழனிசெல்வம் வரவேற்றார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இதைத்தொடர்ந்து 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் 760 பேர் ஒருங்கிணைந்து 760 தேசிய கொடிகளைக்கையில் ஏந்தி வந்தே மாதரம் பாடலைப்பாடி ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெகார்டில் இடம் பிடித்து உலக சாதனை நிகழ்த்தினர். விழாவில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், சக மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உலக சாதனையை கண்டு வியந்தனர்.