கூடலூர், ஜூன் 20: இதுவரை 77 முறை ரத்த தானம் செய்த கூடலூர் தன்னார்வலருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விருது வழங்கப்பட்டது. சர்வதேச குருதி கொடையாளர்கள் தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக்குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் 77 முறை ரத்த தானம் செய்ததற்காக நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட லைப் லைன் ரத்த தான குழுவின் தலைவர் ஹம்சாவுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கி கௌரவித்தார். மேலும் ஊட்டி குன்னூர் பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட குருதிக்கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.